தமிழ் குரல் / AI Voice
கடற்கரை என்பது நிலப்பரப்பும் கடலும் சந்திக்கும் மணல் அல்லது பாறைகள் நிறைந்த இயற்கை எல்லையாகும்; இது கடல் அலைகளின் கரடுமுரடான அசைவுகள் மற்றும் அலைக்கழிப்புகளால் தொடர்ந்து வடிவம் பெறும் ஒரு தனித்துவமான சூழலியல் மண்டலமாகும். பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் பறவைகளின் புகலிடமாகவும், மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் இத்தகைய அழகிய கடற்கரைகள் மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் நாளுக்கு நாள் கடுமையாக அசுத்தமடைந்து வருகின்றன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு வரும்போது பொறுப்பின்றி வீசிச் செல்லும் பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் காலி டின் கப்புகள் போன்றவை கடற்கரையைத் தூய்மைக்கேடாக்குகின்றன. வணிக நிறுவனங்கள் மற்றும் கடற்கரை ஒட்டியுள்ள கடைகளின் உரிமையாளர்களும் பார்வையாளர்களும் முறையான கழிவு மேலாண்மை செய்யாமல் குப்பைகளைக் கடலில் தள்ளுவதும் மணலில் சேர்ப்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும். மேலும், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லாததால், நகரத்தின் சாக்கடை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நேரடியாகக் கடலில் கலப்பதும், கடல் அலைகளால் அவை மீண்டும் கடற்கரைக்குத் தள்ளப்பட்டு பெருமளவில் அசுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதை சுட்டிக்காட்டவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனி அன்று சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. கடல் வளங்களை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் கழிவுகளால் பெருங்கடல்கள் சந்திக்கும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தவும் இந்த நாள் மிகப்பெரிய விழிப்புணர்வு இயக்கமாக செயல்படுகிறது.
இந்த இயக்கத்தின் தோற்றம் மற்றும் வரலாறு
கடந்த 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன் கன்சர்வென்சி அமைப்பின் மூலமாக மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட விழிப்புணர்வு இயக்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமிது.லிண்டா மால்தே மற்றும் கேத்தி சட்சன் ஆகிய தொலைநோக்கு பார்வையைக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று உலகின் பல்வேறு மூலைகளுக்கும் பரவி உலகின் மிகப்பெரிய தன்னிச்சையான கடல் பாதுகாப்பு இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் சிறிய அளவிலான உள்ளூர் தன்னார்வலர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்தத் தூய்மைப் பணி, காலப்போக்கில் மனித குலத்தின் பேராசையாலும் சுற்றுச்சூழல் அக்கறையின்மையாலும் பெருங்கடல்கள் சந்திக்கும் பேராபத்துகளை உலகிற்கு உணர்த்தும் ஒரு பெரும் மக்கள் இயக்கமாக மாறியது. இதன் விளைவாக, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் தீவிரமாக இணைந்து தங்களது நாட்டின் நீண்ட கடற்கரைகளை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து சுத்தப்படுத்தும் பணியில் ஆண்டுதோறும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருவதுடன், கடல் வளங்களை மீட்டெடுப்பதற்கான உலகளாவிய முன்னெடுப்புகளுக்கும் வித்திட்டு வருகின்றன.

கடற்கரை மாசுபாட்டின் ஆபத்துகள் மற்றும் புள்ளிவிவரங்கள்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன. இதில் பெரும்பாலானவை ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும். இந்த கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மீன்கள், திமிங்கலங்கள், கடல் ஆமைகள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்கள் உணவாக நினைத்து உட்கொண்டு இறக்கின்றன. மேலும், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கடல் உணவு சங்கிலி மூலம் மனித உடலையும் அடைந்து பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.
இந்த தினத்தின் முக்கிய குறிக்கோள்கள்
கடற்கரைகளை பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளில் இருந்து முழுமையாக சுத்தம் செய்வது இதன் முதன்மை நோக்கம் ஆகும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெருங்கடல் மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், எதிர்காலத்தில் கழிவுகளை கடலில் வீசுவதை தவிர்க்க வைப்பதும் இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். மேலும், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் இந்த நாள் உறுதுணையாக இருக்கிறது.
உலகளவில் மேற்கொள்ளப்படும் களப்பணிகள் மற்றும் செயல்பாடுகள்
இந்த தினத்தில் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஒன்று கூடி கடற்கரைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழி பைகள், பழைய வலைகள் மற்றும் பிற கழிவுகளை சேகரித்து அகற்றுவர். சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. எந்தெந்த வகையான கழிவுகள் அதிகமாக காணப்படுகின்றன என்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு எதிர்கால கொள்கை முடிவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
நம் ஒவ்வொருவரின் கடமை மற்றும் பங்களிப்பு
கடற்கரைகளுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். குப்பைகளை உரிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். கடற்கரை தூய்மைப் பணிகளில் நாமும் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும். நமது எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான பெருங்கடல்களையும் வளமான கடல் வளங்களையும் விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவரின் வரலாற்று கடமையாகும்.
நிலவளம் ரெங்கராஜன்
