வியப்பூட்டும் தற்கொலைப் பறவைகள்!

வியப்பூட்டும் தற்கொலைப் பறவைகள்!

சில நாள்களுக்கு முன் பத்திரிகைகளில் ஒரு விநோதமானதும் வியப்பூட்டுவதுமான செய்தி வெளியானது. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஜட்டிங்கா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பலவிதமான பறவைகள் பெரும் எண்ணிக்கை யில் வானத்திலிருந்து சடலங்களாக விழுகின்றன. அதுகுறித்து ஆய்வு செய்ய வந்த பறவையியல் நிபுணர்கள் காரணம் புரியாமல் திகைக்கிறார்கள்.பௌர்ணமி தினத்திற்குச் சில நாள்கள் முன்பிருக்கும் காலத்தில் தென் திசையிலிருந்து காற்று வீசும்போது அடர்த்தியாக பனிமூட்டமும் இருந்தால் அந்தக் கிராமத்தின் சுற்று வட்டாரத்திலிருக்கிற பறவைகள் இரவு நேரங்களில் பதற்றமடைந்ததைப்போல வானில் திரண்டு வட்டமிடத் தொடங்குகின்றன.
Migratory birds from Siberia fly in Gharana village
அப்போது ஜட்டிங்கா ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் ஒரு பிரகாசமான ஒளியுள்ள விளக்கு தென்பட்டால் பறவைகள் கீழே வந்து அந்த விளக்கைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு சில நிமிடங்களுக்குப் பிறகு அசைவற்றுப் போகின்றன. அந்த நிலையில் அவற்றைத் தொட்டுத் தூக்கினாலும் இறக்கைகளை அடித்துக் கொண்டு தப்பிப் பறந்து போக முயலுவதில்லையாம்.

அந்தச் சமயத்தில் லேசான மழைத்தூறலும் சேர்ந்து கொண்டால் அந்த விளக்கை நாடிவரும் பறவைகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து விடுகிறது. அப்போது விளக்கை அணைத்து விட்டால் வானில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிற பறவைகள் தொடர்ந்து பறந்து கொண்டேயிருக்கின்றன. பனிமூட்டமும் தென் திசையிலிருந்து வரும் காற்றும் நீடிக்கிறவரை அவை பறந்து கொண்டே இருக்கும். ஆனால் பனிமூட்டமோ, தென் திசைக் காற்றோ இல்லாதபோதும், மற்ற நாள்களிலும் இத்தகைய விநோத நிகழ்வு ஏற்படுவதில்லை.

ஜட்டிங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைப் பொழிவு அதிகம். அங்கு ஆண்டுக்கு சராசரியாக 270 சென்டிமீட்டர் வரை மழை கொட்டும். ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மத்திவரை அங்கு மழைப்பருவம் நீடிக்கிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெருமழை பெய்யும். தென் மேற்கு திசையை நோக்கியிருக்கிற மலைச் சரிவுகளில் கூடுதலாக மழை பெய்யும். அக்காலங்களில் சராசரி வெப்பநிலை 21 செல்சியஸ் டிகிரியாக இருக்கும்.

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் மூடுபனி அடர்த்தியாக உண்டாகி இரவிலும் பகலிலும் இடைவிடாமல் நீடிக்கும். செப்டம்பரிலும் அக்டோபரிலும் தெற்கிலிருந்து காற்று வீசுவது ஒரு விசேஷமான சம்பவம்.

ஏனெனில் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அப்பகுதியில் ஒரு தீவிரமான நில நடுக்கம் ஏற்பட்டுப் பேரழிவை உண்டாக்கியது. அதற்கு முன்பெல்லாம் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை தென் மேற்குத் திசையிலிருந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கித்தான் காற்று வீசிக்கொண்டிருந்தது.

அப்பகுதியில் கடந்த பல நூற்றாண்டுகளாகவே ஆண்டு முழுவதும் மழையும் காற்றும் அதிகமாகத்தான் இருந்து வருகின்றன. ஜட்டிங்கா என்ற பெயருக்கே “மழையும் காற்றும் பயணம் செய்யும் சாலை’ என்றுதான் பொருளாம்.

ஜட்டிங்கா சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள கிராமம். அது ஒரு குன்றில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. அக்குன்று மேற்கில் ரயில் நிலையத்தை நோக்கியும் கிழக்கில் ஒரு அரசு மருத்துவமனையை நோக்கியும் சரிகிறது. ரயில் நிலையத்திற்கும் மருத்துவமனைக்குமிடையிலுள்ள பகுதியில் ஒளி விளக்குகளை வைத்தால் மட்டுமே பறவைகள் கீழே இறங்கி வருகின்றன என்பது ஒரு புரிபடாத புதிராக உள்ள நிகழ்வு.

அப்பகுதியில் முப்பது நாற்பது இடங்களில் ஒளி விளக்குகளை வைத்துக் கிராமவாசிகள் பறவைகளைக் கவர்ந்திழுத்துப் பிடிக்கிறார்கள். அதற்குத் தீவட்டிகளும் சொக்கப்பனைகளும் பயன்படுத்தப்பட்டன. கடந்த பல ஆண்டுகளாக பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் மின் விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பத்து பதினைந்து அடி இடைவெளியில் அவை வைக்கப்படுகின்றன. 1950ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குப் பின் பறவைகளின் வரத்து வெகுவாகக் குறைந்து விட்டதாக அந்த கிராமவாசிகள் கூறுகின்றனர்.

புவியியல் வல்லுநர்கள் ஜட்டிங்கா முகடு உள்ள பள்ளத்தாக்கின் அடியில் கண்டத் தகடுகள் பிளவுபட்டு மேலும் கீழுமாக அமைந்த ஒரு புவியியல் பிழை உள்ளதாகச் சொல்லுகிறார்கள். அதற்கு “ஹாஃப்லங் டிசாங்’ என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.

அந்த மாதிரியான இடங்களில் நில நடுக்கங்கள் அடிக்கடி நேரும். இந்த புவியியல் பிழைக்கும், நில நடுக்கம் ஏற்பட்டதற்கும் பறவைகளின் வரத்து குறைந்ததற்குமிடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை அறிய அறிவியலார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பனிமூட்டமும் தெற்கத்திக் காற்றும் சேர்ந்திருக்கிறபோது இரவில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக முப்பது அல்லது நாற்பது பறவைகள் வந்து விழுகின்றன. பனிமூட்டமும் காற்று வேகமும் அதிகமாயிருந்தால் அந்த எண்ணிக்கை நூறைக் கூடத் தாண்டும். மழைத் தூறலும் சேர்ந்துவிட்டால் அது மேலும் அதிகமாகும்.

இவ்வாறு ஓராண்டில் சராசரியாக 2,000 பறவைகள் வரை பிடிபடுகின்றன. அவற்றில் எல்லா இனத்தைச் சேர்ந்தவையும் எல்லா வயதுள்ளவையுமான பறவைகள் உள்ளன. ஆனால், மைனா, சிவப்பு மூக்கு புல்புல், சாதாரணக் குருவி ஆகிய பறவையினங்கள் இவ்வாறு வந்து விழுவதில்லை. மற்ற பறவைகள் விளக்குகளை நாடி ஓடி வரும்போது இவை மட்டும் மரங்களில் தத்தம் கூடுகளில் நிம்மதியாகத் தூங்குகின்றன.

விளக்குகளை நாடி வந்துவிழுகிற பறவைகள் உணவுகொள்ள மறுக்கின்றன. அவற்றுக்குப் பழக்கமான அல்லது பிடித்தமான உணவு வகைகளைக்கூட அவை தொடுவதில்லை. அவற்றின் வாயைத் திறந்து வலுக்கட்டாயமாக உணவை ஊட்டினால்கூட அது வாயிலேயே நின்றுவிடுகிறது. பறவைகளை விடுவித்தவுடன் அவை அந்த உணவைத் துப்பிவிடுகின்றன. இவ்வாறு பட்டினி கிடப்பதால் அவை விரைவில் இறந்து போகின்றன.

மூன்று விரல் கொண்ட நீல மீன்கொத்தி, சிவப்பு மீன்கொத்தி, இந்திய பிட்டா, மஞ்சள் பிட்டெர்ன், குருட்டுக் கொக்கு, டிராங்கோ, குயில், பச்சைப்புறை போன்ற பறவைகள், கூட்டம் கூட்டமாக விளக்குகளை நாடி வந்து விழுகின்றன. அவற்றை கையிலெடுத்தால் கூட அவை திமிறுவதில்லை. வைத்த இடத்தில் அசையாமல் அமர்ந்து அரை மயக்க நிலையிலிருக்கின்றன.

இந்த விநோதச் சம்பவம் ஜட்டிங்கா கிராமத்தைச் சுற்றியுள்ள ஒரு சிறு பகுதியில் மட்டுமே நிகழ்கிறது. பூமியின் அடியாழங்களில் மழைக்காலங்களில் புவிக் காந்தப் புலங்களின் செறிவுகளில் குழப்பங்கள் ஏற்படுவது இதற்குக் காரணமாக இருக்கலாமென்று ஆய்வர்கள் ஊகிக்கிறார்கள்.

மழைக்கால மேகங்களிலும் மூடு பனியிலும் நிலை மின்சாரம் பரவியிருக்கும். அது இடைவிடாது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். அதன் விளைவாக காற்றில் ஒரு மின்புலமும் ஒரு காந்தப் புலமும் தோன்றும். அவை பூமியின் காந்தப் புலச்செறிவில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும். இந்த ஏற்ற இறக்கங்களை நம்மால் உணர முடியாது. பறவைகளாலும் விலங்குகளாலும் உணர்ந்தறிய முடியும்.

பகல் வெளிச்சத்தில் பனி மூட்டம் இருந்தால்கூட, பறவைகள் வழி கண்டுபிடித்து நடமாட முடியும். ஆனால் இரவு நேரங்களில் மின் காந்தப் புலத்தில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக பறவைகள் கிளர்ச்சியடைந்து கூடுகளை விட்டு வெளியே வந்து திக்கு தெரியாமல் அங்குமிங்கும் பறக்கத் தொடங்கும். அவை காந்தப் புலச்செறிவு குறைவாயிருக்கிற இடங்களைத் தேடிப் பறந்து செல்லும். அவை பிரகாசமான வெளிச்சத்தைக் கண்டதும் கீழேயிறங்குகின்றன.

நீண்ட நேரம் பறந்த களைப்பும், மனக்குழப்பங்களும் அவற்றைப் பெரும் சோர்வுக்குள்ளாக்கி விடுகின்றன. ஜட்டிங்காவின் புவியியல் அமைப்பின் காரணமாக மின்சாரம் செறிந்த மேகங்களும் பனித்துளிகளும் அப்பகுதியை நோக்கி வந்து திரள்கின்றன. அவற்றில் மின்னேற்றங்களும் மின்னிறக்கங்களும் ஏற்பட்டு பறவைகளின் மனநிலையையும் நடத்தைகளையும் பாதிக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

கே.என். ராமசந்திரன்

Related Posts