சிறுவன் சாமுவேல் – விமர்சனம்!
இப்போதைய பள்ளிக்கூடங்களும் சரி, சூழலும் சரி… நீதிபோதனை வகுப்புகளை நடத்துவதே இல்லை. நீதியையும் வாய்மையையும் சொல்ல, தாத்தாபாட்டிகளும் அருகில் இல்லை. நாமும் கூட வீட்டு ஹாலில், எல்லோரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் ஒரு குழந்தை ரிமோட்டை வைத்திருக்க, இன்னொரு குழந்தை செல்போனை நோண்டிக் கொண்டிருக்க, மனைவி கேண்டி க்ரஷ் விளையாட, கணவன் முகநூலில் முகம் புதைத்திருக்க… அப்பா அம்மாக்களின் அரவணைப்பு இல்லாமலும் ஆயாக்களின் அன்பு கூட இல்லாமலும் சோட்டாபீம்களுடனும் டோராக்களுடனும் பேசிக்கொண்டிருக்கின்றன குழந்தைகள்! இப்படி இருக்கும் சூழலில் தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான சினிமா என்பது அரிதிலும் அரிது. இந்த அரிய முயற்சியில் ஒன்றாக வந்துள்ளது சிறுவன் சாமுவேல் திரைப்படம். இந்த திரைப்படம் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழா உட்பட பல்வேறு திரைப்பட விழாக் களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்று உள்ளது. எந்த ஒரு தொழில்முறை நடிகர்களையும் நடிக்க வைக்காமல் கதைக்களமான கன்னியாகுமரி மாவட்ட மக்களை மட்டுமே நடிக்க வைத்து சிறந்த நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குனர் சாது பெர்லிங்டன். கன்ட்ரிசைட் பிலிம் ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது.

படத்தின் கதை என்னவென்றால் எழுத்தாளர் சுந்தர் ராமசாமி எழுதிய ‘ஸ்டாம்பு ஆல்பம்’ கதை ஏற்கெனவே குறும்படமாக வெளிவந்துள்ளது. அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் மாணவர்களின் மன ஓட்டத்தைப் பதிவு செய்யும் கதை அது. இந்த கதையே சிறுவன் சாமுவேல் திரைப்படம் உருவாக உத்வேகம் அளித்தது என்கிறார் அப்படத்தின் அறிமுக இயக்குநர் சாது. படத்தின் முக்கிய பாத்திரமான சிறுவன் சாமுவேல், ஒரு கிரிக்கெட் பேட் வாங்க ஆசைப்படுகிறான். ஐந்நூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் கிடைக்குமெனக் கேள்விப்படுகிறான். அதனால், பல்வேறு வழிகளில் கார்டுகளைச் சேகரிக்க முயல்கிறான் சிறுவன் சாம். அவன் முயற்சிக்கு வெற்றி கிடைக்க, இறுதியில் அவனால் புது கிரிக்கெட் பேட்டை வாங்க முடிந்ததா? என்பதற்கு பதில் தான் படத்தின் மீதிக் கதை.
சாமுவேலாக நடித்த அஜிதன் தவசி முத்துவும், நண்பனாக நடிக்கும் விஷ்ணுவும் நாம் கிராமத்தில் பார்க்கும் சிறுவர்களை கண் முன் நிறுத்துகிறார்கள். அஜிதன் அமைதியாகவும், துள்ளல் நடிப்பாக ராஜேஷும் நடித்துள்ளார்கள்.ஆசிரியையாக நடிப்பவர், அப்பா அம்மாவாக நடித்துள்ளவர்கள், பள்ளி ஆசிரியர் அனைவருமே சரியான தேர்வு. சாம் எட்வின் மனோகர் மற்றும் ஸ்டான்லியின் இசை ஒரு மென்மையான வருடல் போல உள்ளது. சிவானந்த் காந்தியின் ஒளிப் பதிவு கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உணர்வையும், அழகையும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார். மாற்று சினிமாவை விரும்புபவர்களும்,நல்ல படைப்புகளை ரசிப்பவர்களுக்கும் இந்த சிறுவன் சாமுவேல் சரியான தேர்வாக இருக்கும். சிறுவன் சாமுவேல் -மாற்று சினிமாவின் முதல் படி.
படம் முழுவதும் பசுமையும், ஈரமும் நிரம்பியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்திக்கு வாழ்த்துகள், அவரின் கேமரா கோணங்களில் ஈரானிய படங்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. இசையமைப்பாளர்கள் J. ஸ்டான்லி ஜான், சாம் எட்வின் மனோகர் ஆகியோர் பின்னணி இசையின் மூலமாகக் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளனர். 18 நாட்கள் எடுக்கப்பட்ட படத்தை 95 நிமிடங்கள் போகுமாறு தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் அஜித் ஸ்டீஃபன்.
மொத்ததில் இப்போது பல பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கும் இந்தப் படம் பரிசுகளை வென்றிருக்கிறது. மேலும் பல பட விழாக்களில் உயரிய பரிசுகளைப் பெறும் சாத்தியமும் இந்தப் படத்துக்கு இருக்கிறது.
சிறுவன் சாமுவேல் – குழந்தைத்தனமான படம் அல்ல… குழந்தைகளுக்கான படம்..!
மார்க் 3/5


