32°C
விளம்பரம்
Advertisement

சட்டமும் நீதியும் 2- விமர்சனம்!

admin சேலம் Published: October 22, 2026 5 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



சமூகத்தில் தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுத்து அமைதியை நிலைநாட்டவும் சட்டம் மற்றும் நீதி இரண்டும் இரு கண்களாகச் செயல்படுகின்றன. சட்டம் என்பது அரசால் வரையறுக்கப்பட்ட விதிகளின் தொகுப்பாகும்; நீதி என்பது அந்தச் சட்டத்தை எவ்வித பாரபட்சமுமின்றி அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தி முறையான தீர்வு வழங்கும் அறநெறியாகும். காலத்திற்கேற்பச் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பச் சட்டங்கள் திருத்தப்பட்டாலும், ஏழை எளியவர்களுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் உரிய நேரத்தில் பாரபட்சமின்றிச் நீதி கிடைப்பதில் பல இடர்பாடுகள் உள்ளதை ‘சட்டமும் நீதியும்’ தொடரின் முதல் சீசன் அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டி கவர்ந்தார்கள். அத் தொடரின் யதார்த்தமான கதை சொல்லல் மற்றும் அதிகாரம் மிக்கவர்களின் நலன்களுக்குச் சவால் விடுக்கும் ஒரு வழக்கை எதிர்கொள்ளும் சாதாரண வழக்கறிஞரின் கதையை மையமாகக் கொண்டு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதில் சட்டத்தை வளைக்கும் சூழலுடன் வாவ் சொல்ல வைக்கும் அடுத்த தொடரை அதே போல வழங்கி அசத்தியுள்ள்ளார்கள்.

கதையும், களமும்

பார் கவுன்சில் தலைவரான பிரபல பெண் வழக்கறிஞரின் கணவரும், உயர் போலீஸ் அதிகாரியுமான ஒருவர் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் ஆவடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட போலீசார் கைது செய்யப்படுகின்றனர். தாங்கள் திட்டமிட்டுச் சிக்க வைக்கப்பட்டதாக அவர்கள் கதறினாலும், அதிகாரத்தின் செல்வாக்கு காரணமாக அவர்களுக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் முன் வரவில்லை. இந்த இக்கட்டான சூழலில், மகளின் திருமணம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளில் தவிக்கும் சாதாரண நோட்டரி பப்ளிக் சுந்தரமூர்த்தி, “ஏழைகளுக்கு நீதி கிடைக்காதா?” என்ற கைதான போலீஸ்காரரின் மனைவியின் கேள்வியால் மனம் மாறி, ஆபத்துகள் நிறைந்த வழக்கைக் கையில் எடுக்கிறார்.

விசாரணையில் இறங்கும் சுந்தரமூர்த்திக்கு, கொல்லப்பட்ட உயர் அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம், நேர்மையின்மை, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான மோதல்கள் எனப் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவருகின்றன. மிரட்டல்கள், பண ஆசை காட்டும் முயற்சிகள் என எதிர்ப்புகள் பல வந்தாலும், நேர்மையில் உறுதியாக நிற்கும் அவர், இளம் உதவி வழக்கறிஞர் லாவண்யாவின் துணையுடன் மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்கப் போராடுகிறார். இது கொலையா, தற்கொலையா? கைதான போலீசார் உண்மையிலேயே குற்றவாளிகளா? அதிகாரத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுடன் அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க சுந்தரமூர்த்தி நடத்தும் சட்டப் போராட்டமே கதையின்  களம்!

நடிப்பு, பாத்திரங்களும்

சுந்தரமூர்த்தியாக சரவணன்: கடந்த சீசனில் சாதாரண நோட்டரி பப்ளிக்காக நீதி கேட்டுப் போராடியவர், இந்த முறை ஒரு மாபெரும் குற்றப் பின்னணி கொண்ட வழக்கின் சூட்சுமங்களை அவிழ்க்கப் போராடுகிறார். தேவையற்ற தடயங்களைத் தோண்டி எடுப்பது, எதிர் தரப்பு வழக்கறிஞரின் கூர்மையான வாதங்களைச் சற்றும் தளராமல் எதிர்கொள்வது, வறுமையிலும் லஞ்சத்திற்குத் தலைவணங்காத நேர்மை, இறுதி நொடிகளில் குற்றவுணர்ச்சியால் மனம் தவிப்பது எனத் தன் பரிமாணங்களை மாற்றி முத்திரை பதித்துள்ளார்.

சந்திராவாக வரலெக்ஷ்மி சரத்குமார்: கணவனை இழந்தவளின் ஆவேசத்தை வழக்கமான சினிமா பாணியில் மேலோட்டமாக வெளிப்படுத்தாமல், ஒரு திறமையான வழக்கறிஞரின் கம்பீரத்தோடும் அடக்கப்பட்ட கோபத்தோடும் திரையில் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. எல்லை மீறாத நடிப்புப் பாணி கதாபாத்திரத்திற்கு அசல் பலம் சேர்த்துள்ளது.

காவலர்களின் யதார்த்த முகம்: இன்ஸ்பெக்டராக வரும் பிரேம், சப் இன்ஸ்பெக்டர்களாக வலம்வரும் கவிதா பாரதி மற்றும் ஆறுபாலா ஆகியோர், அதிகாரம் கையில் இருக்கும்போது காவல்துறை எந்தளவுக்குத் திமிர்த்தனமாக மாறக்கூடும் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

உள்ளம் கவரும் பிற நடிகர்களின் பங்களிப்பு:

ஷவின்: கொலை வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாகத் தன் கெத்தான நடிப்பால் ஈர்க்கிறார்.

கல்லூரி வினோத்: குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக வந்து, விபத்தில் தன் சொந்த மகனைப் பறிகொடுத்த ஒரு தந்தையின் பரிதவிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்.

லாவண்யா மற்றும் குழு: சுந்தரமூர்த்திக்குத் துணையாக நிற்கும் ஜூனியர் வழக்கறிஞராக லாவண்யாவும், உடன் நடித்த மற்றவர்களும் கதைக்களத்திற்குத் தேவையான பலத்தைத் தந்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைனர்களின் பங்களிப்பு

கண்களைக் கவர்ந்த காட்சியமைப்பு: எஸ். கோகுலகிருஷ்ணனின் கேமரா வெறும் காட்சிகளை மட்டும் பதிவு செய்யவில்லை; மாறாக, ஒரு தனித்துவமான மொழி மூலம் கதையின் தீவிரத்தையே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. குறிப்பாக, அவர் கையாண்டுள்ள ஒளி மற்றும் நிழலின் விளையாட்டுகள் ஒவ்வொரு காட்சியின் ஆழத்தையும், கதாபாத்திரங்களின் மன உளைச்சல்களையும் மிகத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இதயத்துடிப்பை உயர்த்தும் இசை: விபின் பாஸ்கரின் இசை இந்தத் தொடரின் மற்றொரு முக்கிய பலம். நீதிமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் வாதங்களையும், வழக்கறிஞர்களின் உணர்ச்சிப்பூர்வமான முகபாவனைகளையும் இசை மூலமாக நேர்த்தியாகச் செதுக்கியுள்ளார். காட்சிகளின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க இவரது பின்னணி இசை பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

சிறப்பான படத்தொகுப்பு: “ஒரு கொலையும் அதன் பின்னணியும்” என்ற எளிய ஒற்றைக் வரிக்கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு அத்தியாயமும் முடியும் தருவாயில் “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்பைப் பார்வையாளர்களின் மனதில் விதைப்பதில் எடிட்டர் ஆதிஸ்வரன்.ஆர் முழுமையாக வெற்றி பெற்றுள்ளார். காட்சிகளைத் கோர்த்திருக்கும் விதம் தொடரை விட்டு விலகாமல் கட்டிப்போடுகிறது.

பின்னணியில் பலம் சேர்த்த எழுத்துப்பணி: கதை மிகவும் எளிமையானதாக இருந்தாலும், அதை ஒரு பிரம்மாண்டமான இணையத் தொடராக மாற்றிக் காட்டியுள்ளனர் திரைக்கதை ஆசிரியர்கள் பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான். எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடாதவாறு, அடுத்தடுத்து நகரும் எபிசோடுகள் பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்யாமல் ஈர்க்கின்றன.

இயக்குநரின் புத்திசாலித் தனமான கையாளுமைபெரும்பாலான காட்சிகள் நீதிமன்றச் சுவர்களுக்குள்ளேயே அமைந்திருந்தாலும், இயக்குநர் பாலாஜி செல்வராஜ் கதையை நகர்த்திய விதம் அற்புதம். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மத்தை இறுதி வரை யூகிக்க முடியாதபடி திருப்பங்களை உருவாக்கியுள்ளார். ஒரு காட்சியில் கொலை என்று உறுதியாக நம்ப வைக்கும் இயக்குநர், அடுத்த காட்சியிலேயே அது தற்கொலைதான் போலிருக்கிறது என்று நினைக்க வைத்து, அதற்கு அடுத்த திருப்பத்தில் அந்த எண்ணத்தையே மாற்றித் திசை திருப்புகிறார். இந்த மர்ம முடிச்சுகளே இந்தத் தொடரின் வெற்றிக்கு மூலக்கரணமாய் அமைந்துள்ளன

மொத்தத்தில் சட்டமும் நீதியும் மூன்றாம் பாகத்தை எதிர்நோக்க வைக்கும் தொடரிது

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்