’பாபா பிளாக் ஷீப்’ – விமர்சனம்!
சில டைப் படங்களை ஐமேக்ஸ் தியேட்டரில் பார்க்கவே பிடிக்கும்.. சில வகைப் படங்களை சினிமா ஸ்கோப்பில் காண விரும்பும்.. சில சினிமாக்களை த்ரி டி எஃபெக்டில் பார்க்க ஆசை வரும்.. இதை எல்லாம் தாண்டி சில சினிமாக்களை ஓடிடியில் பார்க்க மட்டுமே பிடிக்கும்.. ஆனால் கோலிவுட்டில் முதல் முறையாக யூ ட்யூப்பில் கூட பார்க்க தகுதியில்லாத ஒரு காணொளித் தொகுப்பை பாபா பிளாக்ஷிப் என்ற பெயரில் சினிமா என்ற பெயரில் வழங்கி கடுப்பேற்றி விட்டார்கள்..!

கதை என்னவென்றால் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த ஆண்கள் பள்ளியும், இரு பாலர் படிக்கும் பள்ளியும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒன்றிணைக்கப்படுகின்றன. இதனால் வெகு நாட்களாக எலியும், பூனையுமாக அடித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இரண்டு கேங் மாணவர்கள் ஒரே வகுப்பில் படிக்க கூட வேண்டிய சூழல் வருகிறது. அதனால் இன்னுமே அதிகமாக முட்டி மோதிக்கொள்கின்றனர்.இச்சூழலில் அப்பள்ளி மாணவி ஒருவர் கையில் கடிதமொன்று கிடைக்கிறது. அந்த கடிதத்தை எழுதியது யார்?அ ந்த தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா? இது போன்ற சூசைட் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு? என்பதை தன் பாணியில் டைரக்டர் ராஜ் மோகன் சொல்ல முயன்றிருப்பதே ‘பாபா ப்ளாக் ஷீப்’.
கேரக்டர்களைப் பொறுத்தவரை நம் சீட்டுக்கு அருகில் இருந்த ஒரு ஜீவன் சொன்னதே போதுமென்று நினைக்கிறோம் : 7ம் வகுப்பு ஸ்கூல் போற பசங்களுக்கு பெற்றோர் மாதிரி இருக்கிறவங்க இதுலே+2 மாணவர்களா?..🙄 ப்ச்.. அதிலும் இந்த மூஞ்சுகளுக்குள் காதல் காட்சிகள், சென்டிமென்ட் காட்சிகளில் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது. பள்ளி மாணவியாக வரும் அம்மு அபிராமி பின்னணி கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டாலும் கொஞ்சம் கூட எடுபடவில்லை. மேலும் சிங்கிள் டயலாக் கூட பேசாத சுரேஷ் சக்ரவர்த்தி, காமெடி என்ற பெயரில் கடுமேற்றிய மதுரை முத்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஜி.பி.முத்து என எந்தக் கேரக்டரும் எடுபடவில்லை.
இப்போதைய சமூகத்தில் அதிகரித்து வரும் மாணவ, மாணவியர்களின் தற்கொலை, மன அழுத்தப் பிரச்சினைகள், பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு, இணைய போதைக்கு ஆளாகும் குழந்தைகள் ஆகியவை பற்றி பேச ஆசைப்பட்ட டைரக்டர் தமிழ் சினிமா மீதே வெறுப்பேறும் அளவுக்கு ஒரு காணொளித் தொகுப்பிது
முன்னரே சொன்னது போல் யூ ட்யூப்பில் வந்தால் கூட ஓசியிலும் பார்க்க சகிக்க முடியாத படமிது!


