‘இதயம் முரளி’ வெற்றி விழாத் துளிகள்!
டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து மற்றும் இயக்கத்தில், அதர்வா முரளி நடிப்பில் உருவான ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தங்களது நன்றியினைத் தெரிவித்தனர்.
90ஸ் நாஸ்டால்ஜியாவும் மைக்ரோ டீட்டெய்லிங்கும்
இன்றைய தலைமுறையினர் பழைய நினைவுகளை மறந்துவரும் சூழலில், முந்தைய காலத்து உணர்வுகளையும் நினைவுகளையும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் அழகாக மீட்டெடுத்துள்ளார் என மூத்த கலைஞர் சின்னி ஜெயந்த் பாராட்டினார். படம் பார்க்கும்போது ஒரு தரமான இந்திப் படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா பேசுகையில், “இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்து ரசித்த சிறிய விஷயங்களைக் கூட நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு கேசட், ஒரு கோக் கேன் போன்ற பொருட்களைக் கூட எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய ‘மைக்ரோ டீட்டெய்லிங்’ படத்தின் பலம்” என்றார். இந்த உணர்வுகளை ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோர் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

பள்ளி இறுதிநாள் போன்ற உணர்வு: அதர்வா முரளி நெகிழ்ச்சி
நாயகன் அதர்வா முரளி பேசுகையில், “பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சி போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. ‘இதயம்’ என்றாலே அனைவருக்கும் ஒரு ஆழமான காதல் கதைதான் நினைவுக்கு வரும் என்பதால், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு முதலில் பொருந்துமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், ‘என்னை நம்புங்கள் பிரதர்… இது நல்ல படமாக வரும்’ என்று இயக்குநர் ஆகாஷ் சொன்னதை இன்று முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். இந்தத் தலைப்பின் மூலம் என் அப்பா முரளிக்கு ஒரு சிறிய மரியாதை செலுத்த வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்; அதை ஒரு நண்பராக ஆகாஷ் மிகவும் அழகாக செய்து காட்டியிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
கடந்த 15 ஆண்டுகளாக அதர்வா தனது தோற்றம், உடற்தகுதி மற்றும் நடிப்பை ஒரே ஒழுக்கத்துடன் பராமரித்து வருவதை படக்குழுவினர் வெகுவாகப் பாராட்டினர். நடிகர் முரளியுடன் இணைந்து நடித்த நினைவுகளை அதர்வாவுடன் நடிக்கும்போதும் உணர முடிந்ததாக சின்னி ஜெயந்த் நெகிழ்ந்தார்.
திரைக்குப் பின்னால் உழைத்த தொழில்நுட்பக் குழு
இப்படத்தின் நீளமான காட்சிகளை இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக எடிட்டர் பிரதீப் கச்சிதமாக வடிவமைத்துள்ளார். “நாங்கள் டப்பிங் செய்த காட்சிகள் மட்டும் நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தன. இத்திரைப்படம் எடிட்டிங் மேசையில்தான் முழுமையான வடிவத்தைப் பெற்றது” என அதர்வா குறிப்பிட்டார்.
வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் எழுதிய வசனங்கள் மற்றும் டிரெய்லர் வரிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. மேலும், தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் அமைத்த மொட்டைமாடி செட்கள், உடை வடிவமைப்பாளர் பல்லவி மற்றும் மீனாட்சி குழுவினரின் ஆடைகள், கபிலனின் போஸ்டர் வடிவமைப்பு, சுரேன் அவர்களின் ஒலிக்கலவை ஆகியவை படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளதாக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் நன்றியுடன் பகிர்ந்துகொண்டார்.
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமனின் புதிய பரிமாணம்
திங் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், “இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. ஆரம்பத்தில் சொன்னபடியே இயக்குநர் அனைத்துப் பாடல்களையும் படத்தில் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த ஸ்ட்ரீமிங் ஆல்பமாக இது இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் எஸ். தமன், இப்படத்தின் கான்செப்ட் டிரெய்லரைப் பார்த்தவுடனேயே இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். இசையமைப்பது மட்டுமின்றி, இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் தமன் நடித்துள்ளார். “நான் நடிகனாக வேண்டும் என்று நினைக்கவில்லை, மனோஜ் வற்புறத்தலால் தான் நடித்தேன்” என்று தமன் ஜாலியாகக் குறிப்பிட்டார். படம் குறித்து எப்போது சந்தேகம் வந்தாலும் தமன் சார், ‘ப்ளாக்பஸ்டர்… ப்ளாக்பஸ்டர்!’ என்றே ஒற்றை வார்த்தையில் நம்பிக்கை கொடுத்ததாக அதர்வா நினைவு கூர்ந்தார்.
ஷூட்டிங் ஸ்பாட்டை சொந்த வீடாக்கிய ‘பாய்ஸ் குரூப்’
படப்பிடிப்பு தளம் ஒரு கல்லூரி வளாகம் போல கலகலப்பாக இருந்ததாகக் குறிப்பிட்ட படக்குழு, ரக்ஷன், ஏஞ்சல், டிராவிட் மற்றும் சுதாகர் ஆகியோரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தினமும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டது ஒரு குடும்ப உணர்வை ஏற்படுத்தியதாக அதர்வா கூறினார். “காட்சி இல்லாத நாட்களிலும் லஞ்ச் சாப்பிட செட்டுக்கு வந்துவிடுவோம்” என்று ரக்ஷன் ஜாலியாகக் குறிப்பிட்டதை அதர்வா மேடையில் பகிர்ந்துகொண்டார்.

குறிப்பாக, யூடியூப் தளத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைந்துள்ள டிராவிட், இப்படத்தில் உதவி இயக்குநராகவும், வசன எழுத்தாளராகவும், நடிகராகவும் தன் பன்முகத்திறமையை நிரூபித்துள்ளார். “இனி என் வாழ்க்கையை ‘இதயம் முரளிக்கு முன், பின்’ என்று பிரிக்கலாம்” என டிராவிட் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். அதேபோல், நடிகர் சுதாகரின் நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
அமுதாவும் சாமும்: நாயகிகளின் அர்ப்பணிப்பு
இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் நடிகை கயாது லோகர். ஆரம்பத்தில் லுக் டெஸ்ட் மாற்றிக் செய்யப்பட்டாலும், இறுதியில் தனக்குக் கிடைத்த ‘அமுதா’ கதாபாத்திரம் தன் மனதிற்கு நெருக்கமானது என்றார். மற்றொரு நாயகியான ப்ரீத்தி முகுந்தன், கடந்த இரண்டரை ஆண்டுகால கூட்டு உழைப்பின் வெற்றியாக இந்த மேடை அமைந்துள்ளதாகக் கூறி இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த கயாது லோகர், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன், மோனிஷா, ஏஞ்சலின் போன்ற திறமைகளைத் தனது படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதில் பெருமையடைவதாக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்தார். திரையில் இவர்களின் நடிப்பும், அதர்வாவுடனான கெமிஸ்ட்ரியும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசுகையில், இயக்குநர் ஆகாஷ் 2018 முதல் இந்தத் திரைக்கதைக்காகப் போராடி, இறுதியில் அவரே தயாரிப்பாளராக மாறி சமரசமின்றி பிரம்மாண்ட செட்கள் அமைத்துப் படத்தை உருவாக்கியுள்ளார் என்று பாராட்டினார். நட்டி (நடராஜ்), மதன், மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் இந்த வெற்றியைத் தங்களுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


