நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 அப்ரண்டிஸ் பணியிட வாய்ப்பு!

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 அப்ரண்டிஸ் பணியிட வாய்ப்பு!

ந்தியாவின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ‘தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்’ (NIACL), தேசிய அப்ரண்டிஸ் பயிற்சித் திட்டத்தின் (NATS) கீழ் 550 அப்ரண்டிஸ் (Apprentices) பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்களின் மாநில வாரியான விவரங்கள்

நாடு முழுவதும் மொத்தம் 550 காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களுக்கு கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • மொத்த இடங்கள்: 550

  • தமிழ்நாடு: 46 இடங்கள் (பொது – 23, ஓபிசி – 11, எஸ்சி – 8, இடபிள்யூஎஸ் – 4)

  • புதுச்சேரி: 01 இடம் (பொது)

  • மகாராஷ்டிரா (அதிகபட்சமாக): 138 இடங்கள்

(குறிப்பு: காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது, நிறுவனத்தின் தேவைக்கேற்ப இது மாறுதலுக்குட்பட்டது).

முக்கியத் தேதிகள்

  • ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: 23.06.2026

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.07.2026

  • ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 12.07.2026

தகுதி வரம்புகள்

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Graduate Degree) பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, 01.01.2022 மற்றும் 01.06.2026 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இதற்கு முன்னரோ அல்லது பின்னரோ தேர்ச்சி பெற்றவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

பிராந்திய மொழி அறிவு: விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் (தமிழகத்திற்கு தமிழ்) எழுத, படிக்க, பேச மற்றும் புரிந்துகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். 10 அல்லது 12-ஆம் வகுப்பில் அந்த மொழியை ஒரு பாடமாகப் படித்து சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வயது வரம்பு (01.06.2026 அன்று): விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது 02.06.1996 முதல் 01.06.2005-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயது வரம்புச் சலுகை:

  • எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்

  • ஓபிசி (Non-Creamy Layer) பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) – 10 ஆண்டுகள்

  • ஆதரவற்ற விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு: பொது/EWS – 35 வயது, ஓபிசி – 38 வயது, எஸ்சி/எஸ்டி – 40 வயது.

பயிற்சி காலம் மற்றும் உதவித்தொகை (Stipend)

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 12 மாதங்கள் (ஓராண்டு) அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ. 12,300/- உதவித்தொகையாக வழங்கப்படும். இதைத் தவிர வேறு எந்தவிதமான பணப்பலன்களோ அல்லது படிகளோ வழங்கப்பட மாட்டாது. இது முழுக்க முழுக்க ஒரு பயிற்சியே தவிர, நிறுவனத்தில் நிரந்தரப் பணிக்கான உத்தரவாதம் அல்ல.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Test) மற்றும் பிராந்திய மொழித் தேர்வு (Regional Language Test) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு, கொள்குறி வகை (Objective Type) வினாக்களாக 60 நிமிடங்கள் நடைபெறும்.

தேர்வு பாடத்திட்டம்:

  1. பொது மற்றும் நிதி சார்ந்த விழிப்புணர்வு (General/Financial Awareness) – 25 வினாக்கள் (25 மதிப்பெண்)

  2. பொது ஆங்கிலம் (General English) – 25 வினாக்கள் (25 மதிப்பெண்)

  3. ஆப்டிடியூட் மற்றும் ரீசனிங் (Quantitative & Reasoning Aptitude) – 25 வினாக்கள் (25 மதிப்பெண்)

  4. கணினி அறிவு (Computer Knowledge) – 25 வினாக்கள் (25 மதிப்பெண்)

விண்ணப்பக் கட்டணம்

  • பொது / ஓபிசி / இடபிள்யூஎஸ் (ஆண்கள்) – ரூ. 944/- (கட்டணம் ரூ.800 + 18% ஜிஎஸ்டி)

  • பொது / ஓபிசி / இடபிள்யூஎஸ் (பெண்கள்) – ரூ. 708/- (கட்டணம் ரூ.600 + 18% ஜிஎஸ்டி)

  • எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் (அனைத்து பாலினத்தவரும்) – ரூ. 236/- (கட்டணம் ரூ.200 + 18% ஜிஎஸ்டி)

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் செயல்முறை இரண்டு கட்டங்களாகக் கொண்டது:

  1. முதற்கட்டமாக, மத்திய அரசின் NATS போர்ட்டலில் (https://nats.education.gov.in/) பதிவு செய்து, தங்களின் சுயவிவரத்தை 100% பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் அங்கு ‘The New India Assurance Company Limited’ என்பதைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

  2. அதனைத் தொடர்ந்து, https://beep.bfsissc.com/candidate_login என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று, NATS பதிவு எண் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி தங்களின் பதிவை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.

கூடுதல் விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முழுமையாக அறிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.newindia.co.in/ பக்கத்தைப் பார்வையிடலாம்.

Related Posts