தமிழகத் தேர்தல்: இது 3.75 கோடியினரின் தீர்ப்போ? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தமிழகத் தேர்தல்: இது 3.75 கோடியினரின் தீர்ப்போ? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

மிழகத்தின் 16 ஆவது பேரவைக்கானப் பொதுத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கி விட்ட்து. வாக்காளர்களில் பெரும்பாலோர் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இறுதி முடிவெடுத்தி ருப்பார்கள் எனக் கருதலாம். வாக்குப்பதிவு நாளான இன்று 6 ஆம் தேதியன்று காலை வரை நிலவரம் மாறவும் வாய்ப்பிருந்தது. ஏனெனில் அலையற்றத் தேர்தலில் கடைசி தருணத்தில் ஏதேனும் ஒரு அலை வருமோ என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அச்சூழ்நிலையில் தமிழக வாக்காளர்கள் எதை வைத்து வாக்களிப்பார்கள் என்பதை விட யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கணிப்பதற்கே அதிக கவனம் செலுத்தப்பட்டது. கட்சி ரீதியில் வாக்களிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது பல ஆண்டுகளாக நிறுவப்பட்ட ஒன்று. நடுநிலை வாக்காளர் என்போரின் விழுக்காடு 20-25% மாக இருக்கலாம் என்பதே எதிர்பார்ப்பு. அதிலும் அவர்களில் பலர் இளவயதினராக இருக்கக்கூடும்.

ஆயினும் புதிய வாக்காளர்களாக, அதாவது 18-19 வயது வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 14 இலட்சம் என்ற அளவிலேயே இருக்கும் என்ற நிலையில் 30 முதல் 60 வயது வரையிலான வாக்காளர்களே முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவ் வயது வாக்காளர்களில் குடும்ப பாரத்தைச் சுமப்போரே அதிகம் பேராக இருப்பார்கள். இவர்கள் கடந்த ஓராண்டாக கொரோனோ பாதிப்பால் தேங்கியுள்ள பொருளாதாரத்தில் சிக்கியுள்ளவர்கள். இவர்கள் தற்போதைய சூழலிலிருந்து மீண்டு வர இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும். இவர்களது மனநிலை இப்போது அதிருப்தி மன நிலையாகத்தான் இருக்கும். ஆயினும் கொரோனா உலகம் தழுவியப் பிரச்சினை என்பதால் மத்திய, மாநில அரசுகளின் மீது கோபம் கொள்வதில் பொருள் இல்லை. அரசுகள் தடுப்பூசியை இலவசமாக செலுத்துவதால் அடுத்த பெரும் தொற்று ஏற்படாது எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதாரமும் சீராகிவிடும் என்ற நம்பிக்கையும் இத்துடன் இணைந்ததே.

மத்தியதர வர்க்கத்தின் உடனடிப் பிரச்சினை வேலைவாய்ப்பு, பணப் பற்றாக்குறை. ஆயினும் அரசுகள் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தி பொருளாதார இயக்கத்திற்கு வழி செய்துள்ளதும், தற்காலிக நிவாரணமாக மாநில அரசு ரூ இரண்டாயிரம் வழங்கியதும், பொங்கல் பரிசாக ரூ. இரண்டாயிரம் வழங்கியதும் ஆளும் அரசின் மீது கோபத்தைக் குறைத்திருக்கிறது. மேலும் எரிவாயு உருளை, மகளிர்க்கான உரிமைப் பணம் ரூ.1500 போன்றவை பெரிதும் கவர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான மனநிலை இல்லை என்பது பரவலாக ஒலிக்கிறது. மேலும், விவசாயத்துறைக்கு செய்துள்ள பணிகளும், வாக்குறுதிகளும் கிராமப்புறங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடன்கள் ரத்து போன்றவையும் சாதகமான அம்சங்களே.

மாறாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் நான்காண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நடவடிக்கைகளையும், மதவாதப் பிரச்சாரத்தையுமே அடிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர்க்கான உரிமைத் தொகை ரூ 1000 என்பது மட்டுமே முன் நிற்கிறது. இதர வாக்குறுதிகள் தற்போதுள்ள அரசின் திட்டங்களை நிறுத்துவோம் என்று மட்டுமே கூறுகின்றன. மாற்று திட்டங்கள் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் சொத்து வரி தள்ளுபடி என்பதும், அதே போல கடன்கள் எதிர்காலத்தில் தள்ளுபடி ஆகலாம் என்கிற எதிர்பார்ப்புமே அதிகம் காணப்படுகின்றன. அதுவும் இன்றி புதிய அரசு ஒன்றை ஏன் ஏற்படுத்தக்கூடாது எனும் கேள்வியும் உண்டு. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு சாதகமான மன நிலை இல்லை. இதனால் சுமார் 10% வாக்குகளை ஆளுங்கட்சிக்கு அளிக்கப்படாது போகலாம்.

திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இவ்வாக்குகள் இடப்படலாம். ஆளுங்கட்சிக்கு மக்களிடையே எதிர்மறையான மனப்போக்கு இல்லை என்றாலும் களத்தில் மக்கள் நீதி மையம், நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகளுக்கு விழும் வாக்குகள் அதிருப்தி வாக்குகளாகவே கருதப்பட வேண்டும். இவை திமுக கூட்டணிக்கு போக வேண்டியவை என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும். இதுவரையிலான கருத்துக்கணிப்புக்களில் இக்கட்சிகளுக்கு 4-6 விழுக்காட்டு வாக்குகள் கிடைக்கலாம் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே இவை வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் ஆற்றல் உள்ளவை என்பதில் அய்யமில்லை. இப்போது மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சியைப் பிடித்தால் யார் அதற்கு காரணமாக இருப்பார்கள் எனில் 30-60 வயதுடைய வாக்காளர்கள் இப்போதிருக்கும் நிலையே தொடர்ந்தாலும் கூடப் பரவாயில்லை இதை விட மோசமான நிலைக்கு போய் விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருப்பதால் அவர்கள் ஆளும் கட்சி கூட்டணிக்கே வாக்களிக்கலாம்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உட்கட்சித் தகராறு, குடும்ப ஆதிக்கம், மத்திய அரசின் ஒத்துழைப்பின்மை எனப் பலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும். இது எவ்வித்த்திலும் மக்களுக்கு உதவாது. மீண்டும் ஆளுங்கட்சியே வந்தாலும் நிர்வாக அலட்சியம், ஊழல், அமைதியின்மை ஏற்படலாம். ஆனால் இரண்டிற்கும் மாற்றாக வலுவான கட்சிகள் இல்லை. இந்நிலையில் ஏற்கனவே குறைபாடுகளோடு இருந்தாலும் மத்திய அரசின் இணக்கத்தைப் பெற்றிருக்கும் அ இ அதிமுகவே வெற்றி பெறட்டும் எனச் சிந்திக்கும் வாய்ப்புள்ளவர்கள் இந்த 30-60 வயதுடைய வாக்காளர்கள்.

ஆங்கிலத்தில் ஒப்பீனியன் மேக்கர்ஸ் எனப்படும் தீர்மானகரமான சிந்தனைக் கொண்டவர்களான மத்திய வயது, மத்திய வர்க்க வாக்காளர்களே அடுத்த ஆட்சியை தீர்மானிப்பவர்கள் என்பதில் அய்யமிருக்க முடியாது. பிற வயதுடைய வாக்காளர்களில் மாணாக்கர்களில் கணிசமானவர்கள் ஆல்-பாஸ் முடிவிற்காக முதல்வர் கட்சிக்கு வாக்களிக்கலாம். இது சிறிய எண்ணிக்கையாகும். முதியோர்களில் ஓய்வூதியம் பெறுவோர் திமுக அணிக்கே அதிகம் வாக்காளிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எவ்வித அரசுச் சலுகையும் இல்லாதவர்கள் நடுநிலையினர். கட்சி சார்பு இல்லாது கடைசி வரையில் முடிவு செய்யாதவர்கள் ஆவர். ஆகையால், தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் தீர்மானம் செய்யப்போகிறவர்கள் 30-60 வாக்காளர்களே என்பதில் அய்யமில்லை.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு