ஃபேண்டஸி ஆட்டம்…கோர்ட் ரூம் வேட்டை…சூர்யாவின் ‘கருப்பு’- விமர்சனம்

ஃபேண்டஸி ஆட்டம்…கோர்ட் ரூம் வேட்டை…சூர்யாவின் ‘கருப்பு’- விமர்சனம்

சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற மிகச்சிறந்த படங்களைக் கொடுத்திருந்தாலும், தியேட்டர்களில் சூர்யாவின் அதிரடியான வணிகரீதியான வெற்றியைப் பார்த்து அவரது ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகிவிட்டது. அதேபோல, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் தனது முதல் படமான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை ஓடிடியிலேயே வெளியிட்டிருந்தார். தியேட்டர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்த இருபெரும் கூட்டணியுடன், த்ரிஷா மற்றும் ‘டூடு’ பாடல் புகழ் சாய் அபியங்கர் இணைய, ‘கருப்பு’ (தெலுங்கில் வீரபத்ருடு) திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது. சில நிதி நெருக்கடிகளைக் கடந்து தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் இந்த சோசியோ-ஃபேண்டஸி (Socio-Fantasy) திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? விரிவாகப் பார்ப்போமா?.

கதைக்களம்

கேரளாவைச் சேர்ந்த ஒரு எளிய தந்தையும் மகளும் (இந்திரன்ஸ் – அனகா மாயா) தங்களின் வாழ்வாதாரமான 60 சவரன் நகைகளுடன் ரயிலில் சென்னைக்கு வருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாகச் சென்னையில் இறங்கியவுடன் ஒரு மர்ம கும்பல் அவர்களிடம் இருந்து அந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த ஏழைக் குடும்பம், சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பெரும் செல்வாக்குடன் வலம் வரும் பேராசை பிடித்த வழக்கறிஞர் பேபி கண்ணனிடம் (ஆர்.ஜே. பாலாஜி) நீதி கேட்டுச் செல்கிறது. ஆனால், பேபி கண்ணனோ தனது பண பலத்தாலும் அதிகாரத்தாலும் நீதிபதி உட்பட அனைவரையும் விலைக்கு வாங்கி, அந்த நீதிமன்றத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மாஃபியா போலச் செயல்படுகிறார்.

நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு, விரக்தியின் எல்லைக்குச் செல்லும் அந்தத் தந்தை, அநீதிக்கு எதிராக வேட்டையாடும் ‘வேட்டை கருப்பசாமிக்கு’ மிளகாய் சாந்து அரைத்துப் பூசி உக்கிரமாக வேண்டுகிறார். பக்தனின் துயர் துடைக்கப் பூமிக்கு இறங்கி வரும் வேட்டை கருப்பு (சூர்யா), அநீதி இழைத்த எதிரிகளைத் துவம்சம் செய்கிறார்.

இருப்பினும், வில்லனான பேபி கண்ணன் விடுக்கும் ஒரு சவாலை ஏற்று, சாமியாக அல்லாமல் ‘சரவணன்’ என்ற மனித உருவத்தில் ஒரு வழக்கறிஞராக நீதிமன்றத்திற்குள் நுழைகிறார் கருப்பசாமி. வில்லன் விடுத்த அந்த சவால் என்ன? சாமியால் மனிதனாக நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர முடிந்ததா? என்பதே ‘கருப்பு’ படத்தின் கதை.

நடிகர்களின் பங்களிப்பு

  • சூர்யா: நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவை ஒரு அவுட்-அண்ட்-அவுட் கமர்ஷியல் மாஸ் பாத்திரத்தில் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ‘வேட்டை கருப்பசாமி’ பாத்திரத்தை அவர் ரசித்துச் செய்திருப்பது ஸ்கிரீனில் நன்றாகத் தெரிகிறது. அவரது கம்பீரமான தோற்றமும், அசாத்தியமான திரை ஆளுமையும் (Screen Presence) படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

  • த்ரிஷா: நேர்மையான இளம் வழக்கறிஞர் ‘பிரீதி’ என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் கச்சிதமாகச் செய்துள்ளார்.

  • ஆர்.ஜே. பாலாஜி: ஊழல்வாதி வழக்கறிஞராக நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான தனது பாணியில் இருந்து மாறி நடிக்க முயன்றிருப்பது பாராட்டுக்குரியது என்றாலும், இன்னும் அனுபவமிக்க ஒரு வில்லன் நடிகரைத் தேர்ந்தெடுத்திருந்தால் சூர்யாவுக்கு இணையான மோதல் காட்சிகள் இன்னும் வெறித்தனமாக இருந்திருக்கும். சூர்யாவை விட ஆர்.ஜே. பாலாஜிக்குத்தான் படத்தில் அதிக ஸ்லோ-மோஷன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்திரன்ஸ் & அனகா மாயா: உதவி கேட்டு அலையும் தந்தை – மகளாக இவர்களின் நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. படத்தின் முதல் பாதியை நகர்த்திச் செல்வதில் இவர்களின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

  • நட்டி சுப்பிரமணியம்: மேஜிஸ்ட்ரேட் பாத்திரத்தில் நட்டி தனது தேர்ந்த நடிப்பை வழக்கம்போல வெளிப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

  • இசை (சாய் அபியங்கர்): படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருப்பது இசையமைப்புதான். பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை (BGM) சில இடங்களில் நன்றாக இருந்தாலும், குறிப்பாக இரண்டாம் பாதியில் பல காட்சிகள் காதைக் கிழிக்கும் அளவுக்கு மிக சத்தமாக (Loud) அமைந்துள்ளது.

  • ஒளிப்பதிவு (ஜி.கே. விஷ்ணு): ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம். குறிப்பாக ஃபேண்டஸி காட்சிகள் மற்றும் நீதிமன்றக் காட்சிகளில் அவர் பயன்படுத்தியிருக்கும் வண்ணக் கலவைகளும் (Colour Palettes) பிரேம்களும் சர்வதேசத் தரத்தில் உள்ளன.

  • படத்தொகுப்பு (ஆர்.கலைவாணன்): முதல் பாதியில் மிகவும் விறுவிறுப்பாக இருந்த எடிட்டிங், இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.

பிளஸ் புள்ளிகள்

  1. விறுவிறுப்பான முதல் பாதி: கதையைத் தொடங்கிய விதம் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள்.

  2. சூர்யாவின் அசுரத்தனமான திரை ஆளுமை: கருப்பசாமி மற்றும் வழக்கறிஞர் சரவணன் என இரண்டு பரிமாணங்களிலும் சூர்யா மிரட்டியுள்ளார்.

  3. கருப்பசாமி என்ட்ரி: தியேட்டரை அதிர வைக்கும் மாஸ் எலிமெண்ட்டுகள்.

மைனஸ் புள்ளிகள்

  1. திசைமாறிய இரண்டாம் பாதி: முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் தொய்வடைகிறது.

  2. அதிகப்படியான சத்தத்துடன் கூடிய பின்னணி இசை.

  3. லாஜிக் மீறிய அதிரடி காட்சிகள்: க்ளைமாக்ஸை நோக்கி நகரும் சண்டைக்காட்சிகள் மிக மிக ஓவர் தி டாப்பாக (Over the top) அமைந்துள்ளன.

இயக்கம் மற்றும் திரைக்கதை அலசல்

இயக்குநர்கள் சங்கர், அட்லீ போலச் சமூகக் கருத்துக்களை கமர்ஷியல் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. ‘கடவுள் வெர்சஸ் ஊழல்வாதி’ என்ற ஒன்லைனை எடுத்துக் கொண்டு, அதை சோசியோ-ஃபேண்டஸி பாணியில் திரைக்கதையாக மாற்றிய விதம் முதல் பாதி வரை மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளது.

படத்தில் ஹீரோ சூர்யா அறிமுகமாகவே முதல் பாதியில் 30 முதல் 40 நிமிடங்கள் ஆகிறது. ஆனால், அந்தத் தந்தை – மகள் படும் துயரம் நம்மைப் படத்தோடு ஒட்ட வைப்பதால், ஹீரோ இல்லாதது நமக்குத் தெரியவே இல்லை. எப்போது சாமி வந்து இவர்களைக் காப்பாற்றும் என்று நாம் ஏங்கும் இடத்தில் சூர்யாவின் என்ட்ரி தியேட்டரை அதிர வைக்கிறது. இடைவேளை வரை படம் மிக நேர்த்தியாகப் பயணிக்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் சாமியே மனித வடிவில் வரும்போது, ஒரு சாதாரண ஊழல் வழக்கறிஞரை எதிர்க்க சாமியின் சக்தி தேவையா என்ற கேள்வி எழுகிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைந்ததால், ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறேன் பேர்வழி என்று சூர்யாவின் பழைய ‘துரை சிங்கம்’ கெட்டப்பை உள்ளே நுழைத்தது, தேவையற்ற ஸ்லோ-மோஷன் காட்சிகள் என படம் டிராக்கை விட்டு இறங்குகிறது. ஆர்.ஜே. பாலாஜி தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததைக் குறைத்து, இரண்டாம் பாதி எழுத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்ததில் சுவாரஸ்யமான பின்னணி, சமூக அக்கறையுள்ள கதைக்களம், உணர்வுப்பூர்வமான முதல் பாதி ஆகியவை ‘கருப்பு’ படத்தை ஒருமுறை பார்க்கக்கூடிய நல்ல கமர்ஷியல் படமாக்குகிறது. இரண்டாம் பாதியில் லாஜிக்கையும், எதிர்பார்ப்புகளையும் சற்றே குறைத்துக் கொண்டு சென்றால், தியேட்டரில் சூர்யாவின் ‘வேட்டை கருப்பு’ அவதாரத்தைக் தாராளமாகக் கொண்டாடலாம்!

ஆக- ‘கருப்பு’ – சாமி வரம் தந்தது பாதியளவுதான்!

மார்க் 3/5