June 2, 2023

இந்தாண்டு இறுதிவரை தனிமனித இடைவெளி: பிரிட்டன் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கண்ணுக்குப் புலப்படாத  கொரோனா பெருந்தோற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து  கொண்டே வருகிறது. தற்போது வரை 26 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 33 ஆயிரத்து 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 18 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர். பிரிட்டன் மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும், அரசின் துறை அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நடப்பாண்டு இறுதி வரை தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு இங்கிலாந்து மக்களுக்கு அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகர் கிறிஸ் விட்டி, “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டனில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் ஓரளவு பயன் கிடைத்துள்ளது. ஆனால், வாழ்க்கை உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என எதிர்பார்ப்பது முழுக்க, முழுக்க சாத்தியமில்லாதது.

மிகவும் பயன்தரத்தக்க தடுப்பூசி அல்லது மருந்துகளே தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றக் கூடிய வல்லமை படைத்தவை. ஆனால் அடுத்த ஆண்டிற்குள் அவற்றை கண்டறியும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இதனால், சில சமூக விலக்க கட்டுப்பாடுகள், இந்த ஆண்டு இறுதிவரை பிரிட்டனில் தொடர வேண்டும். அப்போது தான் கொரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.”என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்பு அந்நாட்டு மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.