மே தினம்: இது கொண்டாட்டமல்ல;ரத்தத்தால் எழுதப்பட்ட புரட்சி வரலாறு!

மே தினம்: இது கொண்டாட்டமல்ல;ரத்தத்தால் எழுதப்பட்ட புரட்சி வரலாறு!

லகெங்கிலும் இன்று உழைப்பாளர் தினம் விடுமுறையாகவும், விழாவாகவும் கொண்டாடப்படலாம். ஆனால், இந்த எட்டு மணி நேர வேலை உரிமை என்பது சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. அது சிகாகோ நகர வீதிகளில் சிந்தப்பட்ட தொழிலாளர்களின் ரத்தத்தாலும், தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தியாகிகளின் வீரத்தாலும் ஈட்டப்பட்டது.

போராட்டத்தின் தொடக்கப்புள்ளி

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி. அமெரிக்காவின் சிகாகோ நகரில் “எட்டு மணி நேர வேலை” கேட்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்மிக் ஹார்வெஸ்டர் நிறுவனத்தின் முன்னால் அமைதியாக உரையாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறையில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்; பலர் படுகாயமடைந்தனர்.

ஹே மார்கெட் சதி மற்றும் கலவரம்

இந்த அடக்குமுறையைக் கண்டித்து அதே நாள் இரவு ஹே மார்கெட் சதுக்கத்தில் கண்டனக் கூட்டம் கூடியது. மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவில், தோழர் சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, 180-க்கும் மேற்பட்ட காவலர்கள் கூட்டத்தைச் சூழ்ந்து கலைந்து போகச் சொன்னார்கள். அப்போது திடீரென காவலர்கள் மீது வீசப்பட்ட ஒரு மர்மக் கையெறி குண்டு, வரலாற்றின் போக்கையே மாற்றியது. அந்த வெடிவிபத்தில் ஒரு காவலர் பலியானார். பதிலுக்கு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எண்ணற்ற தொழிலாளர்கள் மாண்டனர்.

நீதிமன்றத்தை மேடையாக்கிய தியாகிகள்

இந்தச் சம்பவத்தைச் சாக்காக வைத்து தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசுத் தரப்பு அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தியது. ஆனால், அந்தத் தியாகிகள் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை; மாறாக, நீதிமன்றத்தையே தங்கள் கொள்கை விளக்க மேடையாக மாற்றிக்கொண்டனர்.

  • தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ்: “ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் என் பின்னால் அணிதிரண்டதே என் குற்றம் என அரசு வாதிடுகிறது. அதுவே என் தற்காப்பு வாதம்” என முழங்கினார்.

  • தோழர் ஆல்பர்ட் பார்சன்ஸ்: “மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல, தொழிலாளர்கள் தியாகத்தின் மூலம் தலைவர்களை அறிவார்கள். எங்கள் மரண தண்டனை உலகெங்கும் தீப்பொறியாகப் பரவும்” என்றார்.

  • தோழர் சாமுவேல் பீல்டன்: “சோசலிசம் என்பது பிறர் சொத்தைப் பறிப்பதல்ல; ஒருவருடைய சொத்தை இன்னொருவர் பறிப்பதைத் தடுத்து நிறுத்தும் அமைப்பு” என விளக்கமளித்தார்.

  • தோழர் மைக்கேல் ஸ்வாப்: “எங்கள் நோக்கம் கலகம் செய்வதல்ல, சோசலிசத்தை அடைவதே” எனப் பிரகடனப்படுத்தினார்.

மரணத்தைத் தழுவிய மாவீரர்கள்

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 1887 நவம்பர் 11-ம் தேதி அன்று:

  1. ஆல்பர்ட் பார்சன்ஸ்

  2. ஆகஸ்டு ஸ்பைஸ்

  3. ஜார்ஜ் ஏங்கல்

  4. அடால்ப் பிட்சர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் சிறையிலேயே உயிரிழந்தார். ஆஸ்கர் நீபிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஸ்வார்ப் மற்றும் பீல்டனின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

முடிவிலி: மே தினத்தின் செய்தி

முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்த இந்தத் தியாகிகளின் இறுதி மூச்சு, உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் மகா சக்தியாக மாறியது. இன்று நாம் அனுபவிக்கும் ‘எட்டு மணி நேர வேலை’ என்பது வெறும் சட்டம் மட்டுமல்ல; அது சிகாகோ தியாகிகளின் ஈகத்தால் கிடைத்த உரிமைப் பரிசு.

“அவர்களின் மரணமே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணி!”

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts