தமிழ் குரல் / AI Voice
நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் டிஜிட்டல் மயமாகிவிட்டதாகக் கூறப்படும் காலகட்டத்தில், தேநீர் கடையில் பத்தாயிரம் ரூபாய் வரை டீ குடிப்பது முதல் பல்பொருள் அங்காடிகளில் பல்லாயிரக்கணக்கில் பொருட்கள் வாங்குவது வரை எல்லாவற்றிற்கும் யுபிஐ செயலிகளையே நம்பியிருக்கிறோம். சில்லறை தட்டுப்பாடு என்ற பெயரில் பல ஆண்டுகளாக நம்மை வாட்டி வதைத்த பிரச்சனைக்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு தற்காலிக வரப்பிரசாதமாகத் தோன்றியது என்னவோ உண்மைதான். ஆனால், இந்த எளிமையின் பின்னணியில் சாமானிய மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் எஜமானர்களின் சூழ்ச்சித் திட்டம் எப்படி அரங்கேறப் போகிறது என்பதற்கான யதார்த்தப் பேருண்மையை இப்போது நாம் உற்று நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆரம்பக் கட்டத்தில் அரசாங்கமும் பெரு நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பத்தை மக்களிடம் திணிப்பதற்காக என்னென்ன நாடகங்களை அரங்கேற்றின என்பதை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வங்கியின் உள்ளே சென்று வரிசையில் நிற்பது, அதற்கான போக்குவரத்துச் செலவு, காகிதச் செலவு மற்றும் வங்கி ஊழியர்களின் பணி நேரம் என அத்தனையும் மிச்சமாகும் என்று மேடைகளில் ஏப்பம் விட்டார்கள். முதலில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்று ஆசை காட்டிவிட்டு, பழக்கம் வழக்கத்திற்கு வந்ததும் ஐந்து முறைக்கு மேல் கட்டணம், கார்டு பராமரிப்புக் கட்டணம் என்று பொதுமக்களின் பணத்தை அபேஸ் செய்யும் திருட்டுத்தனத்தை அரங்கேற்றினர். அதே நாடகம்தான் இப்போது யுபிஐ பரிவர்த்தனைகளிலும் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

காகித நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு, அவற்றை நாடு முழுவதும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான வாகனச் செலவு, சேதமடைந்த நோட்டுகளுக்கு மாற்றாக மீண்டும் அச்சடிக்கும் செலவு என அனைத்தையும் பட்டியலிட்டு யுபிஐ முறையைத் தூக்கிப் பிடித்தார்கள். இப்போது கோடிக்கணக்கான மக்கள் இந்த வலையில் முழுமையாக விழுந்துவிட்ட நிலையில், வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு மட்டும் தனியாகக் கட்டணம் வசூலிக்கும் நயவஞ்சக வேலையை கையில் எடுத்துள்ளனர். இரண்டாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வர்த்தக யுபிஐ பரிவர்த்தனைக்கு பூஜ்ஜியம் புள்ளி நான்கு சதவீதம் கட்டணம் என்றால், பத்தாயிரத்திற்கு நாற்பது ரூபாய் என்று கணக்கு நீளும். பொதுமக்கள் கணக்கில் இப்போது கட்டணம் இல்லை என்று உதட்டளவில் சொன்னாலும், வியாபாரிகள் மீது விழும் இந்தச் சுமை எந்த நாளிலும் சாமானியனின் முதுகெலும்பை ஒடிக்கும் வகையில் திணிக்கப்படலாம் என்பதுதான் வரலாறு காட்டும் அனுபவ உண்மை.
ஒரு பரிவர்த்தனை நடப்பதற்குப் பின்னால் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, வங்கி சர்வர்கள், செயலிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற மாபெரும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் உள்ளன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், ஆரம்பத்தில் குறைவான பரிவர்த்தனைகள் நடந்தபோது இருந்த அதே செலவுதான், கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இப்போதைய காலகட்டத்திலும் இருக்கிறதா? டீ குடிக்கும் பதினைந்து ரூபாய் பரிவர்த்தனை கூட இன்று ஜெட் வேகத்தில் எகிறிவிட்ட நிலையில், ஒரு பரிவர்த்தனைக்கான தொழில்நுட்பச் செலவு வெறும் ஐம்பது பைசாவுக்கும் குறைவாகவே குறைந்துவிட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் வாராக் கடன்களைப் பெரு நிறுவன முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்யும் வங்கிகளால், இந்தத் தேசியத் தொழில்நுட்பக் கட்டமைப்பின் சில ஆயிரம் கோடி ரூபாய் செலவைச் சகித்துக்கொள்ள முடியாதா? மத்திய அரசால் இதற்கு மானியம் அளித்துத் தாங்க முடியாதா என்ன?
அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கினால் இந்தச் சிறிய கட்டணம் பல மடங்காக உயர்த்தப்பட்டு எட்டு ரூபாய் முதல் முந்நூறு ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்தத் கூடுதல் சுமையை ஏற்கும் வியாபாரிகள் என்ன செய்வார்கள்? தனக்கு வரும் இழப்பைத் தன் பாக்கெட்டிலிருந்தா தருவான்? எல்லாவற்றையும் வாடிக்கையாளர்களின் தலைமீதுதான் கட்டுவான். உதாரணமாக, டீசல் விலை ஏழு ரூபாய் உயர்ந்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களின் இஷ்டத்திற்குப் பத்து ரூபாய் டிக்கெட்டை இருபது ரூபாயாக உயர்த்துவதைப் போல, வியாபாரிகளும் இந்த யுபிஐ கட்டணத்தைச் பல மடங்கு பெரிதாக்கிப் பொதுமக்களிடம் கறக்கத் தொடங்குவார்கள்.
இதன் நேரடித் தாக்கம் எங்கு போய் முடியும் என்றால், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயரும். விலை உயர்வைத் தாங்க முடியாத பொதுமக்கள் மீண்டும் பழையபடி ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கே செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஏற்கனவே சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ரொக்கப் பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி என்று குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் சாமானியனைத் திவாலாக்கும் இந்த யுபிஐ கட்டணக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் நடுத்தர மக்களின் தலையில்தான் போய் விடியும்.
ஏழுமலை வெங்கடேசன்
