இந்தியாவிற்கு ரெட் அலர்ட்: ஆரோக்கிய அறிவில் கோட்டை விடுகிறோமா?

இந்தியாவிற்கு ரெட் அலர்ட்: ஆரோக்கிய அறிவில் கோட்டை விடுகிறோமா?

ந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்று பேசினாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளும், அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களுமே. ஆனால், ஒரு தேசத்தின் ஜிடிபி (GDP) என்பது சிமெண்ட் கலவையிலும், சிலிக்கான் சிப்புகளிலும் மட்டுமே அடங்கியிருப்பதில்லை. இவற்றுக்கெல்லாம் பின்னால் மிக அமைதியாக, அதே சமயம் அதீத பலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ‘ரகசிய என்ஜின்’ ஒன்று உண்டு. அது – ‘ஹெல்த் லிட்ரசி’ (Health Literacy) எனப்படும் சுகாதார விழிப்புணர்வு. நம் ஆரோக்கியத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கும் தெளிவும், முடிவெடுக்கும் திறனுமே அந்த என்ஜினுக்கான எரிபொருள். இந்த அடிப்படை அறிவில் நாம் செய்யும் சிறு முன்னேற்றம், இந்தியாவின் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் வல்லமை கொண்டது என்பதைச் சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

12 பில்லியன் டாலர் வாய்ப்பு – ஒரு கணக்கீடு

எகனாமிஸ்ட் இம்பாக்ட்‘ அமைப்பு, ஹெலியன் (Haleon) நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்திய ‘சுகாதார உள்ளடக்கிய குறியீடு 2025’ (Health Inclusivity Index) ஆய்வின் முடிவுகள் அதிர வைக்கின்றன. இந்தியாவில் நிலவும் குறைந்த சுகாதார விழிப்புணர்வை வெறும் 25 சதவீதம் மட்டும் சீரமைத்தால் போதும், ஆண்டுதோறும் 12 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) மிச்சமாகும்.

இதன் பின்னணியில் இருக்கும் கசப்பான உண்மை என்னவென்றால், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இல்லாத ஒரு நபர், விழிப்புணர்வு உள்ளவரை விட மருத்துவத்திற்காகச் சராசரியாக மூன்று மடங்கு அதிகச் செலவு செய்கிறார். நோய் வந்த பிறகு சிகிச்சைக்கு ஓடுவதை விட, வருமுன் காக்கும் அறிவு இருந்தால் அந்தப் பணம் நாட்டின் உற்பத்தித் திறனாக மாறும்.

விழிப்புணர்வால் லாபம் ஈட்டும் ஐந்து முக்கியத் துறைகள்:

  • சுவாசக் காற்றும் வருவாயும்: சுத்தமான காற்று என்பது வெறும் ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு பொருளாதார முதலீடு. காற்று மாசினால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதன் மூலம் மருத்துவச் செலவுகளைக் குறைத்து, மக்களின் வேலைத் திறனை அதிகரிக்கலாம். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு $12 பில்லியன் கூடுதல் வருமானத்தைச் சேர்க்க முடியும்.

  • ரத்த சோகை ஒழிப்பு – பெண்களின் பங்களிப்பு: இந்தியப் பெண்களிடையே நிலவும் ரத்த சோகையை (Anaemia) அகற்றுவது அவர்கள் முழு ஆற்றலுடன் பொருளாதாரத்தில் பங்கேற்க உதவும். உலகளாவிய இலக்குகளை எட்டினால், வீணாகும் லட்சக்கணக்கான வேலைநாட்களை மீட்பதுடன், ஆண்டுக்கு $8.7 பில்லியன் வருவாய் ஈட்ட முடியும்.

  • வாய்வழி ஆரோக்கியம்: புன்னகையில் ஒளிந்துள்ள சேமிப்பு: பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை ஆரம்பத்திலேயே தடுப்பது ‘ரூட் கெனால்’ போன்ற விலையுயர்ந்த சிகிச்சைகளைத் தவிர்க்க உதவும். குறிப்பாக, ஈறு நோய்களைச் சரியாகக் கவனிப்பதன் மூலம் ‘டைப் 2’ நீரிழிவு நோய்க்கான மருத்துவச் செலவுகளில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் $3.5 பில்லியனைச் சேமிக்க முடியும்.

  • தசை மற்றும் எலும்பு ஆரோக்கியம் (Musculoskeletal issues): முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உழைக்கும் பெண்களின் உற்பத்தித் திறனைப் பெரிதும் பாதிக்கின்றன. இதைச் சரியாக மேலாண்மை செய்வதன் மூலம் முறையே $1.3 பில்லியன் மற்றும் $2.0 பில்லியன் என ஆண்டுக்கு மொத்தம் $3.3 பில்லியன் இழப்பைத் தவிர்க்கலாம்.

ஒரு மூலோபாய முதலீடு

சுகாதார உள்ளடக்கிய குறியீட்டின் (Health Inclusivity Index) மிகச் சமீபத்திய மூன்றாம் கட்ட ஆய்வானது, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை முழுமையாக எட்டவும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்துவதும், அன்றாடச் சுய பராமரிப்பை ஊக்குவிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சுகாதார விழிப்புணர்வைப் பொதுக் கொள்கைகள், கல்வித் திட்டங்கள் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பது ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான மக்கள் தொகை அதிக உற்பத்தித் திறனைத் தூண்டுவதுடன், சமத்துவமின்மையைக் குறைத்து, நீண்ட கால மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும். இன்று சுகாதார விழிப்புணர்வில் முதலீடு செய்வது என்பது இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காகச் செய்யப்படும் முதலீடாகும். இந்த சுகாதார விழிப்புணர்வு என்பது வெறும் மருத்துவத் தகவல் அல்ல; அது ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் ஒரு சமூகக் கருவி. பொருளாதார வெற்றிக்கு இது ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. கல்வியிலும், சமூகத் திட்டங்களிலும் ஆரோக்கிய அறிவைப் புகுத்துவது, ஒரு வளமான இந்தியாவை உருவாக்கும். இன்றைய நிலையில், ‘ஹெல்த் லிட்ரசி’யில் நாம் செய்யும் முதலீடுதான், நாளை இந்தியாவின் பொருளாதாரப் பாய்ச்சலைத் தீர்மானிக்கும்.

Related Posts

error: Content is protected !!