நிழல் தரும் நண்பன்: இன்று ‘உலக குடை தினம்’!

நிழல் தரும் நண்பன்: இன்று ‘உலக குடை தினம்’!

ழை பெய்தால் சட்டென்று நம் நினைவுக்கு வருவது ‘குடை’ தான். வெயில் வாட்டினாலும் நம்மை வாஞ்சையோடு காப்பதும் குடைதான்.இந்தக் குடை இருக்கிறதே. அது பெண்களுக்கான பொருளாக சில காலம் பார்க்கப்பட்டது. மழைக்கால தேவையாக சிலகாலம், பின் வெயிலுக்கான பாதுகாப்பாக சில நேரம், அல்லது அரசரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக, இன்னும் கோல்ஃப் மைதானத்தின் விளையாட்டுப்பொருளாக, நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக, ஏழ்மையின் சின்னமாக… என்றெல்லாம் பார்க்கப்பட்ட, பார்க்கப்படுகிற குடையின் நிலை, காலத்திற்கு ஏற்ப, நாகரீகத்திற்கு ஏற்ப, மாறும் விருப்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது.  பிப்ரவரி 10-ஆம் தேதியான இன்று, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ‘உலக குடை தினமாக’ (Umbrella Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு விதவிதமான கலைநயமிக்க குடைகளைப் பரிசளித்து மகிழ்வார்கள்.

குடை: பெயருக்குப் பின்னே ஒரு குட்டி ஹிஸ்டரி!

ஆங்கிலத்தில் ‘அம்பரெல்லா’ (Umbrella) என்று அழைக்கப்படும் இந்தச் சொல், லத்தீன் மொழியின் ‘அம்பரா’ (Umbra) என்ற சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு ‘நிழல்’ என்று பொருள்.

கிரேக்கப் புராணங்களில் ஒரு சுவாரசியமான கதை உண்டு. ஒரு வீரன் தன் காதலி மழையில் நனையாமல் இருக்க, ஒரு சிறு மரத்தையே பிடுங்கி அவளுக்குக் குடையாகப் பிடித்தானாம். இதுதான் குடையின் ஆதி வடிவம் என்கிறார்கள். அதேபோல், பண்டைய ரோமானியப் பெண்கள் தங்கள் கூந்தல் அலங்காரம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, சிறிய ரகக் குடைகளைத் தங்கள் சேடிகள் மூலம் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

அந்தஸ்தின் அடையாளம்!

பண்டைய காலத்தில் குடை என்பது வெறும் மழைக்காலப் பொருள் அல்ல; அது ஒரு கௌரவச் சின்னம்.

  • இந்தியா, சீனா, பர்மா: போன்ற நாடுகளில் அரசர்களும், உயர்குடி மக்களும் மட்டுமே பட்டுத் துணியால் ஆன குடைகளைப் பயன்படுத்தினர். சாதாரண மக்கள் பனை ஓலையால் ஆன குடைகளையே ஏந்தினர்.

  • டெல்லி சுல்தான்கள்: 1335-இல் இந்தியா வந்த பயணிகள், டெல்லி சுல்தான் குதிரையில் செல்லும்போதெல்லாம் அவருக்குப் பின்னால் வண்ணமயமான குடைகள் பிடிக்கப்பட்டதைக் கண்டு வியந்து எழுதியுள்ளனர்.

  • தெய்வீகக் குடை: இந்து தர்மத்தில் குடை என்பது இறைவனுக்குரிய புனிதப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் திருவிழாக்களில் இறைவனுக்கு முன்னே குடை பிடித்துச் செல்வதைப் பார்க்கிறோம். குறிப்பாக, ‘திருப்பதி குடை’ என்றாலே அதன் மகிமையே தனி!

ஏழைகளின் சின்னமா? – லண்டன் கலாட்டா!

குடையைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோன்ஸ் ஹான்ஸ் என்பவரையே சேரும். ஆரம்பத்தில் பிரான்சில் திமிங்கல எலும்புகளைக் கொண்டு தோலால் செய்யப்பட்ட குடைகள் இருந்தன. அவை பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்குமாம்!

18-ஆம் நூற்றாண்டு லண்டனில், மழை பெய்யும்போது உணவு விடுதிகளில் குடைகளை வாடகைக்குக் கொடுத்தார்கள். ஆனால், அப்போது குடை பிடித்தால் அவர்களைக் கேலி செய்தார்கள். காரணம், கார் அல்லது வண்டி இல்லாமல் மழையில் நடந்து செல்லும் ஏழைகளின் அடையாளமாகவே குடை பார்க்கப்பட்டது. பின்னாளில்தான் இது எல்லோருடைய கைகளுக்கும் மாறியது.

மாற்றமும் வளர்ச்சியும்

  • 1850-க்கு பிறகு: இரும்பு கம்பிகள் மற்றும் கருப்புத் துணியால் ஆன நவீன குடைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

  • 1910-க்கு பிறகு: பட்டு மற்றும் ரேயான் துணிகள் பயன்படுத்தப்பட்டன.

  • இன்று: நைலான், பிளாஸ்டிக் எனப் பல ரகங்களில் குடைகள் வந்துவிட்டன. கைப்பையில் அடங்கும் வகையில் மூன்றாக, நான்காக மடிக்கும் குடைகள், தலையில் தொப்பி போல அணிந்துகொள்ளும் குடைகள் எனத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

வெயிலோ, மழையோ… எப்போதும் நம் தலைக்கு மேலே நிழல் தந்து காக்கும் குடையின் சிறப்பைப் போற்றும் இந்த நாளில், நம்மிடம் இருக்கும் அந்த ‘நிழல் நண்பனை’ ஒருமுறை நன்றியுடன் பார்ப்போம்!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!