கிங்ஸ்டன்- விமர்சனம்!

கடலுக்குள் நடக்கும் திகில் கதை(யாம்). இந்தியாவின் முதல் பேண்டசி அட்வெஞ்சர் திரைப்பட என்றெல்லாம் அவர்களே சொன்னார்கள்.ஆனால் அதை நம்பவே முடியாத அளவில் துளியும் லாஜிக் இல்லாமல் என்னென்னவோ சொல்லப்படுகிறது. தங்கத்தை வைத்து வரும் ஃப்ளாஷ்பேக், கடலுக்குள் செல்பவர்களின் மரணம் என படத்தின் ஆதார புள்ளியிலேயே எந்த நம்பகத் தன்மையோ, நம்மை நிமிர்ந்து அமர செய்யும் அளவுக்கு ஆர்வமூட்டும் விஷயமோ இல்லை. முதல் பாதி வரையில் கூட ஓரளவுக்கு நகரும் கதை, கடலுக்குள் களமிறங்கிய பின்னார் ரசிகனை மிதக்க வைத்து விட்டது இப்பட டீம்.
அதாவது முத்து நகரமான தூத்துக்குடி டிஸ்ட்ரிக்கில் வசித்து வரும் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். குறிப்பாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை எல்லை கடந்து சென்று வேறு ஒரு நாட்டிற்கு கடத்திச் சென்று ஒப்படைக்கும் வேலையை செய்து வருகிறார் கிங்ஸ்டன்.இந்த நேரத்தில் கடல் அட்டைக்குள் போதைப்பொருளை வைத்து கடத்துவதை கண்ட ஜி வி பிரகாஷ், தாமஸை எதிர்க்கிறார். அத்துடன் தனது கிராம எல்லைக்குள் இருக்கும் கடலுக்குள் சென்று அங்கு அமானுஷ்யம் என்பதெல்லாம் கப்சா என்று நிரூபிக்க தனது நண்பர்களோடு கடலுக்குச் செல்கிறார் ஜி வி பிரகாஷ். உடன் ஜி வி பிரகாஷின் காதலியான திவ்ய பாரதியும் செல்கிறார். அந்த கடலுக்குள் இருக்கும் அமானுஷ்யம் என்ன.?? மக்களின் பயத்தை ஜிவி பிரகாஷ் & டீம் போக்கினார்களா.?? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கிங்ஸ்டன்’ படக் கதை.
விநோத டைட்டிலில், வித்தியாசமான கதை என்று நம்பி புரொட்யூஸ் செய்து மீனவ கிராமத்து நாயக இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் கொஞ்சம் கூட மாற்றம் எதுவிமில்லாமல் வழக்கம் போல் தோன்றுகிறார். கூடவே டைரக்டர் சொன்னதை மட்டுமே செய்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அதையும் தனக்கு தெரிந்த அளவில், ஒரே பாணியில் செய்திருக்கிறார். அதிலும் தூத்துக்குடி பாணி என்று ஜிவி பேசுவதை எல்லாம் கேட்கச் சகிக்கவில்லை.ஹீரோயினாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரை திணிப்பதற்காகவே சில காட்சிகள் படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது.அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கேமராமேன் கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், ஆனால் அனைத்தும் கிரீன் மேட் மூலம் கொண்டு வர வேண்டும் என்பதால், அவரது முயற்சி எடுபடவில்லை. நடிகராக சொதப்பி தப்பித்துக் கொண்டே வந்தாலும் இசையமைப்பாளராக சாதித்து வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தனது சொந்த படத்தின் இசையில் பைரட்ஸ் ஆஃப் கரீபியன் டைப்பில் வழங்க நினைத்து இப்படி சொதப்பியிருப்பது படு ஷாக். பாடல்கள் திணிக்கப்பட்டவையாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. பின்னணி இசை பெரும் சத்தத்தோடு காதை கிழித்து தலைவலியை ஏற்படுத்தும்படி அமைந்து விட்டது.
க்ரீன்மேட்டை மேட்ச் செய்ய கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவற்றின் மூலம் படக்குழுவின் உழைப்பு தெரிந்தாலும், அந்த இடங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளின் சொதப்பல் படத்திற்கு முழு பலவீனமாக அமைந்து விட்டது. எழுதி டைரக்டஇயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை ஒட்டி அழுத்தமான கதை மற்றும் பலமான திரைக்கதை இல்லாததால், அவரது ஃபேண்டஸி மற்றும் திகில் காட்சிகள் எதுவும் எடுபடவில்லை.
மொத்தத்தில் கிங்க்ஸ்டன் – வஸந்த் டிவி நேயர்களுக்கான படம்
மார்க் 1.5/5