32°C
விளம்பரம்
Advertisement

’மைலாஞ்சி’ – விமர்சனம்!

admin Published: February 13, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


நெஞ்சில் ஓர் ஆலயம் தொடங்கி மௌனம் பேசியதே வரை நாம் அரைத்த அதே மாவைத்தான், இயக்குனர் அஜயன் பாலா ‘மைலாஞ்சி’யிலும் அரைக்க முயன்றிருக்கிறார். தன் காதலி விரும்பும் இன்னொருவனுடன் அவளைச் சேர்த்து வைக்கத் துடிக்கும் தியாகி நாயகன், இதற்கிடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள் என பழைய ஃபார்முலாவை கையிலெடுத்தவர், அதை இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத் தவறிவிட்டார். 90-களின் பாதிப்பில் ஊறிய ஒரு ஆர்டிபிஷியல் உணர்வைத்தான் படம் நெடுக தருகிறார்.

கதைச் சுருக்கம்:

ஊட்டியில் பறவைகள் பூங்கா நடத்தும் நாயகி கிரிஷா குரூப், தன் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒருவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். சென்னைக்குச் சென்ற அவரைத் தேடிக் கண்டுபிடித்துச் சேர்த்து வைக்கும்படி, தன்னிடம் காதலைச் சொல்ல வந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் கார்த்திக்கிடம் உதவி கேட்கிறார். மனதுக்குள் காதலை வைத்துக் கொண்டே, காதலியின் காதலைச் சேர்த்து வைக்கப் போலியாகப் போராடும் ஹீரோ, ஒருகட்டத்தில் உண்மையாகவே தேடி அலைந்து அந்த பழைய காதலனைக் கண்டுபிடிக்கிறார்.

ஆனால், கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட்! பழைய காதலன் வந்த பிறகுதான், தனக்கு இருப்பது அவர் மீது காதல் இல்லை, கூடவே இருந்த ஸ்ரீராம் கார்த்திக் மீதுதான் காதல் என்பதை நாயகி உணர்கிறார். ஆனால் ஹீரோவோ காதல் வலியுடன் கிளம்பிவிட, இறுதியில் இந்த முக்கோணக் காதல் என்ன ஆனது? என்பதுதான் ‘மயிலாஞ்சி’யின்  கதை.

நடிப்பு எப்படி?

நாயகி கிரிஷா குரூப் பார்க்க அழகாக இருக்கிறார், உடைகள் நேர்த்தியாக இருக்கிறது. ஆனால், அவர் கதாபாத்திரத்தில் இருக்கும் அந்த ‘குழந்தைத்தனம்’ கதைக்குச் செட் ஆகவில்லை. படத்தில் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் மட்டும் தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி வரும் இடங்கள் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றன. செந்தி, கலையரசன் கண்ணுசாமி என மற்றவர்கள் வந்து போகிறார்கள்.

தொழில்நுட்பம்:

படத்தில் மிகப்பெரிய ஆறுதல் செழியனின் ஒளிப்பதிவுதான். ஊட்டியின் பசுமையைச் சிதறாமல் அள்ளி வந்து திரையில் கவிதை பாடியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த மேஜிக்கைச் செய்யவில்லை என்றாலும், பின்னணி இசை காதலை மென்மையாகக் கடத்துகிறது.

இன்றைய 2K கிட்ஸ் காதல்கள் மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருக்க, 90ஸ் கிட்ஸ் காலத்து கதையை ஆழமில்லாமல் சொன்னதுதான் படத்தின் பலவீனம். காதல் ரசம் சொட்டும் என்று எதிர்பார்த்துப் போனால், அது வெறும் தக்காளி ரசமாகப் புளித்துவிட்டது.

மார்க்: 2.25 / 5

உடனடி செய்திகள்