தமிழ் குரல் / AI Voice
இந்தியச் சிறுவர் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த ‘அம்புலிமாமா’ (தெலுங்கில் ‘சந்தாமாமா’) மாத இதழ், 1947-ஆம் ஆண்டு பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களான பி.நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி ஆகியோரால் தொடங்கப்பட்டுப் பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான சிறுவர்களின் கற்பனை உலகை வளர்த்தெடுத்த ஒரு மகத்தான படைப்பாகும். விக்ரமாதித்தன் – வேதாளம் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், இந்திய இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் உலகநாடுகளின் நாட்டுப்புறக் கதைகளை வண்ணமயமான மற்றும் தனித்துவமான சித்திரங்களுடன் மிக எளிய தமிழில் வழங்கி, குழந்தைகளுக்குச் சிறந்த அறநெறிகளையும், ஒழுக்கத்தையும், சுவாரஸ்யமான வாசிப்புப் பழக்கத்தையும் இது கற்றுக்கொடுத்தது. சித்ரா, சங்கர் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் தத்ரூபமான சித்திரங்கள் இக்கதைகளுக்கு மேலும் உயிர் சேர்த்த நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் வெளியாகி தலைமுறை கடந்து வாசகர்களின் நெஞ்சில் நீங்காத நினைவாக நிலைத்து நின்றதெல்லாம் அறியாத இப்போதைய Z தலைமுறைக்காக எடுக்கப்பட்ட ஒரேயொரு அம்புலிமாமா கதைதான் ட்ரோன்ஸ்.
கதை களமும், திரைக்கதை போக்கும்!
கல்லூரியிலிருந்து அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்யப்படும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே. தீபக் கூட்டணி, வீட்டாருக்குத் தெரியாமல் சமாளிக்க ரகசியமாகத் தங்குவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் தான் அந்த அறிவியல் பரிசோதனைக் கூடமான ‘பிளாக் ஹோல்’. ஆனால், தற்செயலாக உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொள்ள, துயரத்தின் உச்சத்தில் ஒரு டிரோன் கேமராவின் வழியே வெளியுலகைப் உற்று நோக்குகிறார்கள். அங்கே தேவதூதனைப் போல வலம்வரும் சித்தி இத்னானியின் மீது டிராவிட் செல்வத்திற்குக் காதலின் தீப்பற்றிக் கொள்கிறது; ஆனால், பேத்தியைக் காதலிக்கும் இவர்களைச் சூனியக்காரி போன்ற மிரட்டலான தோற்றத்தில் சிறைப்பிடிக்கிறார் பாட்டி தேவதர்ஷினி! மறுபுறம், காணாமல் போன மாணவர்களைத் தேடிப் புறப்படும் காவற்துறை அதிகாரி ‘சினிமாவாலா’ சதீஷ் உள்ளிட்டோர் அந்த அமானுஷ்ய இடத்திற்குள் கால்பதிக்கின்றனர். திருமணம் தள்ளிப்போன ஏக்கத்திலோ என்னவோ, அவரும் அந்த அழகி சித்தி இத்னானியின் சாம்ராஜ்யத்தில் மயங்கி அவளைக் காதலிக்கத் தொடங்குகிறார். இப்படிப் பலரும் அந்தப் பெண்ணின் பேரழகில் வீழ்ந்து காதலில் சிக்க, அந்த வசீகர முகத்திற்குப் பின்னால் கோரமான ஒரு மர்மமும், அதைக் கடந்த ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையும் மறைந்திருக்கிறது. அந்த அதிர்ச்சிகரமான ரகசியம் என்ன? உண்மை வெளிவந்ததும் காதலிக்கத் துடித்தவர்களின் நிலை என்னவானது? ஆபத்தில் சிக்கிய மாணவக் கூட்டத்தின் கதி என்ன? போன்ற கேள்விகளுக்கு வெறும் நகைச்சுவை கலாட்டாவோடுமட்டுமின்றி, ஆழமான சமூகச் சிந்தனையோடும் கலகலப்பாகப் பதிலளிக்க முயல்கிறது இந்த ‘ட்ரோன்ஸ்’!
நடிப்பும் கதாபாத்திரங்களும்
சித்தி இத்னானி: தோற்றத்தில் தேவதையாக இதயங்களைக் கொள்ளையடிப்பதோடு, நடிப்பின் ஆக்ரோஷத்தில் அசுரத்தனமான வெளிப்பாட்டைக் காட்டி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்க்கிறார்.
அஞ்சலி நாயர்: நிறவெறி மற்றும் பாலினப் பாகுபாடு பேசும் மனப்போக்குகளுக்குத் தன் தீர்க்கமான நடிப்பால் சாட்டையடி கொடுத்துள்ளார். கதாபாத்திரத்தின் கன பரிமாணத்தைப் புரிந்து கொண்டு, உணர்வுப்பூர்வமான நடிப்பால் கைதட்டல்களை அள்ளுகிறார்.
டிராவிட் செல்வம்: நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வாய்ந்த தன் பாத்திரத்தின் தன்மையைச் சரியாக உணர்ந்து, துள்ளலான நடிப்பால் அந்த இடத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
தேவதர்ஷினி: அமானுஷ்ய சூனியக்காரி வேடத்தில் புதிய பரிமாணத்தைத் தொட்டுள்ளார். அவரது பல ஆண்டுகால நடிப்பு முதிர்ச்சியும், அர்ப்பணிப்பும் அந்த விசித்திரக் கதாபாத்திரத்தை வேறொரு தளத்திற்கு உயர்த்தியிருக்கிறது.
சினிமாவாலா சதீஷ்: கம்பீரமான காவல் அதிகாரியாக மிகை இல்லாத, இயல்பான நடிப்பை வழங்கி முத்திரை பதிக்கிறார்.
குரேஷி: அவர் திரையில் தோன்றும் தருணங்களிலெல்லாம் அரங்கத்தில் சிரிப்பலைகளைப் பரப்புகிறார்.
ஆர்.ஜே. தீபக் மற்றும் சசி செல்வராஜ்: தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை மிக நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு
ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு: சுருங்கிய இடப்பரப்பு என்ற எல்லை இருந்தாலும், தன் லென்ஸ் கோணங்களால் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான காட்சிகளைப் படம்பிடித்துள்ளார்.
ஹரி எஸ்.ஆர். இசை: களத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, சூழலுக்கு ஏற்ற பின்னணி இசையால் காட்சிகளுக்குக் கூடுதல் உத்வேகம் சேர்த்துள்ளார்.
சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு: திரைக்கதையின் வேகத்தைக் குறையவிடாமல், விறுவிறுப்பான ஓட்டத்தைத் தரக் கத்தரியைக் கவனமாகக் கையாண்டுள்ளார்.
ஆர்.கிஷோரின் கலை இயக்கம்: கதையின் திகில் அமானுஷ்யத் தன்மைக்கு வலுசேர்க்கும் வகையில், விசித்திரமான மற்றும் புதுமையான அசைவுகளை உள்ளடக்கிய பொருள்களை வடிவமைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நிறைகுறைகள்
பாட்டி கதைகளின் சுவாரஸ்யத்தோடு விண்வெளிப் பறக்கும் தட்டின் அதீத கற்பனையையும் இணைத்துத் திரைக்கதையாக உருவாக்கியிருக்கும் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத், அதில் மாயவழகி, அமானுஷ்ய சூனியக்காரி, அறிவியல் ஆராய்ச்சிக்கூடம் ஆகிய திகில் அம்சங்களை மட்டுமல்லாமல் தோலின் நிறத்தை வைத்து உருவாக்கப்படும் சமூகப் பாகுபாட்டையும் சாட்டையடியாகப் பேசியுள்ளார். நாம் காலம் காலமாக வாசித்து வந்த அழகி – பேய் கதைகளின் வழக்கமான பாணியை உடைத்தெறிந்து, அதற்கு ஒரு புதுமையான அறிவியல் வடிவத்தைக் கொடுத்துத் நகைச்சுவை மிளிரக் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.
திரைப்படத்தின் ஆரம்பக்கட்டக் காட்சிகள் சற்று மெதுவாக நகர்ந்து ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தாலும், பிற்பகுதி எதிர்பாராத பல அதிரடித் திருப்பங்களுடன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சாதிய, நிறப் பாகுபாடுகளை மிக ஆழமாக ஆராயாமல் மேலோட்டமாகத் தொட்டுச் சென்றாலும், அதைச் சிரிப்பலைகளுக்கு நடுவே சிந்தனை தூண்டும் வகையில் கொண்டு சேர்த்ததில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்தோடு கண்டு மகிழக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படைப்பாக இந்தப் படம் பரிணமித்துள்ளது.
மொத்தத்தில் முழு குடும்பத்தோடு போய் பார்க்க தகுந்த சினிமாவிது
மார்க்: 3.5 / 5
