இலங்கை :பிரதமர் ராஜபக்சே பதவி விலக கெடு!

லங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்து விலக வலியுறுத்தும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மொத்தம் 120 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாத ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தொடருகின்றன.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 17 நாட்களாக போராட்டம் தொடருகிறது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம், வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்துகின்றனர். இதனிடையே மகிந்த ராஜபக்சே பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் மகிந்த ராஜபக்சேவோ, இடைக்கால அரசு அமைந்தாலும் தாமே பிரதமர் என பிடிவாதம் பிடிக்கிறார். அதேநேரத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி கோத்தபாய ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மகிந்த ராஜபக்சே எதிர்ப்பு அணி எம்.பி. உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். இத்தீர்மானத்துக்கு இப்போதே 120 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் மகிந்த ராஜபக்சே ஒரு வாரத்தில் பதவி விலக வேண்டும் என்றார்.

Related Posts

error: Content is protected !!