வட கிழக்கு பருவமழை 28–ந்தேதி தொடங்குமுங்கோ!

வட கிழக்கு பருவமழை 28–ந்தேதி தொடங்குமுங்கோ!

இந்திய துணை கண்டமானது தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவகாலங்களை கொண்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும்.தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவ மழையால் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்யும். அப்போது வெப்ப சலனம் காரணமாக மற்ற இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்படும்.
rain oct 23
வடகிழக்கு பருவ மழையின் போதுதான் சென்னையிலும் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் முழுமையான மழை பெய்யும். எனவே தான் வடகிழக்கு பருவமழை தான் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை முடிந்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 28–ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய வட்டாரம், “வழக்கமாக அக்டோபர் 3-ஆவது வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும். நிகழாண்டில் அக். 20-இல் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை. பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தால், நிகழாண்டு சற்று தாமதமாகவே வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும். அதாவது, கூடுதலாக 5 நாள்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி இந்த வாரத்தின் இறுதிக்குள் பருவமழை தொடங்க அதிக வாய்ப் புள்ளது” என்றும் “வடகிழக்கு பருவமழை தமிழகத்துக்கு சராசரியாக 44 செ.மீ. மழை கிடைக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக இயல்பான மழை அளவை விட சற்று குறைவாகவே பெய்துள்ளது. கடந்த ஆண்டு சராசரி மழை அளவிற்கு 2 சதவீதம் குறைவாக பெய்து இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 33 சதவீதம் மழை அளவு குறைவாக பெய்தது.” என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே தென் கிழக்கு வங்கக் கடல், குமரிக்கடல் பகுதிகளில் இரு வேறு காற்று மேலடுக்கு சுழற்சிகள் உருவாகின. இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டத்தில் மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 80 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 50 மி.மீ, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 40 மி.மீ, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 30 மி.மீ, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 20 மி.மீ மழை பதிவானது.

தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்த வரை, பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையைப் பொருத்தவரை அதிகபட்சமாக 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்றார் அவர்.

Related Posts