ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய ரூ.18 கோடி டூ .20 கோடி வரை செலவு!

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 1951-ம் வருடம் நடந்த சென்னை மாகாண முதல் சட்டசபைத் தேர்தல் நடத்த செலவு சில லட்சங்களில்தான் இருந்தது. நாளை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான செலவு கிட்டத்தட்ட 620 கோடி ரூபாய் ஆக வாய்ப்பு என அறிவித்துள்ளது தேர்தல் கமிஷன். இந்த 60 ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தின் செலவு கிட்டத்தட்ட 600 மடங்கு உயர்ந்துள்ளது. இது தவிர போலீஸ் பாதுகாப்பு, அரசு இயந்திரத்தின் செலவுகளை எல்லாம் கணக்கிட்டால் மேலும் சில கோடியை தாண்டும் என்பதுதான் தகவல்.
தமிழ்நாட்டில் முந்தைய தேர்தலில் ரூ.22 லட்சமாக இருந்த தேர்தல் செலவு கணக்கு, இப்போது ரூ30 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பின் என்ன? தேர்தல் என்றால் நாடெங்கும், நக்ரெங்கும், கிராமமெங்கும் திருவிழா போல் கொண்டாட்டமாக இருக்கும். பட்டிதொட்டியெல்லாம், ‘ஸ்பீக்கர்’ அலறும். பொது இடங்களில் தேர்தல் அலுவலகம் திறக்கப்படும்.அதிகாலையிலே அங்கு கட்சியினர் கூட்டம் திரளும். காபியும், வடையும் வந்த வண்ணம் இருக்கும். காலை உணவு, மதிய விருந்து, இரவு சாப்பாடு என, மூன்று வேளையும் சமையல் வேலை நடக்கும். அதற்கென சமையல் காரர்கள் அமர்த்தப்பட்டு, தங்குமிடமும் ஏற்பாடுசெய்யப்படும். எங்கு பார்த்தாலும், சுவர் விளம்பரம் ஜொலிக்கும் இல்லையா? ஆனால் இப்போது அப்படி பண்ண தடையான நிலையிலும் ஒரு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் என எல்லோரும் செய்யும் செலவை கூட்டினால் ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை செலவாகும் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். அப்படியென்றால் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தேர்தலுக்கு 2000 கோடியில் இருந்து 4000 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று கூறப்படுவது குறித்து பிரிதொரு சமயம் அலசுவோம்..
நம் பத்திரிகை நண்பர் சொன்னது போல் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள், ‘தேர்தலில் உங்களால் 3 கோடி செலவிட முடியுமா?’ என வேட்பாளர்களிடமே நேரடியாக கேட்டு வருகின்றன. அப்படியென்றால் அதற்கு குறைவாகவா தேர்தலில் செலவு செய்யும். திமுக 3 கோடி, அதிமுக 3 கோடி என தொகுதிக்கு இரு கட்சிகள் 6 கோடி ரூபாயை செலவழித்தால், 234 தொகுதிகளுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 1404 கோடி ரூபாய். இதோடு அரசியல் தலைவர்களின் பிரசார செலவு, தலைமை செலவிடும் தொகை என கூட்டினால் இரு கட்சிகளின் செலவே 2 ஆயிரம் கோடியை தொடும். ஆனால் அரசியல் வாதிகளுக்கு இணையாக அரசு காட்டும் செலவு கணக்கைக் கண்டால் மிரண்டு போவீர்கள்.
மேலும் ஒரு தொகுதியில் பிரசாரத்துக்கு மட்டும் இந்த இரு அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்யும் என தெரியுமா? தினசரி பிரசாரம், வாகன செலவு, பேனர், போஸ்டர், குவார்ட்டர், பிரியாணி, பொதுக்கூட்ட செலவு, ஓட்டுக்கு பணம், தேர்தல் நாள் செலவு என ஒரு தொகுதியில் சர்வ சாதரணமாக 3 கோடியை செலவழிப்பார்கள். இதில் பெரும் செலவு பிடிப்பது ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான். 2 லட்சம் பேரில் இருந்து 4 லட்சம் பேர் வரை இரு தொகுதியில் வாக்காளர் உள்ள நிலையில், குறைந்த பட்சமாக எடுத்துக் கொண்டால் கூட, 25 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேருக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் என கணக்கிட்டால் கூட ரூ.1.25 கோடியில் இருந்து ரூ.2.50 கோடி வரை செலவாகும்.
இதற்கு அடுத்து பெரிய செலவு என எடுத்துக்கொண்டால் அது பிரசார செலவு. ஒரு தொகுதியில் ஒரு நாளைக்கு 10 இடங்களில் பிரசாரம் செய்வார்கள் என எடுத்துக்கொண்டால், ஒரு இடத்துக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் செலவாகும் என்றால் கூட ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவாகும். அப்படியென்றால் 30 நாள் பிரசாரம் என எடுத்துகொண்டால் கூட 30 லட்சம் செலவாகும். இதில் வாகன செலவு அடங்காது. வாகன செலவுக்கு தினமும் 50 ஆயிரம் செலவாகும். 30 நாளைக்கு 15 லட்சம் செலவாகும். இது தவிர ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்த பட்சம் மூன்று லட்சம் செலவாகும். 10 பொதுக்கூட்டங்களை நடத்தினால் கூட 30 லட்சம் செலவாகும்.
இதில் மிகப்பெரிய செலவு கட்சி நிர்வாகிகளுக்கு செலவழிப்பது. ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் 100 வாக்குச்சாவடி என்றால், 100 சாவடிகளிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் சுமார் 100 பேருக்காவது தினமும் செலவிட வேண்டியிருக்கும். ஒருவருக்கு பிரியாணி, குவார்ட்டர் போன்ற வசதிகளோடு பணத்தை செலவிட்டால் எப்படியும் ஒரு நபருக்கு 500 ரூபாயாவது செலவாகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 50 லட்சம். குறைந்த பட்சம் கடைசி 3 நாள் இப்படி செலவிட்டால் கூட 1.50 கோடி ரூபாய் தேவைப்படும். இது தவிர தேர்தல் நாளன்றும் சில லட்சங்கள் தேவைப்படும்.
ஆக… ஒரு தொகுதியில் சர்வ சாதாரணமாக 3 கோடி ரூபாயில் 15 கோடி வரை இருந்து செலவிடுகிறார்கள். அப்பேர்ப்பட்ட பணக்கார ஆசாமியைத் தேர்ந்தெடுக்கும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!
நிலவளம் ரெங்கராஜன்