மருத்துவத்தில் முதலிடம்; நோய்களில் அபாய இடம்: தமிழ்நாட்டிற்கு NFHS-6 தரும் அதிர்ச்சி!

மருத்துவத்தில் முதலிடம்; நோய்களில் அபாய இடம்: தமிழ்நாட்டிற்கு NFHS-6 தரும் அதிர்ச்சி!

ந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பில் எப்போதுமே முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, பிரசவ காலப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதார அணுகுமுறையில் (Institutional deliveries at 99.7%) தொடர்ந்து தேசிய அளவில் முதன்மையான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், அண்மையில் வெளியாகியுள்ள தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) இன் புதிய தரவுகள் தமிழ்நாட்டிற்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன. மாநிலத்தில் மருத்துவ வசதிகள் திருப்திகரமாக இருந்தாலும், காப்பீட்டுத் திட்டங்களின் வீழ்ச்சி, சிசேரியன் பிரசவங்களின் அதீத உயர்வு, மற்றும் நீரிழிவு, உடல் பருமன் போன்ற வாழ்வியல் முற சார்ந்த நோய்களின் (Lifestyle Diseases) அச்சுறுத்தல் மிக வேகமாக அதிகரித்து வருவதை  ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

காப்பீட்டு வரம்பில் சரிவு: கைகொடுக்காத மருத்துவப் பாதுகாப்பு வலை

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மருத்துவச் செலவைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களின் பரவலாக்கம் கடந்த கணக்கெடுப்பை விடத் தற்போது சரிவைச் சந்தித்துள்ளது.

  • கடந்த NFHS-5 (2019-21) கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 66.5 சதவீதக் குடும்பங்கள் மருத்துவக் காப்பீடு அல்லது நிதி உதவித் திட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டிருந்தன.

  • ஆனால், தற்போதைய NFHS-6 தரவுகளின்படி, இந்த அளவு 61.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

  • இதன் விளைவாக, தமிழ்நாட்டில் இன்றும் கிட்டத்தட்ட 39 சதவீதக் குடும்பங்கள் (அதாவது 10-ல் 4 வீடுகள்) எந்தவொரு மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பும் இல்லாமல் பொதுவெளியில் தவிக்கின்றன. இது பொதுமக்களின் கைகளில் இருந்து செலவிடப்படும் மருத்துவச் செலவை (Out-of-pocket expenditure) அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரிழிவு மற்றும் உடல் பருமன்: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் இரட்டை அரக்கர்கள்

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களும் தமிழ்நாட்டு மக்களிடையே தொற்றாத வாழ்வியல் நோய்களை (Non-communicable diseases) விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளன.

1. எகிறும் நீரிழிவு நோய் (Diabetes)

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரிடையே இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பு அல்லது அதற்கான மருந்து உட்கொள்பவர்களின் விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்துள்ளது.

  • பெண்கள்: பெண்களிடையே நீரிழிவு பாதிப்பு முந்தைய 20.7 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

  • ஆண்கள்: ஆண்களிடையே இந்த பாதிப்பு 22.1 சதவீதத்திலிருந்து 26.7 சதவீதமாகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது.

2. ஆபத்தான அளவில் உடல் பருமன் (Obesity)

உடலுழைப்புக் குறைபாடும், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வும் உடல் பருமனை தமிழ்நாட்டின் முதன்மைப் பிரச்சினையாக மாற்றியுள்ளன.

  • மாநிலத்தில் 44.2 சதவீதப் பெண்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் (முன்னர் இது 40.5% ஆக இருந்தது).

  • ஆண்களைப் பொறுத்தவரை, 38.8 சதவீதத்தினர் அதிக எடை அல்லது உடல் பருமனோடு வாழ்கின்றனர் (முன்னர் இது 37.1% ஆக இருந்தது).

பிரசவங்களில் ‘சிசேரியன்’ ஆதிக்கம்: இரண்டில் ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை

மகப்பேறு மருத்துவத் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள உள்கட்டமைப்பு வசதி பாராட்டத்தக்கது என்றாலும், சிசேரியன் (Caesarean-section) பிரசவங்களின் எண்ணிக்கை கவலை தரும் வகையில் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒட்டுமொத்தக் குழந்தைகளில் 46.9 சதவீதப் பிரசவங்கள் சிசேரியன் முறையிலேயே நடத்தப்படுகின்றன. அதாவது, மாநிலத்தில் பிறக்கும் ஏறத்தாழ இரண்டில் ஒரு குழந்தை அறுவை சிகிச்சை மூலமே உலகிற்கு வருகிறது.

  • தனியார் மருத்துவமனைகள்: தனியார் சுகாதார மையங்களில் இந்த வணிகமயமாக்கல் அல்லது தலையீடு மிக உச்சத்தில் உள்ளது. அங்கு நடக்கும் பிரசவங்களில் 60.3 சதவீதப் பிரசவங்கள் சிசேரியன் முறையில்தான் செய்யப்படுகின்றன.

  • அரசு மருத்துவமனைகள்: அரசு மருத்துவமனைகளிலும் இந்த விகிதம் சளைக்காமல் 35.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மகப்பேறு மற்றும் மகப்பேற்றுக்குப் பிந்தைய பராமரிப்பில் தொய்வு

தமிழ்நாட்டின் பாரம்பரிய பலமாக இருந்த தாய்மார்களுக்கான பிரசவ காலப் பராமரிப்பு குறிகாட்டிகள் (Maternal Healthcare Indicators) இந்த முறை சற்று பலவீனமடைந்துள்ளன.

  • முதல் முப்பருவப் பராமரிப்பு (First Trimester Care): கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் மருத்துவப் பரிசோதனை (Antenatal Care) செய்து கொள்ளும் தாய்மார்களின் விகிதம் 77.4 சதவீதத்திலிருந்து 71.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

  • ஒட்டுமொத்தப் பராமரிப்பு: ஏதேனும் ஒரு பிரசவ காலப் பராமரிப்பைப் பெறும் தாய்மார்களின் விகிதம் 95.8 சதவீதத்திலிருந்து 92.2 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதேபோல, குறைந்தபட்சம் 4 முறை மருத்துவப் பரிசோதனை செய்தவர்களின் விகிதமும் 90.6 சதவீதத்திலிருந்து 87.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

  • மகப்பேற்றுக்குப் பிந்தைய பராமரிப்பு (Postnatal Care): பிரசவம் முடிந்த 2 நாட்களுக்குள் முறையான மருத்துவப் பராமரிப்பைப் பெறும் தாய்மார்களின் விகிதம் 93.2 சதவீதத்திலிருந்து 90.5 சதவீதமாகவும், குழந்தைகளுக்கான பராமரிப்பு 94.9 சதவீதத்திலிருந்து 92.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

குழந்தைகளின் ஊட்டச்சத்தில் நீடிக்கும் சவால்கள்

மாநிலத்தின் பொருளாதாரத் தரவரிசை உயர்ந்து கொண்டே சென்றாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகள் இன்னும் முழுமையாகக் களையப்படவில்லை என்பதை HJobRqGbQAAfT0w.jpg புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

  • உயரத்திற்கேற்ற எடையின்மை (Wasting): போதிய தீவிர ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டு, உயரத்திற்கேற்ற எடையின்றி மெலிந்து காணப்படும் குழந்தைகளின் விகிதம் 14.6 சதவீதத்திலிருந்து 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

  • வயதிற்கேற்ற எடையின்மை (Underweight): ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன், வயதிற்கேற்ற எடையின்றி இருக்கும் குழந்தைகளின் விகிதம் 22 சதவீதத்திலிருந்து 23.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவ வசதிகளைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றிருந்தாலும், நிதிப் பாதுகாப்பு (காப்பீடு), முறையற்ற சிசேரியன் பிரசவங்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் வளர்ந்து வரும் வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் புதிய வியூகங்களையும் கொள்கை மாற்றங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மாநிலச் சுகாதாரத் துறை உள்ளது.

Related Posts