மலக்குழியில் ராமர் – சர்ச்சை கவிதை(?)
ராமரை மலக்குழியில் இறக்கியது பற்றிய பதிவில் அல்லாஹ், இயேசு பற்றியெல்லாம் இப்படி எழுதுவார்களா என்றெல்லாம் கேட்கிறார்கள். அல்லாஹ் பற்றி எழுதினால் கூட அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் போகலாம். ஆனால் அல்லாஹ்வின் தூதர் பற்றி எழுதினால் கடுமையான எதிர்விளைவுகள் வரும். ‘அல்லாஹ் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். நபிகள் மீது கை வைக்காதே’ என்று ஒரு பெர்சியப் பழமொழியே இருக்கிறது. ‘Say what you like about Allah, but leave the Prophet alone.’
ஆனால் இயேசு பற்றி என்ன எழுதினாலும் பெரிய எதிர்வினை இல்லாமல் போகத்தான் வாய்ப்பிருக்கிறது. மத்திய காலம் வரை மத அவமதிப்புகளை கொடும் வன்முறையுடன் எதிர்கொண்டு வந்த கிறித்துவம் சம காலத்தில் அவற்றை அலட்சியப்படுத்தி சகஜமாக கடந்து விட கற்றுக் கொண்டு விட்டது. இயேசுவை தன்பாலின ஈர்ப்பாளராக உருவகப்படுத்தி எழுதிய கவிதையெல்லாம் பொதுவெளியில் இருக்கிறது. [1] நான் இங்கிலாந்தில் மேற்படிப்பு படிக்கையில் எங்கள் புரொஃபசர் அந்தக் கவிதையை வகுப்பில் பகிர்ந்து எங்களிடம் அது குறித்து உரையாடினார். ரிக்கி ஜெர்வாய்ஸ் மாதிரி ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளர்கள் கண்ட மேனிக்கு இயேசு, மேரி மாதா போன்றவர்களை கலாய்த்து தள்ளி விட்டு எந்த அச்சுறுத்தலும் இன்றி வீட்டுக்குப் போக முடிகிறது. அவ்வளவு ஏன், இயேசு பெயர் பொறித்த டாய்லெட் டிஷ்யூவெல்லாம் சந்தையில் கிடைக்கிறது.[2]
இதே போன்ற அணுகுமுறையைத்தான் இதர மதத்தவர்களும் கைக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறேன். மத அவமதிப்புகளை சீரியசாக எடுத்துக் கொள்ளாத சமூகம் சமூகப் பொருளாதார ரீதியாக முன்னேறுகிறது. அதை வைத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து, வன்முறைகளைக் கையில் எடுத்து அவற்றை ஒடுக்க முனைபவர்கள் பின்தங்கிய சமூகமாகத் தொடர்கிறார்கள்.
அது ஒரு புறம் இருக்க, ‘பிற மதம் பற்றி எழுதினால் சும்மா இருப்பார்களா?’ என்று கேட்கும் இந்துத்துவர்கள் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்கள்? அந்த மதம் போலவே நாங்களும் சகிப்புத்தன்மை இல்லாமல் உலவுவோம் என்கிறார்களா? அப்படியானால் பிற மதங்களைக் போலவே தாங்களும் நடந்து கொள்ள முனைபவர்கள் பிற மதங்களை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறார்கள்தானே? பிற மதங்களை விமர்சிக்க முனையும் ஒரு மதம் அதற்கு மாறாக தனது அணுகுமுறையில் வித்தியாசத்தைக் காட்ட வேண்டும்தானே?
ஆனால் அடுத்த மதத்தை விமர்சித்துக் கொண்டு கூடவே அவர்கள் போலவே தானும் ஆக முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரே மத கோஷ்டி நம்ம இந்து மத கோஷ்டிதான்!