நண்பன் கூப்பிட்டா வராம இருக்க முடியுமா? ‘அதிரடி’ விழாவில் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி!

நண்பன் கூப்பிட்டா வராம இருக்க முடியுமா? ‘அதிரடி’ விழாவில் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி!

டொவினோ தாமஸ், பசில் ஜோசப் மற்றும் வினீத் ஸ்ரீனிவாசன் கூட்டணியில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘அதிரடி’. இந்தப் படத்தை வரும் மே 22-ஆம் தேதி தமிழக திரையரங்குகளில் பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இதையொட்டி, சென்னை எழும்பூரில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பு கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும் தற்போதைய சி.எஸ்.கே வீரருமான சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

சஞ்சு சாம்சன் விருப்பம்: நடித்தால் பெரிய ரோல் தான்!

விழாவில் பேசிய சஞ்சு சாம்சன், “திரைப்பட விழாக்கள் எனக்குப் புதிய அனுபவம். ஆனாலும் என் நெருங்கிய நண்பன் பசில் ஜோசப் அழைக்கும் போது வராமல் இருக்க முடியுமா? அதான் ஓடி வந்துட்டேன்” என்றார். மேலும், “இந்தப் படத்தில் என்னை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பசில் முயன்றார். ஆனால் எனக்கு சின்ன ரோல் வேண்டாம், நடித்தால் கொஞ்சம் பெரிய கேரக்டராகத்தான் இருக்க வேண்டும் என்று மறுத்துவிட்டேன்” என கலகலப்பாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நண்பரைப் பற்றிப் பகிர்ந்த அவர், “பசில் பார்க்க எப்போதும் சிரித்த முகத்துடன் ஜாலியாக இருந்தாலும், வேலை என்று வந்துவிட்டால் படு சீரியஸான ஆள். ஒரு வாரத்திற்கான திட்டமிடலுடன் உழைப்பவர். அவரது உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைக்க வேண்டும்” என வாழ்த்தினார்.

சென்னை எனக்கு இரண்டாவது வீடு: சி.எஸ்.கே குறித்து நெகிழ்ச்சி

சி.எஸ்.கே அணியில் இணைந்தது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், “பெரிய ஃபிரான்சைஸ், அதிக கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பிறகு எனக்குப் பொறுப்பு கூடியிருக்கிறது. கிரிக்கெட்டை தாண்டி வெளியே எங்குச் சென்றாலும் தமிழ் ரசிகர்கள் ‘சேட்டா.. அடுத்த மேட்ச் ஜெயிங்க, கோப்பையைத் தூக்குங்க, தட்றோம் தூக்குறோம்’ என அன்பைக் கொட்டுகிறார்கள்.

சிறு வயதிலிருந்தே நிறைய தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இப்போது தமிழ்நாடு மற்றும் சென்னை அணிக்காக விளையாடுவதால், தமிழகம் எனது இரண்டாவது வீடாகவே மாறிவிட்டது. இங்குள்ள உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும், கடந்த வாரம் கூட இங்குள்ள புகழ்பெற்ற ‘நாயர் மெஸ்ஸில்’ சாப்பிட்டேன், உணவு பிரமாதமாக இருந்தது” என்று நெகிழ்ந்து பேசினார்.

தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்ப வசனங்கள்: பசில் ஜோசப் ஓபன் டாக்

படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான பசில் ஜோசப் பேசுகையில், “தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, மலையாள வசனங்களை அப்படியே மொழிபெயர்க்காமல், தமிழ் கலாச்சாரத்தோடு ஒத்துப் போகும் வகையில் மெனக்கெட்டு வசனங்களை எழுதியுள்ளோம். படத்திற்கு நானே தமிழிலும் டப்பிங் பேசியுள்ளேன். ஆரம்பத்தில் சில வார்த்தைகள் கடினமாக இருந்தாலும், பின்னர் தமிழ் அருமையாக வந்தது.

உண்மையான உழைப்புக்குத் தமிழ் ரசிகர்கள் எப்போதும் கைக்கொடுப்பார்கள். எனக்கு நடிப்பை விட இயக்குநராக ஓட்டுநர் இருக்கையில் அமர்வதுதான் மிகவும் பிடிக்கும்” என்றார். இயக்குநர் அருண் அனிருதன் மற்றும் எழுத்தாளர் பால்சன் சக்ரியா ஆகியோர் பேசுகையில், “அதிரடி என்பது சுத்தமான தமிழ் வார்த்தை. கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்குத் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Posts