32°C
விளம்பரம்
Advertisement

ஆர்யா-வின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா?

admin சேலம் Published: March 20, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நடிகர் ஆர்யா பங்கேற்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்தை புண்படுத்துவதாகவும் அதனால் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவின் முழு விவரம் பின்வருமாறு:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பங்கேற்கும் 18 இளம் பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை நடிகர் ஆர்யா தேர்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்நடத்தப்படுகின்றன. இது பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா போட்டியில் பங்கேற்கும் பெண்களை தேர்வு செய்வது, நீக்குவது என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு சட்டத்தின் படி பாலியல் சமத்துவம் மீறலாகும். பெண்களை காட்சிப்பொருளாகக் காண்பிக்கின்றனர்.

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெண்கள் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியை தொடர அனுமதித்தால் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சூழல் ஏற்படும்.

எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன், சேனல் தலைமைச் செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சங்கீதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்