பிங்க்! – மொத்த படக்குழுவினருக்கும் அன்பான கைகுலுக்கல் = இந்திய தோழிகளின் சார்பாக !

பிங்க்! – மொத்த படக்குழுவினருக்கும் அன்பான கைகுலுக்கல் = இந்திய தோழிகளின் சார்பாக !

ஒரு பெண்ணிடம் ஆண் அத்துமீறுகிறான். அதைப் பற்றி அந்தப் பெண் புகார் செய்யும்போதும், வழக்கு நடக்கும்போதும் ஆண்தரப்பு முன்வைக்கும் வாதங்கள் என்னென்னவாக இருக்கும்? அவள் அணியும் உடை சரியில்லை, இதற்கு முன்பு அவளுக்கு பிற ஆண்களுடன் உறவு இருந்திருக்கிறது, அவள் எதற்கு ஆணுடன் அந்த இடத்துக்குப் போகிறாள், குடித்திருக்கிறாள், அவள் வீட்டுக்கு ஆண்கள் வந்து போகிறார்கள்,  அவள் நடத்தை சரியில்லை, அவள்  பாலியல் தொழிலாளி… இத்தியாதி… இத்தியாதி… ‘பிங்க்’ படத்தின் பலம் – இது எல்லாம் இருந்தாலும், தன்னுடன் உறவு கொள்ள முயலும் ஆணிடம் அந்தப் பெண் `முடியாது’ என்று சொன்னால் அதன் பொருள் `முடியாது’ என்பது மட்டும்தான் என்று பொட்டில் அடித்தமாதிரி சொல்வது.

pink oct 3

உள்ளூரிலேயே பெற்றோர் இருந்தாலும், தன் வேலைக்கு வசதி என்பதால் மீனல் இரண்டு தோழிகளுடன் (Falakஃபலக், ஆன்ட்ரியா) டெல்லியில் தனி வீட்டில் வசிக்கிறார். அவர் வெர்ஜின் அல்ல. எப்போதாவது பார்ட்டியில் குடிப்பதுண்டு. பொதுசமுதாயம் `கண்ணியமில்லை’ என்று வரையறுக்கும் ஆடைகளை அணிவதுண்டு. ஆண் நண்பர்களுடன் சகஜமாக சிரித்துப் பேசுவார், `டர்டி ஜோக்ஸ்’ கூட அடிப்பதுண்டு.

இப்படிப்பட்ட மீனல், தன் இரண்டு தோழிகளுடன் இரவில் ராக் ஷோ போகிறார். அங்கு பார்த்த பள்ளி நண்பன் டின்னருக்கு அழைக்க தன் தோழிகளுடன் ரிசார்டுக்கு செல்கிறார். நண்பனின் நண்பன் ராஜ்வீர் அத்துமீற அவனை பாட்டிலால் தலையில் தாக்கிவிட்டு, மூன்று பெண்களும் தப்பிக்கின்றனர். ராஜ்வீர் வசதியானவர், மாமா செல்வாக்கான அரசியல்வாதி. கண்ணில் அடிபட்டு காயத்துடன் இருக்கும் ராஜ்வீர், மீனல் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக புகார் கொடுக்க, அரசு(!?) மீனல் மீது வழக்கு தொடுக்கிறது.

மீனல் சார்பில் ஆஜராகிறார் வயதான ஓய்வு பெற்ற வழக்கறிஞர் தீபக் (அமிதாப்). நோயுற்று இறுதிக்கட்டத்தில் இருக்கும் மனைவி ஒருபுறம். தன்னுடைய `பைபோலார்’ பிரச்சனை மறுபுறம். இந்த நிலையிலும், மூன்று பெண்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார். அவர் முன்வைக்கும் வாதங்கள், ஆணாதிக்க சமுதாயத்திற்கு சாட்டையடி !

பெண்களின் நோக்கில் படம் பயணிக்கிறது. அவர்களது இயலாமை, அவர்களது இயல்பான சந்தோசங்களை வக்கிரமாக சித்தரித்து கரித்துக் கொட்டும் சமுதாயம், அவர்கள் மேல் திணிக்கப்படும் குற்றவுணர்வு… எல்லாவற்றையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். பல இடங்களில் பின்னணி இசை இல்லாத வெற்று மௌனம் எழுப்பும் உணர்வுகள் ஏராளம்.

மீனலாக வரும் தப்ஸியின் நடிப்பும், வடகிழக்குப் பிராந்தியப் பெண்ணின் பிரச்சனையை சொல்லும் ஆன்ட்ரியாவின் தவிப்பும் இயல்பு !மீனலின் தோழியாக வரும் Falakஃபலக் கதாபாத்திரமும் அழுத்தமானது. ஃபலக்காக வரும் கீர்த்தி குல்கர்னி நடிப்பு அற்புதம். மீனலும், ஆன்ட்ரியாவும் போலீஸுக்கு போகும் முடிவெடுக்க, ஃபலக் ராஜ்வீரிடம் ஸாரி கேட்டு சமாதானமாகப் போகலாம் என்கிறார். தானே அவனிடம் போனில் பேசுகிறார். ஸாரி கேட்டு சமாதானம் செய்ய, மீனலை கேவலமாகப் பேசுகிறான் ராஜ்வீர். ஃபலக் வெகுண்டெழுந்து, `என் தோழியை இழிவு செய்ய நீ யார்? தப்பு செய்தது நீ, மீனலை கேவலப்படுத்த உனக்கு எந்த உரிமையுமில்லை. சட்டப்படி உனக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம்’ என்று கோபமாக பேசும் காட்சியில் தோழியின் மாண்பைக் காக்க அவள் பக்கம் நிற்கும் ஃபலக்கின் உறுதி, அவளைப் புரிந்து கொண்டு மெலிதாக புன்னகைக்கும் மீனல் என்று அந்தக் காட்சி அழகு !

நீதிமன்றக் காட்சியில், நீங்கள் மூவரும் பணம் வாங்கிக் கொண்டுதானே அந்த ரிசார்டுக்குப் போனீர்கள் என்று திரும்பத் திரும்ப எதிர்தரப்பு வழக்கறிஞர் பொய்க்குற்றம் சாட்ட, ஒரு கட்டத்தில் கோபத்தில் வெடிக்கிறார் ஃபலக். `ஆமாம், பணம் வாங்கிட்டுத்தான் போனோம். ஆனால், பாலியல் தொழிலாளியானாலும் முடியாது என்று சொல்லும் பெண்ணை ஒரு ஆண் எப்படி வற்புறுத்த முடியும்?’ என்று கேட்கும் காட்சி முகத்தில் அறைந்து புரிய வைக்கிறது, தன் உடல் மீதான பெண்ணின் உரிமையை. இந்தக் காட்சியில் கீர்த்தியின் நடிப்பு அபாரம்!

இந்திய ஆண், அயல்நாடு போய் பெரிய படிப்பெல்லாம் படித்தாலும் பெண்ணின் மீதான அவன் பார்வை பிற்போக்குத்தனமாகத்தான் இருக்கிறது. ராஜ்வீரின் பிற்போக்குத்தனத்தை வெளிக் கொண்டுவரும் வழக்கறிஞர் தீபக்கின் சாதுரியமும், வாதமும் – அதன் மூலம் உண்மையை உணர வைக்கும் உத்தியும் Brilliant ! அமிதாப்பின் முகபாவங்கள், உடல் மொழியில் அத்தனை யதார்த்தம். நுணுக்கமான நடிப்பில் அசர வைக்கிறார் மனிதர்.

ஆணாதிக்க சமுதாயம் பெண்ணையும், அவள் மீதான வன்முறையையும் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்று பார்வையாளனுக்கு சொல்லித்தருகிறது `பிங்க்’ படம். வெல்டன் ! இயக்குனர் அனிருத்த ராய் சௌதிரிக்கும், மொத்த படக்குழுவினருக்கும் அன்பான கைகுலுக்கல், இந்திய தோழிகளின் சார்பாக !

கீதா இளங்கோவன்