சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காப்போர் தினம்!

சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காப்போர் தினம்!

லகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரைக் கௌரவிக்கும் உன்னதமான நாள் இன்று (மே 29). ஆண்டுதோறும் மே 29ஆம் தேதி ‘சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காப்போர் தினம்’ (International Day of United Nations Peacekeepers) உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் மனதாரப் பாராட்டுவதற்கும், சமாதானத்திற்கான இந்த அசாத்தியமான நடவடிக்கைகளின்போது உலகெங்கும் தங்களின் உயிர்களை நீத்த தியாகிகளை ஞாபகமூட்டி அஞ்சலி செலுத்துவதற்காகவும் கடந்த 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இத்தினத்தைப் பிரகடனப்படுத்தியது.

உலகப் போர்களின் வடுக்களும் ஐக்கிய நாடுகள் அவையின் உதயமும்

முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு, உலக நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு போர் வராமல் தடுத்து உலக சமாதானத்தைப் பேண வேண்டும் என்ற நோக்கில் ‘சர்வதேச சங்கம்’ (League of Nations) உருவாக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தச் சங்கத்தால் உலக நாடுகளின் ஆதிக்கப் போட்டியைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனதன் விளைவாகவே, மனித வரலாற்றின் ஆகப்பெரும் கொடூரமான இரண்டாம் உலக மகா யுத்தம் வெடித்தது.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு, உலக நாடுகள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தன. அந்த யுத்தத்தினால் ஏற்பட்ட கோடிக்கணக்கான உயிரிழப்புக்களும், பேரழிவுகளும், சொத்திழப்புக்களும் எவராலும் கணிப்பிட முடியாதவையாக இருந்தன. இந்த அவலமான பின்னணியில், இனிமேலும் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், உலக சமாதானத்தை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும் என்பதிலும் உலகத் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். இதன் அடிப்படையிலேயே, உலகைக் காக்கும் ஒற்றைப் பொது அமைப்பாக ‘ஐக்கிய நாடுகள் அவை’ (UN) தோற்றம் பெற்றது.

அமைதி காக்கும் படையின் அத்தியாவசியப் பணி

ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து, உலகெங்கும் நடக்கும் உள்நாட்டுப் போர்கள், சர்வதேச எல்லை யுத்தங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது தற்காலிகச் சமாதானத்தை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை ஒருங்கிணைத்து வழங்கவும் புதிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதற்காக, ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் அமைதி காப்போர்களையும் (Peacekeepers), தற்காலிகப் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களையும் (Military Observers) பதற்றம் நிறைந்த உலகளாவிய முக்கியப் பகுதிகளில் பணிக்கமர்த்தும் அதிரடி வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிகப் போர் நிறுத்தங்களின்போது, இரு தரப்பும் ஒப்பந்தங்களை மீறாமல் இருப்பதை உறுதி செய்யும் மிக ஆபத்தான பணியினை ஐக்கிய நாடுகள் அவை தனது தொடக்கக் காலத்திலிருந்தே மேற்கொண்டு வருகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே மே 29ஆம் தேதியன்றுதான், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன்முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை – UNTSO) முறைப்படி உருவாக்கியது. இதன் காரணமாகவே இத்தினம் சர்வதேச அமைதி காப்போர் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வரலாற்றில் பதிந்த முதல் உயிர்த்தியாகங்கள்

உலகச் சமாதானத்திற்காகப் பன்னாட்டுக் கூட்டுப் படைகள் களம் கண்ட போது, மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றமான சூழலில் பல வீரர்கள் தங்களின் உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியிருந்தது.

கடந்த 1948ஆம் ஆண்டு அரேபிய – இஸ்ரேலிய யுத்தத்தின் போது, ஐக்கிய நாடுகளின் தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளை மீறி இஸ்ரேலியப் படைகள் அத்துமீறிச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்துத் தீவிர விசாரணையை மேற்கொண்டிருந்த பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் ‘ரென்னே லப்பாரியர்’ (Rene Labarriere) என்பவர் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கி முதன்முதலாக உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது நிகழ்ந்த முதலாவது உயிர்ப்பலி இவருடையதாகும்.

அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, ஜெரூஸலத்தில் மிக இக்கட்டானச் சூழலில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நோர்வே நாட்டைச் சேர்ந்த ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் ‘ஒலே எச் பேக்கே’ (Ole H. Bakke) என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்த கொடூரக் கொலைகளும் நீளும் தியாகப் பட்டியலும்

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முயன்ற சர்வதேசப் படையினரின் தியாகப் பட்டியல் அத்தோடு நின்றுவிடவில்லை. 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி, காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் அவையின் உத்தரவின் பேரில் சேவையாற்றிக் கொண்டிருந்த லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற இரண்டு பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மேலும் ஆறு சர்வதேசப் படை வீரர்கள் படுகாயமுற்றனர்.

அதேபோல 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, கவுண்ட் போர்க் பெர்னடொட் (Count Folke Bernadotte) எனும் ஐக்கிய நாடுகளின் முக்கிய அமைதி காக்கும் தூதர், அங்கு செயல்பட்டு வந்த தீவிரவாத இயக்கமான “STERN GANG” (ஸ்டர்ன் கேங்) எனும் கும்பலினால் படுகொலை செய்யப்பட்டார்.

உலக அமைதியின் பின்னால் இருக்கும் கசப்பான உண்மைகள்

மத்திய கிழக்கு மண்ணில் அமைதியை விதைக்கச் சென்ற சர்வதேச வீரர்களுக்குத் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தல்களே மிஞ்சின. 1958ஆம் ஆண்டு நடந்த அரேபிய – இஸ்ரேலியப் போர், 1973 அரேபிய – இஸ்ரேலியப் போர் மற்றும் 2008ஆம் ஆண்டு வெடித்த இஸ்ரேலிய – லெபனன் போர் போன்றவற்றில் கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளர்கள் பலரும் கொடூரமான முறையில் குறிவைக்கப்பட்டனர். இவர்களில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் (UNIFIL) சேர்ந்த 300க்கும் அதிகமான வீரர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றுப் பதிவுகளின்படி, இந்தத் தாக்குதல்களிலும் கொலைகளிலும் அதிகமானோர் இஸ்ரேலியப் படைகளாலேயே கொல்லப்பட்டனர் என்பதும், ஐக்கிய நாடுகளின் தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளைத் தொடர்ந்து மீறிச் செயற்பட்டவர்கள் இஸ்ரேலியர்கள் என்பதும் உலக அரங்கில் மறைக்க முடியாத கசப்பான உண்மையாகும்.

தங்கள் சொந்த தேசம், சொந்தக் குடும்பம் என அனைத்தையும் துறந்து, முகமறியாத மனிதர்களின் அமைதியான வாழ்விற்காக முள் படுக்கையான போர்க்களங்களில் நின்று, அநியாயமாகக் கொல்லப்பட்ட இந்த அமைதி காக்கும் மாவீரர்களின் தியாகங்களை உலகிற்கு உரக்கச் சொல்வதே இந்தச் சர்வதேச நாளின் உண்மையான நோக்கமாகும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts