சென்னை, கோவை, மதுரை, சேலம் & திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகரங்களில் வரும் 26 ம்தேதி முதல் முழு ஊரடங்கு!

சென்னை, கோவை, மதுரை, சேலம் & திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகரங்களில் வரும் 26 ம்தேதி முதல் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 114. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 886. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72,403 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 65,834 நபர்களுக்கும் இன்று மட்டும் 5,882 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைக்கு பரிசோதனை மேற்கொண்ட 5,882 பேரில் புதிதாக 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,755 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தக் கொரோனா நோய்ப்பரவல் தீவிரமாவதைத் தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகரங்களில் வரும் 26 ம்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை –

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து நேற்று என்னால் ஆய்வு செய்யப்பட்டது. கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவுகட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதிலும், நகரப்புரங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்த நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்றுபரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதாரவல்லுநர் களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப்புரங்களில்ஊரடங்கை மேலும் கடுமையாக் கினால் மட்டுமே, இந்த நோய்த் தொற்றுபரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளனர். எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்குகட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ், கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

1. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26 ம்தேதி ஞாயிறு காலை 6 மணி முதல் 29ம் தேதி புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.

2. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26ம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல் 28ம்தேதி செவ்வாய் இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படும்.

இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகள்மட்டுமே அனுமதிக்கப்படும்:

1) மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள்போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.

2) அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையானபணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

3) இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும்அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீதபணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

4) அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் ( ஏடிஎம்) வழக்கம் போல் செயல்படும்.

5) உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

6) முதியோர், மாற்றுத் திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

7) ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறைமற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

8) ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிறஅமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

9) கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரியவிதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையானதடை விதிக்கப்படுகிறது. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது. மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளைத் தவிர பிறஇடங்களில் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளகட்டுப்பாடுகள், அனுமதிகள் தொடரும்.

இக்கால கட்டத்தில் நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும்.

மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும்நோய் என்பதால், இதை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!