யானை வேட்டையும் ஆக்‌ஷன் இரைச்சலும்: ‘காட்டாளன்’-விமர்சனம்

யானை வேட்டையும் ஆக்‌ஷன் இரைச்சலும்: ‘காட்டாளன்’-விமர்சனம்

மோலிவுட் திரையுலகம் அண்மைக்காலமாகத் தனது பிரத்யேக அடையாளமான யதார்த்தப் பாணியிலிருந்து விலகி, பிரம்மாண்டமான ‘பான் இந்தியா’ வணிகக் களத்தைக் கைப்பற்றத் தீவிரமாக முயன்று வருகிறது. அந்த அதிரடிப் பாய்ச்சலின் தற்போதைய வரவுதான், முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளை மட்டுமே நம்பி வெளியாகியிருக்கும் இந்த ‘காட்டாளன்’. யானைத் தந்தக் கடத்தல் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் பூர்வகுடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இக்கதையில், இயக்குநர் பால் ஜார்ஜ் இன்னும் ஆழமானப் பதிவுகளைச் செய்திருக்கலாம். அதை விடுத்து, ஏற்கனவே இந்தியத் திரையுலகைக் கலக்கிய ‘கே.ஜி.எஃப்’, ‘புஷ்பா’ போன்ற பிரம்மாண்டப் படங்களின் மேக்கிங் ஃபார்முலாவை அப்படியே நகலெடுக்க முயற்சித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. திரைக்கதையில் சுவாரசியத்தைக் கூட்டுவதைக் காட்டிலும், நீளமான ஸ்லோ-மோஷன் காட்சிகளுக்கும் செயற்கையான பில்-அப்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தந்து இயக்குநர் காட்சிகளை அமைத்திருப்பது, தியேட்டரில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கு ஒரு கட்டத்தில் அயர்ச்சியையே தருகிறது.

கதைக்களம்

கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியையும், அங்கு வாழும் பூர்வகுடி மக்களையும் தன் காட்டுப் பிடிக்குள் வைத்திருக்கும் கடத்தல் மன்னன் சுனில், யானைத் தந்தங்களைச் சட்டவிரோதமாகக் கடத்தி வருகிறார். அவரது சாம்ராஜ்யத்தை வீழ்த்த நினைக்கும் கபீர் துகான் சிங், காவல்துறையின் துணையோடு கடத்தல் தந்தங்களைக் கைப்பற்றுகிறார். இழந்த சொத்தை மீட்க, சுனிலால் களம் இறக்கப்படுகிறார் நாயகன் ஆண்டனி வர்கீஸ். தனது அசாத்திய தந்திரங்களால் தந்தங்களை மீட்டுக் கொடுக்கும் ஆண்டனி, ஒரு கட்டத்தில் சுனிலுக்கு எதிராகத் திரும்பி, அந்தப் பழங்குடியின மக்களின் மீட்பராக மாறுகிறார். இதனால் சுனிலும் கபீர் துகான் சிங்கும் கைகோர்த்து ஆண்டனியை அழிக்க முற்படுகின்றனர். இறுதியாக, பூர்வகுடி மக்களைத் திரட்டி கடத்தல் கும்பலுக்கு எதிராக ஆண்டனி நடத்திய யுத்தம் வென்றதா, இல்லையா என்பதே ‘காட்டாளன்’ படத்தின் கதை.

நடிப்பு எப்படி?

வழக்கமான ஆக்‌ஷன் கதைகளில் மிரட்டும் ஆண்டனி வர்கீஸ், இதிலும் சண்டைக்காட்சிகளில் அசத்தியுள்ளார். சில வணிக ரீதியான காட்சிகளில் மோகன்லாலின் பாணியை நினைவூட்டும் அளவுக்கு அவரது உடல்மொழி அமைந்துள்ளது. வில்லனாக வரும் சுனில், தந்தம் கடத்தும் கொடூர மனிதனாகத் தனது மிரட்டலான நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்க்கிறார். ஆனால், ஆங்காங்கே அவரது ‘புஷ்பா’ படக் கதாபாத்திரத்தின் சாயல் எட்டிப்பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். திடீரென எண்ட்ரி கொடுக்கும் துஷாரா விஜயன், தோற்ற அமைப்பில் சற்று அந்நியப்பட்டு நின்றாலும், சண்டைக் காட்சிகளில் பாய்ந்து பிராண்டியிருக்கிறார். ஜெகதீஷ், சித்திக், ஹிப்ஸ்டெர் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகச் செய்துள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்

படத்தின் பிரதான பலமே ரெனாடைவின் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவுதான். கதாபாத்திரங்களின் பில்-அப் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் காட்டின் பின்னணியில் காட்சிப்படுத்திய விதம் அற்புதம். ‘கே.ஜி.எஃப்’ புகழ் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்குத் தீனியாய் அமைந்தாலும், பல இடங்களில் காதுகளைப் பிளக்கும் இரைச்சலாக மாறி விடுகிறது.

இயக்குநர் பால் ஜார்ஜ், யானைத்தந்தக் கடத்தல் மற்றும் பூர்வகுடிகளின் வாழ்வியலை இன்னும் அழுத்தமாகப் பேசியிருக்கலாம். அதை விடுத்து, ஏற்கனவே பார்த்துப் பழகிய ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘புஷ்பா’ போன்ற பான் இந்தியப் படங்களின் மேக்கிங் பாணியை அப்படியே நகலெடுக்க முயன்றிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஸ்லோ-மோஷன் காட்சிகளும், செயற்கையான பில்-அப்களும் பார்வையாளர்களுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பையே தருகின்றன.

பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் திரைக்கதை மற்றும் உன்னி.ஆரின் வசனங்களில் ஆழம் இல்லாததால், வெறும் சண்டைக் காட்சிகள் மட்டுமே திரையை ஆக்கிரமிக்கின்றன. உணர்வுப்பூர்வமான சென்டிமென்ட் காட்சிகளோ அல்லது விறுவிறுப்பான திருப்பங்களோ இல்லாததால், இந்த ‘காட்டாளன்’ ஒரு சராசரி ஆக்‌ஷன் படமாகவே சுருங்கிவிடுகிறான்.

மார்க்: 2 .25/5