நம் நாட்டில் ஆண்டுதோறும் வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு எகிறுது!
உலக சுகாதார நிறுவனம் பருவநிலை மாற்றங்களுக்கும் பட்டினிக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை ஆராய்ந்து, பருவநிலை மாற்றங்களின் விளைவால் நிகழக்கூடியவற்றை கூறியிருக்கிறது.
1. 2050 ஆம் ஆண்டு பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதm அதிகரிக்கும்.
2. 2050 ஆம் ஆண்டளவில் 24 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்படுவர்.
3. 2025 ஆம் ஆண்டளவில் ஆப்பிரிக்காவின் பயிடக்கூடிய நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி பயிரிடமுடியாத நிலமாக மாறும்.
4. 2030 ஆம் ஆண்டளவில் உணவுப்பொருட்களின் விலைகள் 60 சதவீதம் அளவில் அதிகரிக்கும்.

இந்த சேதியை விட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்புள்ள 6.70 கோடி டன் உணவு பொருட்கள் வீணாகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது நம்மவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உணவு தானிய பொருட்கள் மிகப்பெரிய அளவில் வீணாகிறது என்பது வருடம் தோறும் தெரிய வருவதுதான். அண்மையில் மத்திய அரசு நடத்திய ஆய்வில், ஒவ்வொரு ஆண்டும் 6.70 கோடி டன் உணவு தானிய பொருட்கள் வீணாகின்றன என்று தெரியவந்துள்ளது. இதன் மொத்த அளவானது இங்கிலாந்து நாட்டில் ஓராண்டில் உற்பத்தியாகும் சராசரியை விட அதிகமாகும். இதை கொண்டு பீகார் போன்ற பெரிய மாநிலங்களுக்கு ஓராண்டுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வீணாகும் உணவு தானிய பொருட்களின் மதிப்பு ரூ.92 ஆயிரம் கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
அதிலும் மானிய விலையில் 60 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் வழியாக மத்திய அரசு வழங்கும் உணவு தானிய பொருட்களில் சுமார் 3ல் 2 பங்கு அளவுக்கு வீணாகிறது என்றும் கூறப்படுகிறது.பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவைதான் உணவு வீக்கத்தில் முக்கியத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாடு முழுவதும் நவீன முறையிலான சேமிப்பு நிலையங்கள் இல்லாததும் இது போன்ற உணவு பொருட்கள் வீணாவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது என்றும் சொல்லப்படுகிறது.
தனிப்பட்ட வகையில் நிலங்களில் இருந்து அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்லும் வழியில் 22 லட்சம் டன் தக்காளி, 50 லட்சம் முட்டைகள் ஆகியவை போதிய கையாளும் முறை, சேமிப்பு வசதியில்லாத காரணத்தால் உடைந்தும், அழுகியும் வீணாகின்றன.
நாட்டில் உற்பத்தி, சேமித்து வைத்தல், பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், அவற்றை முறையாக கையாளுதல் ஆகிய சங்கிலியில் போதிய அளவுக்கு தொடர்பு இல்லாமல் தேக்க நிலை உள்ளதும் இது போன்ற உற்பத்தி பொருட்கள் வீணாவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


