காலத்தின் விரல் பிடித்து ஆடும் மரப்பாவைகள்:உலகப் பொம்மலாட்டம் நாள் சிறப்புப் பார்வை

காலத்தின் விரல் பிடித்து ஆடும் மரப்பாவைகள்:உலகப் பொம்மலாட்டம் நாள் சிறப்புப் பார்வை

திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் ஒரு மெல்லிய நூலிழையில், உயிரற்ற மரக்கட்டை உயிர் பெற்று எழுந்து நவரசங்களையும் கொட்டும் விந்தைதான் ‘பொம்மலாட்டம்’. சங்க இலக்கியங்கள் போற்றும் ‘பாவைக்கூத்து’ முதல் இன்றைய நவீன மேடைகள் வரை, மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு மாயக்கண்ணாடியாக இக்கலை திகழ்கிறது. “ஆட்டுவிப்பார் யாரெனில் ஆடுபவர் யாரோ” என்ற தத்துவத்திற்குத் தசை வடிவம் கொடுத்த தமிழர்களின் இந்தத் தொன்மையான மரபுவழிக்கலை, இன்று உலகளாவிய அங்கீகாரத்துடன் தனது இருப்பைப் பதிவு செய்கிறது.

உலகப் பொம்மலாட்ட நாள்: ஒரு வரலாற்றுப் பயணம்

ஈரானைச் சேர்ந்த புகழ்பெற்ற பொம்மலாட்டக் கலைஞர் ஜாவத் ஸோல்ஃபகாரி அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனையில் உருவானதுதான் இந்த உலகப் பொம்மலாட்டத் தினம். 2000-ஆம் ஆண்டு யுனிமா (UNIMA) உலக மாநாட்டின் போது அவர் முன்வைத்த ஆலோசனையைத் தொடர்ந்து, 2002-இல் அட்லாண்டாவில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மார்ச் 21-ஆம் தேதி இதற்கான நாளாக அறிவிக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று முதல் அதிகாரப்பூர்வ உலகப் பொம்மலாட்ட தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

2026-ன் கருப்பொருள்: வாழ்வின் ஒளியின் கொண்டாட்டம்

இந்த ஆண்டிற்கான தீம் (Theme), “வாழ்வின் ஒளியின் கொண்டாட்டம் — ஹைனாவின் கனவு” (Celebration of the Light of Life — The Hyena’s Dream) என்பதாகும். மாலியைச் சேர்ந்த மாபெரும் கலைஞர் Yaya Coulibaly அவர்களால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பிரான்சின் சார்லவில்-மெசியர் (Charleville-Mézières) உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற இடங்களில் மார்ச் 18 முதல் 26 வரை பிரம்மாண்டமான கலை நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

பாரத தேசத்தின் பன்முகப் பெயர்கள்

தமிழர்களின் மரபுவழிக் கலையான இது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மண்ணின் வாசத்தோடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது:

மாநிலம் பொம்மலாட்டத்தின் பெயர்
தமிழ்நாடு பொம்மலாட்டம் / மரப்பாவைக்கூத்து
ஆந்திரா கொய்யா பொம்மலாட்டா
கர்நாடகம் சூத்ரதா கொம்பயேட்டா
ஒரிசா கோபலீலா
மேற்கு வங்கம் சுத்தோர் புதூல்
அசாம் புதலா நாச்
இராசஸ்தான் காத்புட்லி
மகாராட்டிரம் காலாசூத்ரி பகுல்யா

ஆங்கிலத்தில் இதனை மேரியோனெட்டு (Marionette) என்று குறிப்பிடுவர்.

அரங்கின் அமைப்பு மற்றும் கலை நுணுக்கங்கள்

ஒரு பொம்மலாட்ட நிகழ்வு என்பது கூட்டு உழைப்பின் உச்சம். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட, மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் இது நிகழ்த்தப்படும்.

  • கலைஞர்கள்: மொத்தம் 9 பேர். இதில் 4 பேர் பொம்மைகளை இயக்குபவர்கள், 4 பேர் இசைக்கலைஞர்கள், ஒருவர் உதவியாளர்.

  • இசைக்கருவிகள்: ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், கைத்தாளம் மற்றும் முகவீணை. தற்போது சிலர் மின் இசைக்கருவிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

  • பொம்மை உருவாக்கம்: கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை மரத்தில் பொம்மைகள் செய்யப்படுகின்றன. மரத்தை நீரில் ஊற வைத்து, உலர வைத்து, பின் தலை, கை, கால் எனத் தனித்தனியாகச் செதுக்கி இணைப்பார்கள். 45 செ.மீ முதல் 90 செ.மீ உயரம் கொண்ட இப்பொம்மைகளுக்குப் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப வண்ணம் தீட்டப்படும். ஆரம்பத்தில் மஞ்சள் வண்ணம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், இன்று பல வண்ணங்கள் மற்றும் நவீன உடைகள் அணிவிக்கப்படுகின்றன.

இயக்க முறைகளும் பாணிகளும்

பொம்மைகளை இயக்குவதில் இரண்டு நேர்த்தியான முறைகள் உள்ளன:

  1. உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி இயக்குவது.

  2. கயிறுக்குப் பதில் கம்பிகளைப் பிணைத்து, ஒரு வளையத்தில் இணைத்து இயக்குபவர் தனது தலையில் மாட்டிக் கொண்டு இயக்குவது.

தமிழகத்தில் கும்பகோணம் பாணி (கர்நாடக இசை, சங்கரதாசு சுவாமிகள் நாடகப் போக்கு, கம்பி இயக்கம்) மற்றும் சேலம் பாணி (முகவீணை இசை, கயிறு இயக்கம்) என இருவேறு பாணிகள் இன்றும் அடையாளமாக உள்ளன.

இதிகாசமும் வாழ்வியலும்

அருணகிரி நாதர் வரலாறு, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் என இதிகாச மற்றும் சரித்திரக் கதைகளே இங்கு பிரதானம். எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில் கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம் அல்லது பாம்பாட்டம் என ஏதேனும் ஒரு நாட்டுப்புறக் கலையை நிகழ்த்துவது இக்கலையின் மாறாத மரபு.

அழியும் நிலையில் ஒரு பொக்கிஷம்

நவீனத் தொழில்நுட்பம் மற்றும் ஊடகங்களின் ஆதிக்கத்தால், இக்கலையை நிகழ்த்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மற்றும் சென்னை பகுதிகளில் மிகச் சில கலைஞர்களே எஞ்சியுள்ளனர்.

உயிரற்ற பொம்மைகள் உயிர் பெற்று ஆடும் இந்த அற்புதமான கலை, வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது நம் முன்னோர்களின் வாழ்வியல் அடையாளம். இந்த உலகப் பொம்மலாட்ட நாளில், இந்தக் கலையை மீட்டு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் கைகோர்க்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts