இந்தியா ஏன் இவ்வளவு நடுங்குகிறது? பனிப்போரின் பின்னணி!

இந்தியா ஏன் இவ்வளவு நடுங்குகிறது? பனிப்போரின் பின்னணி!

புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தியா முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவிலும் கூட முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் வாட்டி வதைத்து வருகின்றன. இது வெறும் ஜனவரி மாத குளிர் மட்டுமல்ல, இதற்குப் பின்னால் ஆர்க்டிக் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை நீளும் மிகப்பெரிய காலநிலை மாற்ற ரகசியங்கள் ஒளிந்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

குளிரில் உறைந்த குருகிராமும்… டெல்லியும்!

கடந்த ஜனவரி 13 அன்று டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்து, அண்மைக் காலத்தின் மிகக் குளிர்ந்த காலைப் பொழுதாகப் பதிவானது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உறைநிலைக்கு அருகில் சென்றன. குறிப்பாக, குருகிராமில் 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். இமயமலைப் பகுதிகளில் இருக்கும் குளிர்ச்சியை விட சமவெளிப் பகுதிகளில் குளிர் அதிகமாக இருப்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

தென்னிந்தியாவையும் துரத்தும் குளிர்: ஏன்?

குஜராத் போன்ற மிதமான வானிலை கொண்ட இடங்கள் முதல் கர்நாடகா வரை இரவு நேர வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி குறைந்துவிட்டது. இதற்கு கேரள பல்கலைக்கழக பேராசிரியர் விஜயகுமார் கூறும் காரணங்கள் இதோ:

  • உயர் அழுத்த மண்டலம்: வட மத்திய இந்தியாவில் நிலவும் உயர் அழுத்த மண்டலத்தால் மேகமற்ற தெளிவான வானம் காணப்படுகிறது. இதனால் சூரிய மறைவுக்குப் பின் பூமியின் வெப்பம் விரைவாக வெளியேறி விடுகிறது.

  • வடமேற்கு காற்று: அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் இருந்து வீசும் வடமேற்கு காற்று, மத்திய ஆசியா மற்றும் இந்தோ-கங்கை சமவெளியில் உள்ள கடும் குளிரை தென்னிந்தியா வரை கொண்டு வருகிறது.

மேற்கத்திய இடையூறுகளும் (Western Disturbances) ஜெட் காற்றோட்டமும்

மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இந்த ‘மேற்கத்திய இடையூறுகள்’ தான் வட இந்தியாவின் குளிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. பூமிக்கு மேல் 9 கி.மீ உயரத்தில் வேகமாக வீசும் ‘ஜெட் ஸ்ட்ரீம்’ (Jet Stream) எனப்படும் காற்று, குளிர்காலத்தில் தெற்கு நோக்கி நகர்வதால், ஆர்க்டிக் பகுதிகளிலிருந்து கடும் குளிரை இந்தியாவுக்குள் இழுத்து வருகிறது.

ஆர்க்டிக் வெப்பமயமாதல்: ஒரு தலைகீழ் மாற்றம்

கொச்சி பல்கலைக்கழக பேராசிரியர் அபிலாஷ் இது குறித்து விளக்குகையில், “ஆர்க்டிக் பகுதி உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது (Arctic Amplification). இதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் குளிரை அங்கேயே பிடித்து வைத்திருக்கும் ‘துருவச் சுழல்’ (Polar Vortex) பலவீனமடைகிறது. பலவீனமான இந்தச் சுழலால் ஆர்க்டிக் குளிர் காற்று ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா போன்ற தெற்குப் பகுதிகளுக்குள் ஊடுருவுகிறது,” என்கிறார்.

லா நினா (La Niña) எனும் மாயாவி

பசிபிக் பெருங்கடலில் நிலவும் ‘லா நினா’ சூழலும் இந்தியாவின் குளிர்க்கு ஒரு முக்கிய காரணம். பசிபிக் கடலின் தற்போதைய குளிர்ச்சி, இந்தியப் பெருங்கடலின் வெப்பத்தைக் குறைத்து, குளிர் அலைகள் வீசுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது. இது 2026 மார்ச் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இயற்கையின் சமநிலை மாறும்போது, எங்கோ ஆர்க்டிக் கடலில் உருகும் பனி, இங்கே தென்னிந்தியாவின் குளிர்காலத்தை மாற்றியமைக்கிறது. பருவமழை குறைந்து மூடுபனி அதிகரிப்பது, புவி வெப்பமயமாதலின் அபாயகரமான அறிகுறியே. இந்த ‘பனிப்போர்’ மனிதர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை மணி இது!

மோங்காபாய்.

Related Posts