மறைந்த இயக்குநரின் கனவு நனவானது: ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்!

மறைந்த இயக்குநரின் கனவு நனவானது: ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்!

மீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘கெணத்த காணோம்’ திரைப்படம். ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரிப்பில், ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான இந்தப் படம், இன்று ஒரு முக்கியமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, படம் ரிலீஸாவதற்கு முன்பே இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். இந்தச் சூழலில், படத்தின் வெற்றியைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள படக்குழுவினர் ஒன்று கூடினர்.

“சாமானிய மக்களின் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்” – யோகி பாபு

விழாவில் பேசிய நாயகன் யோகி பாபு, “இந்தப் படம் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இன்று அது நிஜமாகியுள்ளது. ஒரு இயக்குநர் இல்லாத நிலையிலும், இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களையே சாரும்.

வழக்கமான காமெடி வேடங்களைத்தாண்டி, இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க எனக்கு ஊக்கம் கொடுப்பதே நீங்கள்தான். தரமான தயாரிப்பாளர் ரமேஷ் பாபு இன்னும் பல நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும். மக்களின் எதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கண்ணீரும் புன்னகையும் கலந்த தருணம் – லவ்லின் சந்திரசேகர்

கதாநாயகி லவ்லின் சந்திரசேகர் பேசுகையில், “வெற்றி ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், இயக்குநர் நம்முடன் இல்லையே என்ற வேதனை நெஞ்சில் பாரமாக இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். இந்தப் படத்தில் எனது நடிப்புக்குக் கிடைத்துள்ள வரவேற்பு எனக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்துவிட்டது,” என்றார்.

வெயிலையும் பொருட்படுத்தாத இயக்குநரின் உழைப்பு!

ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன் மற்றும் படத்தொகுப்பாளர் ராமர் ஆகியோர் பேசும்போது, படப்பிடிப்பு தளத்தில் நடந்த உருக்கமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“கடும் கோடை வெயிலில், உடல்நிலை சரியில்லாமல் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு வந்து கூட சுரேஷ் சங்கையா வேலை பார்த்தார். படத்தின் மீது யோகி பாபு சார் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் இன்று இந்த வெற்றிக்குக் காரணம்,” எனப் படக்குழுவினர் நெகிழ்ந்தனர்.

ஒரு நல்ல கலைஞனின் உழைப்பு வீண் போகாது என்பதற்கு ‘கெணத்த காணோம்’ படத்தின் வெற்றியே சாட்சி!

Related Posts