சச்சின் சாதனைகளுக்குப் பின்னால் வணிக மோசடி?

சச்சின் சாதனைகளுக்குப் பின்னால் வணிக மோசடி?

சச்சினின் விளையாட்டு வாழ்வை 2000களுக்கு முந்தைய பிந்தைய என இரண்டு வகையாக பகுத்துப்பார்க்கலாம். காரணம், சச்சின் விளையாடத்தொடங்கிய காலக்கட்டம் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானிப்பதாக இருந்தது. 90களின் துவக்கத்தில் இந்திய அணி தன் நட்சத்திரங்களை எல்லாம் மூப்புக்கு கொடுத்துவிட்டு, இன்றைய இலங்கை அணியைப்போல திணறிக்கொண்டிருந்தது. கபில்தேவ் மட்டும் எஞ்சி இருந்தார். ஆனால் பழைய வேகத்தில் யாருமேயில்லை. அந்த நேரத்தில் கொஞ்சமே பெரிய பால்வாடி டீன்ஏஜ் பையன் ஒருவனை களத்தில் இறக்குகிறார்கள். அன்று சச்சினுக்கு கிடைத்ததுபோல் ஒரு வாய்ப்பு இன்று யாருக்காவது கிடைக்குமா?

காரணம் அப்போதிருந்த அணி அத்தனை பலவீனமாக இருந்தது. பென்ச் ஸ்ட்ரென்த் என்பதே இல்லாத ஒரு நோஞ்சான் அணியாக இருந்தது. 90கள் முழுக்கவுமே ஒருபக்கம் இந்தியா தோற்றுக்கொண்டே இருந்தாலும் சச்சின் மட்டும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அவர் அளவுக்கு அணியில் யாருமே இல்லாத 90களில் அவர் தனித்துத் தெரிய ஆரம்பித்தார். அவரால் இந்திய அணி வெற்றிபெற்றுக்கொண்டிருந்ததான போலி வியப்பு எங்கும் பரவி இருந்தது. சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை ஆப் பண்ணிடுவோம் என்பார்கள். ஆன் பண்ணிவைத்திருந்தாலும் நாம் தோற்றுகொண்டிருந்த காலம் அது.

90களின் வெற்றிப்பட்டியல்களை எடுத்து ஆராய்ந்தால் சச்சின் மீது புனையப்பட்ட இந்த வெற்றிக்கதைகளில் பாதி உண்மையும் பாதி பொய்யும் இருப்பது விளங்கும். ஒரு சோப்ளாங்கி அணியில் தனியனாக அவர் மட்டும் ஆடிக்கொண்டிருந்தார். அதனாலேயே எல்லா வெளிச்சமும் அவர் தலையிலேயே விழுந்துகொண்டிருந்தது. அவர் கிரிக்கெட்டின் கடவுள் எனப் புகழப்பட்டார். எல்லாமே 2000களுக்கு முன்பு வரைதான். அதற்கு பிறகு அணிக்குள் நுழைந்தவர்களின் பட்டியலையும் அணி வெற்றிக்கு அவர்கள் தந்த பங்களிப்பையும் பார்த்தால் சச்சின் மீதான வெளிச்சம் மங்கத்தொடங்கியதன் காரணத்தை உணரலாம்.

சச்சினின் கிரிக்கெட்டை விட 90களில் அவருடைய பர்சனல்கதைகள் அதிகமும் பரப்பப் பட்டன. சச்சின் தெண்டுல்கர் விளையாடத்தொடங்கிய காலத்தில் அவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை அவசியமின்றி இளம் வயதினர் அனைவருமே சேர்த்துக் கொண்டேயிருந்திருந்தோம். அவருடைய மூத்த வயது காதலியில் தொடங்கி ஸ்டம்புக்கு மேல் ஒருரூபாய் நாணயத்தை வைத்து பேட்டிங் பயிற்சி தந்த பயிற்சியாளர், பத்தாம் வகுப்பு தாண்டாத சச்சினின் ஆங்கில அறிவு வரை நமக்கு சச்சினை பற்றிய எல்லாமே அத்துப் படியாய் இருந்தது. உழைப்பே உயர்வு… படிப்பு கூட முக்கியமில்லை, திறமையிருந்தால் ஜெயிக்கலாம் என்கிற கதைகளுக்கெல்லாம் சச்சின் நாயகனாக்கப்பட்டார். அந்த பாப்புலர் பரப்புரைகளே அவர் அணியில் சோபிக்காமலிருந்த போதும் அவருக்கான வாய்ப்புகளை ஈட்டித்தந்தது. அதே மாதிரியான கதைகளோ வெளிச்சமோ கிடைத்திடாத ஏனைய வீரர்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் கிட்டவேயில்லை.

சச்சினின் வாழ்விலிருந்து தெரிந்துகொள்ள ஒரு செய்தி இருந்தது. “ஒரு துறையை தேர்ந்து எடுத்து அதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினால் வெற்றிபெறலாம்.” என்பதே அது. ஆனால் அதை யாருமே நமக்கு கற்றுத்தரவில்லை அல்லது புகட்ட முற்பட வில்லை. நாமாகவும் கற்றுக்கொண்டதில்லை. மைதானங்களில் சச்சினைப்போல கால்களை அகலவிரித்து ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆடத்தான் உந்தப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் மூலமாகத்தான் முன்னேறமுடியும் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக சச்சின் விளம்பரப்படுத்திய குளிர்பானத்தை வாங்கிக்குடித்தால் ஜெயிக்கலாம் என்று மூளைச்சலவைகளுக்கு ஆளானோம். சச்சின் சோப்பு விற்றார்… பிஸ்கட் விற்றார்… கிரிக்கெட் ஆடாத நேரமெல்லாம் அவர் நம் தொலைகாட்சிகளில் எதையாவது கூவிக்கூவி விற்றுக்கொண்டேயிருந்தார். இந்தியாவில் நிகழ்ந்த உலகமயமாக்கலின் முதல் குழந்தை சச்சின் தெண்டுல்கர். இந்தியர்களின் கிரிக்கெட் மோகத்தை  வணிகமயமாக்கு வதற்கு கிடைத்த அற்புதக்கருவி சச்சின். ஒரு வியாபார முன்மாதிரி. அவருடைய வருகைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வணிகமே மாற்றம் அடையத் தொடங்கியது. அவரைப் பின்பற்றியே பின்னாளில் மற்ற நாயகர்களையும் கிரிக்கெட் உலகம் பிரசவித்துக்கொண்டே இருந்தது. இதோ இப்போது தோனி, கோலிவரைக்கும். சச்சின் கூட கிரிகெட்டிலிருந்து வெளியேறியதும் வணிகத்தில்தான் இறங்கினார்!

சச்சினால் இந்தியா வெற்றிபெற்ற ஆட்டங்களை நினைவுகூரச்சொன்னால் விரல்விட்டு பத்திலிருந்து பதினைந்து தருணங்களை மட்டும்தான் நம்மால் சொல்லமுடியும். திரும்பத் திரும்ப ஷார்ஜாவிலே என்பார்கள். மற்ற படி அவர் நிறைய செஞ்சுரிகள் அடித்தார். பலவித மான ஷாட்களை திறமையோடு அடிப்பவராக இருந்தார். இந்தியாவின் கட்டாந்தரை பிட்ச்களில் அவரைப்போல அடித்தவர்கள் யாருமேயில்லை. ஆனால் இந்தியாவில் தோல்வி களின் மீதே அவர் ரன்களை ஓடிக்கடந்தார். இந்தியாவின் தோல்வி அவருக்கு ஒரு பொருட்டே இல்லையோ என்கிற எண்ணம் வருமளவுக்கு சில போட்டிகளில் அவர் சுயநலத்தோடு சதங் களையும் அரைசதங்களையும் நோக்கி ஆடியதுண்டு. அதை யாருமே மறுக்க முடியாது.

நம்மை சுற்றி இருக்கிற யாருமே சிறப்பாக இல்லாமல் போனாலும் நாம் மட்டும் சிறப்பாக இருந்தால் போதும் என்கிற சுயநல மனநிலை அதிகமும் பரவத்தொடங்கிய உலகமயமாக்கல் காலகட்டம் அது. தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பே சச்சினிடம் அதிகமும் இருந்திருக்கவேண்டும். அத்தகைய மனநிலை கொண்டவரால் நிச்சயம் நல்ல தலைவனாக இருக்கமுடியாது என்பதை இரண்டுமுறை நிரூபித்தவர் சச்சின்.

2000களுக்கு பிறகு வந்த வீரர்கள் அணியின் வெற்றிக்காக தங்களுடைய சொந்த வெற்றிகளை இழக்கத்தயங்காதவர்களாக இருந்தனர். பெயர்களை குறிப்பிடவில்லை அது தேவையில்லாத ஒப்பீடுகளுக்கு இட்டுச்செல்லும். ஆனால் 2000களுக்கு பிறகு கிரிக்கெட்டை உற்றுநோக்குகிற யாருமே இதை ஒப்புக்கொள்வார்கள். எத்தனையோ ஆட்டங்களை அவர்கள் சச்சினின் பங்களிப்பில்லாமல் வென்று கொடுத்தார்கள். சச்சினின் மாயாஜாலங்களை ஒன்றுமே யில்லை என்பதாக மாற்றிக்காட்டினார்கள். இருப்பினும் சச்சின் இன்றுவரை கொண்டாடப் படுகிறார். அதற்கு பின்னிருக்கும் காரணங்களில் முக்கியமானது நம் ஆரம்பகால கனவுகள் எல்லாமே அவரின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தன.

நம்முடைய நினைவுகளும் அதோடு பயணித்தவை. நம் வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சச்சின் சதமடித்து கொண்டிருந்திருப்பார். எளிய பின்புலத்திலிருந்து வந்து பெரிய அளவில் சாதிக்கமுடியும் என்கிற நம்பிக்கை நாயகனாக அவருடைய பிம்பம் நம் ஆள்மனதில் பதிந்துருக்கிறது. திறமை மட்டுமே போதும் எதையும் சாதிக்கலாம் என்கிற புரட்டுகளால் உருவான ஜோடனைகள் அவை. ஆனால் அந்த கனவுகளை மூலதனமாகக் கொண்டே சச்சினை வியாபாரப்பொருளாக மாற்றியது உலகமயமாக்கல். பிறகு அது தோனியை விற்றது. இப்போது கோலியை விற்கிறது. ஆனால் ரகசியம் ஒன்றுதான்.

Boost is the secret!

அதிஷா வினோ