சம்பளம் வாங்கும் இயந்திரங்களா நாம்? – இன்ஸ்டா விவாதம்!
வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறுவது, கைநிறைய சம்பளம், ஆடம்பரமான வாழ்க்கை முறை – இவை கிடைத்துவிட்டால் ஒருவன் மனநிறைவோடு வாழ்ந்துவிட முடியுமா? “நிச்சயமாக இல்லை” என்கிறது சமூக வலைதளங்களில் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு.
பிஷிஷ்ட் (Bishisht) என்ற பயனர், தனது ஏழு ஆண்டுகால பணி அனுபவத்தில் நான்கு வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, தனக்குள் ஏற்பட்ட ‘வெறுமை’ குறித்து பதிவிட்ட இரண்டு வீடியோக்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

பணம் தரும் வசதி… ஆனால் அர்த்தம்?
சமூகத்தின் அளவுகோல்படி மிகப்பெரிய சம்பள உயர்வு, விலையுயர்ந்த வீடு, சொகுசான விடுமுறைப் பயணங்கள் என அனைத்தையும் அடைந்த பிறகும், தனக்குள் இருந்த அந்த ஒருவிதமான வெறுமை நீங்கவில்லை என்கிறார் பிஷிஷ்ட். “பணம் ஒருபோதும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தராது. அது தேட வேண்டிய கேள்விகளைத் தள்ளிப்போட உங்களுக்குக் கூடுதல் நேரத்தை மட்டுமே வாங்கித் தரும்” என்ற அவரது வரிகள் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன.
அதிக சம்பளம் வாங்கும் பல இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வரும்போது அதே மன அழுத்தத்தையும், வெறுமையையும் உணர்வதைத் தான் அவரும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வு எடுப்பதிலும் ஒரு பதற்றம்!
அவரது இரண்டாவது பதிவில், பலரும் எதிர்கொள்ளும் ஒரு விசித்திரமான சிக்கலைப் பற்றிப் பேசியுள்ளார். அது: ‘உற்பத்தித்திறன் சார்ந்த பதற்றம்’ (Productivity Anxiety).
ஓய்வு நேரத்திலும் எதையாவது பயனுள்ளதாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
-
ஒரு படம் பார்க்கும்போது கூட “நேரம் வீணாகிறதோ?” என்ற எண்ணம்.
-
நடைப்பயிற்சியின் போது கூட ஒரு ‘பாட்காஸ்ட்’ (Podcast) கேட்டே தீர வேண்டும் என்ற கட்டாயம்.
-
விளையாடும் போது கூட முடிக்கப்படாத வேலைகளைப் பற்றிய குற்ற உணர்வு.
இப்படி ஓய்வு நேரத்தைக்கூட நாம் அனுபவிக்க விடாமல் ஒருவித பதற்றம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது.
ஓய்வு என்பது ‘சம்பாதிக்க’ வேண்டியது அல்ல!
சிறுவயது முதலே வீட்டு வேலைகளை முடித்தால்தான் விளையாட அனுமதி என்பது போன்ற பழக்கங்கள், வளர்ந்த பிறகும் நம்மைத் துரத்துகின்றன. ஓய்வு என்பது ஏதோ கஷ்டப்பட்டு உழைத்துவிட்டுப் பெற வேண்டிய பரிசு (Reward) அல்ல, அது உடலுக்கும் மனதுக்கும் தேவையான அடிப்படை உரிமை என்பதை அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
“நீங்கள் ஓய்வைச் சம்பாதிக்கத் தேவையில்லை. நீங்கள் களைப்பாக இருப்பதாலேயே அதற்குத் தகுதியானவர் ஆகிறீர்கள்!”
இந்த வைரல் பதிவு, இன்றைய கார்ப்பரேட் உலகில் லட்சியங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது: “வெற்றி என்பது வெளி உலகில் தெரிவதா அல்லது உள்மனதில் தோன்றும் அமைதியா?”
ரமாபிரபா


