வில்லன் இல்லாத ஃபேமிலி மூவி: நயன்தாரா – கவினின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் முதன்முறையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகர் கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு பிரத்யேக ப்ரோமோ காணொளி மூலம் அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
வில்லன்களே இல்லாத குடும்பக் கொண்டாட்டம்
‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றிய விஷ்ணு எடவன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து அவர் பேசுகையில், “ஹாய் திரைப்படம் பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான ஒரு படைப்பு. ரசிகர்கள் தங்களின் குடும்பத்துடன் இரண்டே கால் மணி நேரம் தியேட்டரில் ஜாலியாக ரசிக்கும்படி பொழுதுபோக்கு அம்சங்களுடன் இது தயாராகியுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று ஊர்களின் பின்னணியில் இதன் கதை நகர்கிறது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ பாணியில் வில்லன்களே இல்லாத ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நட்சத்திரப் பட்டாளமும் பலமான கூட்டணியும்
இப்படத்தில் நயன்தாரா, கவினுடன் இணைந்து கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பையும், எஸ். கண்ணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி மில்லியன் கணக்கில் வியூஸ்களைக் குவித்து ஹிட் அடித்துள்ளது. பாடலின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு, ரசிகர்கள் மற்றும் திரையுலக வணிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.


