கோலிவுட்டின் பக்கா ஆக்ஷன் ‘பிளாஸ்ட்’ -விமர்சனம்!
தமிழ் சினிமா எத்தனையோ ஆக்ஷன் படங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், எடுத்துக் கொண்ட கதைக்கு தேவையில்லாத காதல் டூயட்டுகள், திணிக்கப்பட்ட காமெடி டிராக்குகள் எதுவும் இல்லாமல், ஆரம்பம் முதல் இறுதி வரை ஜெட் வேகத்தில் நகரும் ஒரு நேர்த்தியான, ‘நோ-நான்சென்ஸ்’ ஆக்ஷன் த்ரில்லரைக் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் அந்த ஏக்கத்தைத் தீர்த்து, ரசிகர்களுக்கு ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை வழங்கியிருக்கிறது! அதே சமயம் இயக்குநர் தான் எடுத்துக் கொண்ட இந்த சிறப்பான கதையோட்டத்திற்கு இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து லாஜிக் மீறல்கள் இல்லாமல் பார்த்திருந்தால் கோலிவுட்டையே அதிர வைத்திருக்கும். இருப்பினும், இந்த ‘சம்மர் பிளாஸ்ட்’ தியேட்டர்களில் காது கிழியும் அதிரடிச் சத்தத்தை மிக வெற்றிகரமாக ஏற்படுத்தி விடுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கதைக்களம்: கராத்தே குடும்பமும் கார்ப்பரேட் வில்லனும்!
சிங்காரச் சென்னையில் தற்காப்புக் கலைக் கூடத்தை நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் ராஜாராம் (அர்ஜூன்), இந்தச் சமூகத்தில் பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தன் மகள் நிலாவிற்கு (ப்ரீத்தி முகுந்தன்) சிறு வயது முதலே கராத்தேயைக் கற்றுத் தந்து ஒரு சிங்கப் பெண்ணாக வளர்க்கிறார். தந்தையிடம் கற்ற வித்தையை நிலா அநீதிகளுக்கு எதிராகப் பிரயோகிக்கும் அதிரடிக் காட்சிகளுடன் படம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. மற்றொரு துருவத்தில், ஒரு மலைக்கிராமத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முற்றிலும் அழிக்கத் துணியும் கார்ப்பரேட் திமிங்கிலம் வருண் தயாளன் (ஜான் கொக்கன்), தன் பேராசைக்காகச் சட்டவிரோதச் சுரங்கம் தோண்ட அடியாட்களை ஏவி கோரப் பிடியை இறுக்குகிறான்.
முற்றிலும் தொடர்பில்லாத இந்த இரண்டு உலகங்களும் ஒரு எதிர்பாராத புள்ளியில் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் போது, அந்த கார்ப்பரேட் மாஃபியா கும்பல் இந்த கராத்தே குடும்பத்தின் மீது பாய்கிறது. நவீன ஆயுதங்களும், ஆள் பலமும் கொண்ட கார்ப்பரேட் வில்லனின் கொடூர சதி வலைக்குள் அர்ஜுனின் குடும்பம் எப்படிச் சிக்கிக்கொள்கிறது என்பதும், இறுதிப் போரில் ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களும் தங்களின் அசாத்திய கராத்தே கலையையும் நெஞ்சுறுதியையும் மட்டுமே பேராயுதமாக மாற்றி, பல்வேறு இடங்களைச் சுற்றி, முட்டி, மோதி அந்தப் பேராபத்தை எப்படி அடித்து நொறுக்கி ‘ப்ளாஸ்ட்’ செய்கிறார்கள் என்பதுமே படத்தின் அனல் பறக்கும் கதையாகும்.
மூன்று வில்லன்கள்; அதிரடித் திரைக்கதை!
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காட்சிகள் பரபரவென நகரத் தொடங்கிவிடுகின்றன. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் ஹீரோவை மட்டுமே சுற்றி வராமல், கதையும் காட்சிகள் நகரும் விதமும் மூன்று வில்லன்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.
உட்கார்ந்த இடத்திலிருந்தே மூளையைப் பயன்படுத்திப் காய் நகர்த்தும் கார்ப்பரேட் வில்லனாக ஜான் கொக்கன், சீனியர் ரவுடியாக அமைதி கலந்த மிரட்டல் காட்டும் பவன், பரபரப்பான வில்லத்தனத்தில் மிரட்டும் அருண் சிதம்பரம் என மூன்று வில்லன்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்து, படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளனர்.
மிரட்டிய ஆக்ஷன் கிங் & அதிரடி நாயகிகள்!
-
ஆக்ஷன் கிங் அர்ஜுன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தான் இன்னமும் ஆக்ஷன் கிங் தான்’ என்பதை அர்ஜுன் அதிரடியாக நிரூபித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஜென்டில்மேன், முதல்வன் படங்களை நினைவுபடுத்துகிறார். ஒரு கராத்தே மாஸ்டராக தன் பெண்ணிற்கு தைரியம் தரும் அப்பாவாகச் சிறப்பாக நடித்துள்ளார்.
-
ப்ரீத்தி முகுந்தன்: தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகிகள் செய்யும் காதல் டூயட் என்று இல்லாமல் ஆக்ஷனில் பிரமிக்கவைக்கும் அளவுக்கு அதகளம் செய்துள்ளார். நிலாவின் கராத்தே சண்டைக் காட்சிகள் படத்தின் ஆகச்சிறந்த ஹைலைட்!
-
அபிராமி: ஒரு அம்மாவாக ஒரு வித பதைபதைப்பை வெளிப்படுத்தும் அதே வேளையில், ஆக்ஷன் காட்சிகளில் இவரும் இறங்கி அடித்துத் தூள் பறக்கச் செய்துள்ளார்.
டெக்னிக்கல் மாஸ்டர் கிளாஸ்: இசையும் படத்தொகுப்பும்
இப்படத்தின் சண்டைக் காட்சிகள் நீளமாக இருந்தாலும், சலிப்படைய வைக்காமல் மிக நேர்த்தியாகவும் ரசிக்கும்படியும் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் சண்டை பயிற்சியாளர் மிகவும் அதிகமாக உழைத்து இருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ரவி பஷ்ரூரின் அதிரடியான பின்னணி இசை படத்தின் பரபரப்பிற்குப் பெரிய தீனி போடுகிறது.
படத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் சில லாஜிக் மீறல்களைத் தனது கச்சிதமான கத்தரியால் மறக்கடிக்கச் செய்து, கதையைத் தடதடவென நகர்த்திச் சென்றதில் படத்தொகுப்பாளரின் (Editing) பங்கு மிக முக்கியமானது. சர்வைவல் ஆக்ஷன் த்ரில்லர் (Survival Action Thriller) பாணியில் படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகிறது.
தியேட்டர் பிளாஸ்ட்!
சிறந்த நடிகர்களின் தேர்வு, அதற்கேற்றார் போல் நடிப்பு, காட்சிகள் நகரும் விதம், படத்தொகுப்பு, ஆக்ஷன் என அனைத்தும் மிகச் சிறப்பாகக் கைக்கொடுத்துள்ளன. முன்னரே சொன்னது போல சில இடங்களில் வரும் அதீத லாஜிக் மீறல் நெருடல்கள் ஒரு குறையாக இருந்தாலும், அவற்றை மறந்து இந்த ‘சம்மர் பிளாஸ்ட்’ திரைப்படத்தைக் குடும்பத்துடன் தியேட்டரில் கண்டு ரசிக்கலாம்!
மார்க்: 3.75/5


