விவசாயிகள் போராட்ட தகவல் வெளியிட்ட பல ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்!

விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்பு படுத்தி மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக 250 கணக்குகளை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சில அமைப்புகள் ‘ModiPlanningFarmerGenocide’ என்ற பெயரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் பதிவுகள் வெளியிடுவதாக தகவல் வெளியானது.
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிசான் ஏக்தா மோர்ச்சா மற்றும் பி.கே.யூ ஏக்தா உர்கஹான் ஆகிய விவசாய சங்கங்களின் ட்விட்டர் கணக்குகளும் இதில் அடங்கும், அவற்றை எழுத்தாளர்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், வேளாண் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
இதன் மூலம் தவறான தகவல்கள பரப்பப்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 ஏ பிரிவின் கீழ் இந்த ட்வீட்டர் கணக்குகளைத் முடக்க தகவல் தொழில்நுட்பத் துறை ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு பரிந்துரைத்தது. அதனை தொடர்ந்த அந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகமது சலீம், செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஜர்னெய்ல் சிங் மற்றும் ஆர்த்தி, பத்திரிகையாளர் சந்தீப் செளத்ரி, எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு, முகமது ஆசிஃப் கான், ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பிரசார் பாரதியின் முதன்மை செயல் அதிகாரி சஷி எஸ் வேம்பட்டியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ஏஎல்டி நியூசைச் சேர்ந்த முகமது, முடக்கப்பட்டுள்ள அனைத்து கணக்குகளின் புகைப்படத்தையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.