நெஞ்சுக்கு நெருக்கமான பழைய ஆசைகள்: பாதியில் கைவிட்ட ‘ஹாபி’களை மீண்டும் மீட்டெடுப்பது எப்படி?
ஒரு காலத்தில் புகைப்படக் கலையில் (Photography) தீவிர ஆர்வம் கொண்டு, புதிய கேமரா மற்றும் லென்ஸ்களை வாங்கி வார இறுதி நாட்களை அதிலேயே செலவிட்ட ஒரு நபர், திடீரென ஒரு நாள் அதை அப்படியே கிடப்பில் போடுகிறார். மற்றொருவர் விதவிதமான ஓவியங்கள் வரைவதில் மூழ்கிக் கிடந்தவர், இப்போது தூரிகையைத் தொட்டே பல வருடங்கள் ஆகிறது என்று பெருமூச்சு விடுகிறார். நமக்கு மிகவும் பிடித்த, நம் ஆன்மாவிற்கு நெருக்கமான சில விஷயங்களை, பொழுதுபோக்குகளை (Hobbies) நாம் ஏன் ஒரு கட்டத்தில் திடீரென நிறுத்திவிடுகிறோம்?
நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த அனுபவம் நிச்சயம் இருந்திருக்கும். “நேரமில்லை”, “வேலைப்பளு” என்று நாம் இதற்குப் பொதுவான காரணங்களைச் சொன்னாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மையான உளவியல் காரணம் அதுவல்ல. நரம்பியல் விஞ்ஞானியும் (Neuroscientist), மனநல மருத்துவருமான டாக்டர் ஜாட்சன் பிரீவர் (Dr. Judson Brewer) தனது ஆய்வுகளின் வழியே, நாம் விரும்பிய விஷயங்களை பாதியில் கைவிடுவதன் பின்னணியில் இருக்கும் மனித மூளையின் செயல்பாடுகளையும், அதை எப்படி மாற்றியமைக்கலாம் என்பதையும் விளக்குகிறார்.

மூளையின் வெகுமதி வளையம்: ஆசை எப்படி சுமையாக மாறுகிறது?
நாம் ஒரு புதிய விஷயத்தைக் கற்கத் தொடங்கும்போது அல்லது நமக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடும்போது, நமது மூளையில் ‘டோபமைன்’ (Dopamine) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இது ஒரு புதிய தேடலுக்கான மகிழ்ச்சியையும் சுவாரசியத்தையும் நமக்கு அளிக்கிறது. இதைத்தான் உளவியலில் ‘வெகுமதி வளையம்’ (Reward Loop) என்கிறோம்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இந்த மகிழ்ச்சியான செயல்பாடு, மெல்ல மெல்ல ஒரு இலக்காக (Goal) மாறத் தொடங்குகிறது. உதாரணத்திற்கு, ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதத் தொடங்குபவர், ஆரம்பத்தில் அந்த எழுத்து நடையையும் கற்பனையையும் ரசித்து எழுதுவார். ஆனால், சில நாட்களிலேயே “இத்தனை பக்கங்கள் எழுதி முடிக்க வேண்டும்”, “வாசகர்களுக்கு இது பிடிக்குமா?”, “பதிப்பகத்தார் ஏற்றுக்கொள்வார்களா?” என்ற சிந்தனைகள் உள்ளே புகுந்துவிடுகின்றன.
எப்போது ஒரு பொழுதுபோக்கு அல்லது கலை, ‘முடிவு’ மற்றும் ‘வெகுமதி’ சார்ந்த ஒன்றாக மாறுகிறதோ, அப்போது மூளை அதை ஒரு ‘வேலையாக’ (Task) பார்க்கத் தொடங்குகிறது. ரசித்துச் செய்த ஒரு விஷயம், திடீரென தினசரி செய்ய வேண்டிய கடமையாக மாறும்போது, மூளைக்கு அது அழுத்தத்தைத் தருகிறது. இந்த அழுத்தத்தைத் தவிர்க்கவே, நாம் நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தைக் கூடச் செய்வதை நிறுத்திவிடுகிறோம்.
‘செயல்’ முக்கியமா? ‘முடிவு’ முக்கியமா?
நாம் விரும்பியதை நிறுத்தக் காரணமே, நம் கவனம் அந்தச் செயலின் மீது இல்லாமல், அதன் முடிவின் மீது (Focus on the Outcome) குவிந்துவிடுவதுதான். ஓவியம் வரைவதன் மூலம் கிடைக்கும் மன அமைதியை விட, “இந்த ஓவியம் மிகச் சரியாக வரவேண்டும்” என்ற எதிர்பார்ப்பு மேலோங்கும்போது, அங்கே சுயவிமர்சனமும் (Self-criticism) பயமும் குடியேறுகின்றன.
“நான் நினைத்த அளவுக்கு இது நன்றாக வரவில்லை என்றால் என்ன செய்வது?” என்ற எண்ணம் தோன்றும்போதே, மூளை அந்தப் பணியில் இருந்து தப்பிக்க முயல்கிறது. நாம் அதைத் தள்ளிப்போடத் (Procrastination) தொடங்குகிறோம். இறுதியில், அந்த கேமராவோ, ஓவியப் பலகையோ வீட்டின் ஏதோ ஒரு மூலையில் தூசு படிந்து கிடக்க நேரிடுகிறது.
விழிப்புணர்வுடன் கவனித்தல்: தள்ளிப்போடுதலின் சுழற்சியை உடைப்பது
பாதியில் நிறுத்திய ஒரு பழக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கு ‘சுயக்கட்டுப்பாடு’ (Willpower) மட்டும் போதாது என்கிறார் டாக்டர் ஜாட்சன் பிரீவர். அதற்குப் பதிலாக ‘விழிப்புணர்வு’ (Mindfulness) மற்றும் ‘ஆர்வத்தை’ (Curiosity) ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.
நாம் ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடும்போதோ அல்லது செய்ய மறுக்கும்போதோ, நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை உற்று நோக்க வேண்டும். “இதைச் செய்ய இப்போது எனக்கு ஏன் சோம்பேறித்தனமாக இருக்கிறது?”, “தோற்றுவிடுவோம் என்ற பயமா?” என்று நமக்கு நாமே கேள்வி எழுப்ப வேண்டும். இந்த விழிப்புணர்வு, நம் மூளையின் பழைய பழக்கவழக்கச் சுழற்சியை (Habit Loop) உடைக்க உதவும்.
பாதியில் விட்ட ஆசைகளை மீண்டும் மீட்டெடுக்கும் எளிய வழிகள்
தொலைந்துபோன உங்கள் பழைய ஆர்வங்களை மீண்டும் புதுப்பிக்க சில எளிய உளவியல் அணுகுமுறைகள் இதோ:
-
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் செய்யும் காரியம் மிகச் கச்சிதமாக (Perfect) இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். ஒரு புகைப்படக் கலைஞர் எனில், இன்ஸ்டாகிராமில் ‘லைக்ஸ்’ வாங்குவதற்காகப் படம் பிடிக்காமல், அந்த நொடியை ரசித்துப் படம் பிடியுங்கள்.
-
செயலை மட்டும் ரசியுங்கள்: இலக்குகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்தச் செயல்பாட்டின் போக்கை (Process) மட்டும் அனுபவியுங்கள். தவறுகள் நடப்பது இயல்பு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
-
குறைந்த நேரத்தில் தொடங்குங்கள்: தினமும் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும் என்று பெரிய இலக்கு வைக்காமல், வாரத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் அந்தப் பிடித்தமான விஷயத்திற்காக ஒதுக்குங்கள். அது மெல்ல மெல்ல உங்களை அந்தப் பழைய உலகிற்குள் அழைத்துச் செல்லும்.
நமக்கு நாமே அழுத்தங்களைத் தராமல், மீண்டும் ஒரு குழந்தையைப் போலத் ஆர்வத்தோடு எதையும் அணுகக் கற்றுக்கொண்டால், நாம் பாதியில் கைவிட்ட அனைத்து அழகிய கலைகளும், பொழுதுபோக்குகளும் நம் வாழ்வில் மீண்டும் வசந்தமாய் மலரும்.
டாக்டர். ரமாபிரபா


