ஹபீபி -விமர்சனம்!

ஹபீபி -விமர்சனம்!

80-களின் பாரம்பர்யக் கைத்தறி நலிவில் தொடங்கி, இன்றைய வளைகுடா நோக்கிய வாழ்வாதார இடப்பெயர்வு வரை… தென்தமிழக இஸ்லாமியக் குடும்பங்களின் தலைமுறைக் கதையை, முகமது அமீனின் எழுத்தில் மீரா கதிரவன் திரைக்குக் கடத்தியிருக்கும் வாழ்வியல் சித்திரம்தான் இந்த ‘ஹபீபி’. இஸ்லாமியர்களின் வாழ்வியல் ஆவணப் பதிவாக ஈர்த்தாலும், சுவாரசியமான திரைமொழியில் சறுக்கியுள்ளது.

கதைக்களம்: வேர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான போராட்டம்

கடையநல்லூர் பின்னணியில்,Rapid Industrialisation (வேகமான தொழில்மயமாக்கல்) சூழலிலும் தன் பரம்பரைத் தொழிலான கைத்தறியைக் கைவிட மறுக்கும் ஒரு தீவிரமான குடும்பத் தலைவர் முஹம்மது யூசுப் (கஸ்தூரி ராஜா). “நான் பிறக்கும்போது கேட்ட முதல் தாலாட்டு தறியின் சத்தம்தான்” என்று பேசும் யூசுப்பின் தம்பி, வறுமை காரணமாக வளைகுடா நாட்டிற்கு (Gulf) வேலைக்குச் செல்கிறார். ஆனால், யூசுப்போ தன் மண்ணையும் தொழிலையும் பிரிய மனமில்லாமல் வாழ்கிறார்.

இன்னொருபுறம், யூசுப்பின் பாசத்திற்குரிய மகன் அபு தாஹிர் (ஈஷா) மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் நிலோபர் (மாளவிகா மனோஜ்) இருவருக்குள்ளும் மலரும் காதல். வீட்டைத் தாண்டி வெளியே வரும் பெண்கள் மீதான சமூகக் கண்காணிப்பிற்குள், வசனங்களே இல்லாமல் தன் காதலைக் கடத்துகிறார் நிலோபர். இறுதியில், இந்த ஒட்டுமொத்தக் குடும்பமும், அவர்களின் வளைகுடா நோக்கிய பயணமும் எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதே ‘ஹபீபி’யின் மையக்கதை.

பாராட்டுக்குரிய பதிவுகள்: ஆடியோ கேசட் காதலும், முற்போக்கு ‘பர்வீனும்’!

இயக்குநர் மீரா கதிரவன் கடையநல்லூர் வட்டார இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்வியலையும், வெளிநாடு செல்லும் கணவனைப் பிரிந்து வாழும் பெண்களின் வலியையும் காட்சிப்படுத்திய விதம் அசாத்தியமானது.

  • கிளாசிக் காட்சி: அபு தாஹிரின் சாச்சாவும் சாச்சியும் ஆடியோ கேசட்டுகள் மூலம் தங்களின் குரல்களைப் பதிவு செய்து, பிரிவின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி படத்தின் ஆகச்சிறந்த தருணம்.

  • அம்பேத்கர், பெரியார் பேசிய ‘பர்வீன்’: படத்தில் மிகக் குறுகிய நேரமே வந்தாலும், தனஸ்ரீ சுதர்சனின் ‘பர்வீன்’ கதாபாத்திரம் அசுரத்தனமானது. அபாயா அணிந்து கொண்டே அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் வரிகளை மேற்கோள் காட்டி, பெண்கள் பேச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். “மௌனம் என்பது அடக்கமோ ஒழுக்கமோ அல்ல; சில நேரங்களில் அது மிக மோசமான அவமதிப்பு” என்று அவர் நாயகனுக்குக் கண்ணாடியைக் காட்டும் இடம் அற்புதம்.

பலவீனம்: ஓவர்ஸ்டே செய்யும் கேமராவும், பழைய பாணி திரைமொழியும்!

படத்தின் ஆகப்பெரிய பலவீனமே அதன் ஆமை வேகத் திரைக்கதைதான். ஒரு சில காட்சிகளிலேயே பல தசாப்தங்களைக் கடந்து செல்லும் கேமரா, சில சோகக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் தேவையே இல்லாமல் ‘ஓவர்ஸ்டே’ செய்து பொறுமையைச் சோதிக்கிறது.

  • தாமதமான மோதல்: படத்தின் முதன்மைச் சிக்கலே இடைவேளைக்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் ஆரம்பிக்கிறது. அதுவரை கதை எந்த இலக்கும் இல்லாமல் நகர்கிறது.

  • அதி-அறிவுரை: வெளிநாடு செல்வோரின் யதார்த்தத்தை இயக்குநர் வில்லத்தனமாகச் சித்தரிக்கவில்லை என்றாலும், அந்த முடிவின் எதிர்மறைப் பக்கங்களை மட்டுமே ஓவராகக் காட்டியிருப்பது, ஒரு நுணுக்கமான பதிவாக இல்லாமல் ‘அறிவுரை’ கூறும் பிரச்சாரமாக மாறிவிடுகிறது.

  • தெளிவற்ற நாயகன்: கதையின் நாயகனான அபு தாஹிரின் மனநிலை என்ன, குடும்பப் பொறுப்புகளைத் தாண்டி அவனது உண்மையான ஆசைதான் என்ன என்பதில் ரசிகர்களுக்குக் குழப்பமே மிஞ்சுகிறது.

தொழில்நுட்பமும் நடிப்பும்

முதுமையான யூசுப் கதாபாத்திரத்தில் கஸ்தூரி ராஜா மிக நேர்த்தியான, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் சில இடங்களில் ஓவர் டோஸ் ஆக்ட் கொடுத்து கைத்தட்டலை எதிர்பார்ப்பதுதான் சோகம். அபுதாஹிர் ரோலில் வரும் புது முகம் ஈஷா பெரும்பாலான காட்சிகளில் ராமராஜன் பாணியில் தென்படுகிறார்.   மாளவிகா மனோஜ் கவனிக்க வைக்கிறார்.  தனஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜன், இஸ்மத் பானு, சாகுல் ஹமீது, அருள் குமார் போன்றோர் இயக்குநர் சொன்னதை செவ்வனே செய்து இருக்கிறார்கள்

சாம் சி.எஸ்ஸின் இசையில் பாடல்கள் கவர்கிறது. ஆனால் பின்னணி இசையில் படத்தை  தூக்கி நிறுத்த தவறி இருக்கிறா/.

கைத்தறி நலிவடைந்த கதையையும், வளைகுடாப் பயணங்களையும் பேச நினைத்த ‘ஹபீபி’, எல்லோரையும் போல் வளைகுடாப் பயணத்தை நோக்கி நகர்கிறதே தவிர, ஒரு திரைப்படமாகச் சரியான இலக்கைச் சென்றடையவில்லை. நவீன திரைமொழியைத் தவிர்த்து, பழைய பாணியில் பயணித்ததால் இந்த ‘ஹபீபி’ சுவாரசியம் குறைந்து, வெறும் ஆவணப் பதிவாக மட்டுமே எஞ்சுகிறது!

மொத்தத்தில் 80-களின் பாரம்பர்யமும் 2020-களின் யதார்த்தமும் மோதிக்கொள்ளும் களம்; ஆனால், திரைமொழியில் தேக்கம்!

ரேட்டிங்: 2.25 / 5