32°C
விளம்பரம்
Advertisement

பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமானது!

admin சேலம் Published: May 15, 2014 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மரத்தாலும், ஓடுகளாலும் மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த அரண்மனையில் பூமுகம், சந்திரவிலாசம், தேரோட்ட மாளிகை, இந்திர விலாசம், நவராத்திரி மாளிகை, பெயிண்டிங் ஹால், ஊட்டுப்புரை, தாய் கொட்டாரம், தெற்கே கொட்டாரம், மியூசியம் உள்ளிட்ட பல பகுதிகள் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகிய நாடுகள் சபையில் யுனஸ்கோ அமைப்பு இதை அறிவித்துள்ளதாக திருவனந்தபுரத்தில் கேரளா கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி ஜோசப் தெரிவித்துள்ளார்.
padmanabhapuram palace 1
தற்போது உலகெங்கிலும் உள்ள 981 இடங்களை பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. அவற்றில் இந்தியாவில் மட்டும் 30 இடங்கள் உள்ளன. இப்போது 31-வது இடமாக 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை இந்த பட்டியலில் இணைய உள்ளது.இது குறித்து இன்று தில்லியில் யுனெஸ்கோ அமைப்பினரைச் சந்தித்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப், கூறும்போது புதிய பாரம்பரிய சின்னங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வரைவுப் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனையும் இடம் பெற்றுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக ‘உலக பாரம்பரிய சின்னம்’ என்று அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், நாகர்கோயிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ள அரண்மனை. சுற்றிலும் கிரானைட் கற்களால் ஆன கோட்டை உள்ளது. 1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சிசெய்த இரவிவர்ம குலசேகரப் பெருமாள் என்ற மன்னனால் கட்டப்பட்டது. கேரளக் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்று இந்த அரண்மனை. 86 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த அரண்மனை, காலப்போக்கில் 6 ஏக்கராகக் குறுகிவிட்டது.பத்மநாபபுரம் அரண்மனை இப்போது பரவலாக புகழ் பெற்றுவிட்டது. முக்கிய காரணம் திரைப்படங்கள். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, வருஷம் பதினாறு, சுவாதி திருநாள், மணிசித்ரதாழ் போன்ற படங்கள் அதன் கலையழகை விளம்பரப்படுத்தின. இப்போது சினிமாக்கள் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை, காரணம் பிரபுதேவா. அவரது ஒரு படத்தின் படமாக்கலில் பல பெண்களை மரக்கட்டுமானங்கள் மீது அரைநிர்வாணமாக ஏற்றி நிறுத்தி துள்ள விட்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்து அரசுக்குத் தெரிவிக்க, படஅனுமதி நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவாகவே பத்மநாபபுரத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வு அதிகம். ஊருக்குள் மலையாளிகள்தான் மிகப்பெரும்பாலும். தினசரி தெருக்கூட்டுவதை ஊர்க்காரர்கள் மேற்பார்வை இடுவார்கள். குளங்களில் அழுக்குத்துணிகளை துவைப்பதற்குக்கூட ஊர்க்கட்டுப்பாடு உண்டு.

அரண்மனை என்று சொல்லும்போது நம் மனத்தில் உருவாகும் பிம்பங்கள் எம்ஜிஆர் சினிமாசெட்டுகளால் வடிவமைக்கப்பட்டவை. அபூர்வமாக சிலருக்கு பிரிட்டிஷ் காலகட்டத்தில் கட்டப்பட்ட குவாலியர் ஜெயவிலாஸ் மாளிகை, மைசூர் சாம்ராஜமாளிகை முதலியவை மனதில் எழலாம். அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் சிறிய அமைப்பு இது. மரவேலைப்பாடுகள்தான் இதன் முக்கியச்சிறப்பு. எளிமையும் கலையழகும் கொண்ட கட்டிடத்தொகை .1744-இல் மகாராஜா மார்த்தாண்டவர்மா இதை விரிவாக்கி ஏறத்தாழ இன்றுள்ள வடிவில் கட்டி பத்மநாப பெருமாள் கொட்டாரம் என்று பேரிட்டார். அதன் பிறகே கல்குளம் கொட்டாரமாக இருந்த இது இப்பெயர் பெற்றது. ஊரும் பத்மநாபபுரம் என்று அழைக்கப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஏறத்தாழ எழுநூறு வருட வயது ஆகிறது. கல்குளம் கொட்டாரம் என்ற பேரில் அறியப்பட்ட காலத்தில் மரத்தால் உருவாக்கப்பட்ட சிறிய , ஆனால் அபூர்வமான வேலைப்பாடுகள் கொண்ட அரண்மனை பிற்பாடு பலரால் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டபடியே இருந்திருக்கிறது. மூலக்கட்டுமானம் இப்போதும் தாய்க்கொட்டாரம் என்ற பேரில் இருக்கிறது. கடைசியாக 1942-இல் சி பி ராமசாமி அய்யர் திவானாக இருந்த காலம் வரை கட்டுமானங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

1800-களிலேயே கேரள தலைநகரம் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. பத்மநாபபுரம் அதன் பிறகு இரண்டாம் தலைநகர்தான். இங்கே 1930-களில் கூட நீதிமன்றங்கள் இயங்கிவந்தன. அதற்கான கட்டிடங்கள் பிற்பாடு உருவாக்கப்பட்டன. இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சீட்டாட்டக் களமாக சீரழிந்து கிடந்தது. .முப்பதுவருடம் முன்பு பத்மநாபபுரம் மக்கள் போராடி அதை கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் [நூறுவருட குத்தகை] கொண்டுவந்தனர். கேரள அரசு அரண்மனையின் பழைமை கெடாமல் சீரமைத்து கடுமையான காவலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து அதை பராமரிக்கிறது. மெல்ல சுற்றுலாவருமானம் பெருகி இன்று பலலட்சம் ரூபாய் வருமானம் இருப்பதனால் இப்போது தமிழக அரசு இதை திரும்பக் கோருவதாகச் சொன்னார்கள். அதேசமயம் இதே குமரிமாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னும் இரு அரண்மனைகள் பலவகையான போராட்டங்களுக்குப் பிறகும்கூட சீரழியவிடப்பட்டுள்ளன.

கட்டிடத்தின் முகப்பில் வந்து பணம்கொடுத்து காமிராவை உள்ளே கொண்டுபோனாலும் ஏதோ பழுதினால் புகைப்படங்கள் சரியாக விழவில்லை. 200 ஏக்கர் அளவுள்ளது அரண்மனை வளாகம். மூன்றரை ஏக்கர் அளவுள்ளது அரண்மனை. விசாலமான முற்றத்துக்கு அப்பால் அரண்மனையின் உயர்ந்த பூமுகம் . நுட்பமான மரச்சிற்பவேலைப்பாடுகள் கொண்டது அது. சீனபாணி பகோடாக்களைப்போன்ற வடிவம். இப்பகுதியில் ஆலயங்கள் வீடுகள் அனைத்திலுமே இந்த கூம்புவடிவக்கூரை உள்ளது. காரணம் கடுமையான மழைதான். சமீபகாலமாக கான்கிரீட் வந்தபோது ஆரம்ப உற்சாகத்தில் சதுரவடிவக்கூரைகளை அமைத்துவிட்டு இப்போது மீண்டும் கூம்புக்கு திரும்பிவிட்டார்கள்.

உள்ளே வழிகாட்டி கூடவராமல் செல்ல முடியாது. அரசு நியமித்துள்ள வழிகாட்டிகள் நிரந்தர ஊழியர்கள். அவர்கள்தான் பாதுகாப்புக்கும் பொறுப்பு என்பதனால் சற்று கண்டிப்பாகவே இருப்பார்கள். இப்போது தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வருகிறவர்கள் அரண்மனையின் முக்கியத்துவம் கலை எதுவுமே தெரியாமல் சத்தம்போட்டு பாடியும் அங்கிங்கு ஓடியும் உணவுப்பொருட்களை மறைத்து எடுத்துவந்து தின்று வீசியும் மிகவும் சிரமம் அளிப்பதாக எனக்கு நன்குதெரிந்த வழிகாட்டி சொன்னார்.

தகவல் உதவி:http://www.jeyamohan.in/

வீடியோ பார்க்க:http://www.youtube.com/watch?v=XpjlsgPCB-Y

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்