June 7, 2023

கொரோனா காரணமாக அக்டோபர் 15 வரை ஹோட்டல்கள் மூடலா? – மத்திய அரசு மறுப்பு

ஊரடங்கால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கி, பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதல் தினக்கூலி தொழிலாளர் கள் வரை வேலை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை , “மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் பெயரில் போலி கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, சுற்றுலாத் துறையினரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து பரப்பப்படுகிறது.

இந்த விவகாரம் சுற்றுலா அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததுள்ளது. சுற்றுலா அமைச்சகத் தினால் அத்தகைய கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற போலிச் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் போலித் தகவல் சுற்றறிக்கை குறித்து சுற்றுலா அமைச்சகம் ஏற்கெனவே சமூக ஊடகங்களில் மறுப்புகளை வெளியிட்டுள்ளதுடன், மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகாரும் அளித்தது. பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் உண்மையறியும் சோதனைப் பிரிவும் சில நாட்களுக்கு முன்பு மறுப்புகளை வெளியிட்டது.

ஆனால் போலிச் செய்தி மீண்டும் பரப்பப்படுகிறது. இதுபோன்ற செய்திகளைப் புறக்கணிக்குமாறும், அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.