காதலும் மோதலும் கலந்த ‘சட்டென்று மாறுது வானிலை’- விமர்சனம்!
நேற்று (மே 15, 2026) திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. நடிகர் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் கூட்டணியில், பாபு விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரோமண்டிக் டிராமா திரைப்படம், தற்போதைய கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் எந்த அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது? இதோ விரிவான, ஆந்தை ரிப்போர்ட்டர் எடிட்டோரியல் திரைப்பார்வை:
ஒன்லைன்: காதலும்.. சிஸ்டத்தின் மோதலும்!
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் போக்கில் வாழும் ஒரு அனாதை இளைஞன் (ஜெய்). இன்னொரு பக்கம், பவர்ஃபுல் பின்னணி கொண்ட ஒரு அமைச்சரின் மகள் (மீனாட்சி கோவிந்தராஜன்). எதிர்பாராத சூழலில் இருவருக்குள்ளும் காதல் மலர, பெற்றோரின் சம்மதம் இல்லாமல் அவசர அவசரமாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஆனால், நிஜ வாழ்க்கை சினிமா போல அவ்வளவு எளிதானதாக இல்லையே! திருமணத்திற்குப் பிறகு அவர்கள் சந்திக்கும் கடுமையான நிதி நெருக்கடிகள், அதிகார வர்க்கத்திடமிருந்து வரும் மிரட்டல்கள், உயிருக்கான ஆபத்துகள் என ‘வானிலை’ சட்டென்று மாறுகிறது. இந்தச் சூறாவளியைச் சமாளித்து, தங்களது காதலையும் வாழ்க்கையையும் இந்த ஜோடி எப்படிப் பாதுகாக்கிறது என்பதுதான் படத்தின் மையக்கதை.
திரைக்கதை மற்றும் இயக்கம்: பாபு விஜய்யின் மேக்கிங் ஸ்டைல்
இயக்குநர் பாபு விஜய் ஒரு வழக்கமான காதல் கதையைத் கையில் எடுத்திருந்தாலும், அதற்குள் பொருளாதாரச் சிக்கல்களையும் அரசியல் பின்னணியையும் சேர்த்த விதம் பாராட்டுக்குரியது. படத்தின் முதல் பாதி காதலும், காமெடியுமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க த்ரில்லர் மற்றும் டிராமா மோடிற்கு மாறுகிறது.
அதிவேகமாக நகரும் காட்சிகளும், அடுத்தடுத்து ஜோடிக்கு வரும் ஆபத்துகளும் திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. எனினும், சில இடங்களில் வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலா காட்சிகள் எட்டிப்பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
காஸ்டிங் பெர்ஃபார்மன்ஸ்: நடிகர்களின் பங்களிப்பு
-
ஜெய்: ‘கேர்ஃப்ரீ’ இளைஞன் பாத்திரத்தில் ஜெய் வழக்கம் போலத் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். பொறுப்பற்ற ஆளாக இருந்து, திருமணத்திற்குப் பின் குடும்பத்தைக் காக்கப் போராடும் இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் முதல் பாதி படம் வரை அவர் விஜய் போலவே ஸ்டைல்கள் செய்து நடிப்பது ரசிகர்களை குதூகலப்படுத்தும். நடனம் ஆக்ஷன் காட்சிகளிலும் விஜய் பாணியிலேயே நடித்திருப்பது ஸ்மைலியை வரவழைக்கிறது
-
மீனாட்சி கோவிந்தராஜன்: அமைச்சரின் மகளாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, காதலுக்காக வறுமையையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் பாத்திரத்தில் மீனாட்சிக்கு நல்ல ஸ்கோப். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.
-
யோகி பாபு & சத்யன்: படத்தின் முதல் பாதியில் வரும் காமெடி டிராக்குகளுக்கு இவர்களது டைமிங் கவுண்டர்கள் கைகொடுக்கவில்லை.
-
கருடா ராம்: படத்தில் வில்லனாக மிரட்டியிருக்கிறார். இவரது அச்சுறுத்தும் உடல்மொழியும், க்ரூயல் பார்வையும் படத்திற்குத் தேவையான அழுத்தத்தைத் தந்துள்ளன. ஸ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நேர்த்தியாகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்பக் கூட்டணி: படத்தின் ஆகச்சிறந்த பலம்
BV Frames மற்றும் T-Series இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்குத் தொழில்நுட்ப ரீதியாகப் பெரிய பலம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
-
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (இசை): படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, கதையின் ஓட்டத்திற்குப் பெரும் பலம். குறிப்பாக, லெஜண்ட் தேவாவின் எனர்ஜியும், ஸ்ரேயா கோஷலின் தேன் குரலும், ஜெயராம் பாலசுப்பிரமணியத்தின் ஆலாபனைகளும் தியேட்டரில் அப்ளாஸ் வாங்குகின்றன.
-
பாடல்களின் வரிகள்: மகாகவி பாரதியாரின் வரிகளைப் பயன்படுத்திய விதம் மற்றும் சினேகன், கிரிஷ், எம்.எஸ். கிருஷ்ணா ஆகியோரின் வரிகள் ரசிக்கும்படி உள்ளன.
-
ரிச்சர்ட் எம் நாதன் (ஒளிப்பதிவு): காதலுக்கான கலர்புல் டோனையும், மோதல்களுக்கான ரா-வான (Raw) விஷுவலையும் தனது கேமரா லென்ஸ் வழியே அழகாகக் கடத்தியுள்ளார்.
-
டார்லிங் ரிச்சர்ட்சன் (எடிட்டிங்): விறுவிறுப்பான காட்சிகளை நேர்த்தியாகக் கட் செய்து, கதையின் வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
எடிட்டோரியல் பார்வை: நிஜமும் சினிமாவும்!
“சட்டென்று மாறுது வானிலை” காதலைத் தாண்டி, இன்றைய சூழலில் அவசரப்பட்டுத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதார்த்தமாகப் பேச முயன்றிருக்கிறது. படம் தியேட்டரில் எண்டர்டெயின் செய்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால்,
தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, அதிகார வர்க்கத்தை ஒரு சாமானியன் இவ்வளவு எளிதாக வென்றுவிட முடியுமா என்ற எதார்த்தமான கேள்வியும் எழுகிறது. நிஜ வாழ்க்கையின் கடுமையான சவால்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக, சினிமாத்தனம் இல்லாமல் காட்டியிருந்தால் இந்த வானிலை இன்னும் பிரம்மாண்டமாகப் பொழிந்திருக்கும்!
மார்க் 2.75/5


