உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்!

உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று மிக முக்கிய அரசியல் நகர்வுகளுக்கு இடையே நடைபெற்றது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மாநிலங்களுக்கான திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதன்முறையாகக் கலந்துகொண்டார்.

பிரதமருக்கு எதிர்வரிசையில் அமர்ந்து, தமிழக மக்களின் உரிமைகளையும் மாநிலத்தின் பிராந்தியத் தேவைகளையும் மிக கம்பீரமாகப் பிரதிபலித்த முதலமைச்சர் விஜய், கூட்டாட்சிக் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே வேளையில், தமிழகத்தின் வாழ்வாதாரக் கோரிக்கைகள், கல்வி உரிமைகள் மற்றும் கலாச்சாரப் பெருமைகளை உள்ளடக்கிய பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கைகளை இந்த மேடையில் மிக விரிவாக அவர் முன்வைத்தார்.

திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்கக் கோரிக்கை

தமிழ்மொழியின் ஆகச்சிறந்த அடையாளமும், உலகப் பொதுமறையுமான திருக்குறளுக்கு மிக உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் முயற்சியை முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் கையில் எடுத்தார். நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்குத் தனித்துவமான சான்றாக விளங்கும் தொன்மையான திருக்குறள் நூலினை, ‘தேசிய இலக்கியமாக’ (National Literature) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமரிடமும் நிதி ஆயோக் மன்றத்தின் முன்பாகவும் அவர் மிக அழுத்தமான கோரிக்கையை முன்வைத்தார். இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் கனவைச் சர்வதேச அரங்கில் எதிரொலிப்பதாக அமைந்தது.

நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் கல்வி நிதி கோரல்

தமிழக மாணவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதில் தனது அரசு உறுதியாக இருப்பதை வெளிப்படுத்திய முதலமைச்சர், இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (AYUSH) படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு முற்றிலுமாக எதிர்க்கிறது என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினார். இந்தத் தேர்வால் கிராமப்புற மற்றும் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கை நடத்தத் தமிழகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், ‘ஒருங்கிணைந்த கல்வி’ (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ₹3,284 கோடியை, புதிய கல்விக் கொள்கையையோ அல்லது மும்மொழிக் கொள்கையையோ அமல்படுத்த வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையுமின்றி மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் மற்றும் கோவையில் எய்ம்ஸ்

தமிழகத்தில் உள்ள விளிம்புநிலை மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை முழுமையாகக் கண்டறிந்து, அவர்களின் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் “வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்” (Poverty-Free Tamil Nadu Mission) என்ற புதிய திட்டத்தைத் தனது அரசு முன்மொழிவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இத்துடன், அனைவருக்கும் வீடு என்ற உன்னதக் கனவை நனவாக்க மத்திய அரசின் தாராளமான நிதி உதவியையும் அவர் நாடினார்.

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் உயர்தர மருத்துவக் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ்நாட்டின் இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைக் கோயம்புத்தூரில் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிலத்தைத் தமிழக அரசே முழுமையாக வழங்கும் என்றும் அவர் பிரதமரிடம் நேரில் கோரினார்

சிங்கப்பெண் அதிரடிப்படை மற்றும் பெண்கள் பாதுகாப்பு

இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில்தான் உள்ளனர் என்ற பெருமிதமான புள்ளிவிவரத்தைப் பகிர்ந்த முதலமைச்சர், பெண்களை மையப்படுத்திய பொருளாதார வளர்ச்சியே மாநிலத்தின் நோக்கம் என்றார். பெண்களின் பாதுகாப்பை உச்சகட்டமாக உறுதி செய்ய, அவசரகால நடவடிக்கை அமைப்புகள், விரிவான சிசிடிவி கேமரா வலைப்பின்னல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன காவல் பணிகளுக்காகத் தமிழகத்தில் “சிங்கப்பெண் அதிரடிப்படை” (Singappen Special Force) தொடங்கப்பட்டிருப்பதையும் அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

மீனவர் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்கள்

பாக் வளைகுடாப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார். மேலும், புயல் மற்றும் வெள்ளப் பேரிடர்களால் அடிக்கடி பாதிக்கப்படும் தமிழகக் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க “காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045” (Climate Resilient Master Plan 2045) என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்றார்.

குலசேகரபட்டினத்தில் அமையவுள்ள விண்வெளி மையத்தைத் ‘தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக’ அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு , தமிழகத்தின் அசுர பொருளாதார வளர்ச்சிக்காகப் பின்வரும் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களை அவர் கேட்டுக்கொண்டார்
  • ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்

  • திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம் – கரூர் (NH-81) மற்றும் கரூர் – கோயம்புற்று (NH-81) பகுதிகளை ஆறு வழிச்சாலையாக மாற்றுதல்

  • மாதவரம் – சோழவரம் (NH-87) இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைத்தல்

  • சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் (High Speed Rail Corridor) அமைத்தல்

  • ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ₹2,283.40 கோடி மத்திய நிதியை வழங்குதல்

மாநிலங்கள் வலுப்பெறும்போதுதான் இந்தியாவும் ஒட்டுமொத்தமாக வலிமை பெறும் என்ற உன்னதமான கூட்டாட்சிக் கொள்கையை முன்வைத்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளையும் டெல்லி மேடையில் முதலமைச்சர் விஜய் மிக வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளார்.

Related Posts