June 2, 2023

விடுதலை பாகம் 1 – விமர்சனம்!

ராணுவம் என்று ஒன்று இருப்பதாலேயே நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், போலீஸ் என்ற அழைப்பு இருப்பதாலேயே ஊர் பாதுகாப்பாக இருப்பதாகவும் நம்பும் அப்பாவிகள் நாம். அதனாலேயே போலீஸ் சம்பந்தப்பட்ட படங்களுக்கு என்றுமே ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை ரசிகர்கள் கூட்டம் உண்டு. அத்தகைய படங்கள் போலீஸை உயர்த்திப் பிடிப்பது போலிருந்தாலும், அராஜகம் செய்வது போலிருந்தாலும் உண்மையில் நடந்த குற்றங்களை இன்ஸ்பிரஷன் ஆக எடுத்து கதை பண்ணப்பட்ட படங்கள் ஏராளம். அப்படி நிஜ சம்பவங்களை கையில் எடுக்கக் காரணம் என்னவென்றால் பொதுவாக உண்மைக்கென ஓர் உள்ளொளி உண்டு. அதை எப்படி மறைத்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் மனித உரிமை மீறல்கள் முழுமையாக நடைபெற்ற வாச்சாந்தி வன்கொடுமை என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ நாவலை அடிப்படையாக கொண்டு விடுதலைப் படத்தை உருவாக்கி சகல தரப்பையும் கவர்ந்து முயன்று ஓரளவு ஜெயித்தும் இருக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன்.

அதாவது நம் நாட்டிலுள்ள மலை கிராமம் ஒன்றில் சுரங்கம் அமைத்து பாதை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்கிறது. ஆனால் அந்த சுரங்கத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து மக்கள் படை என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் மூலம் அரசாங்கத்தை சுரங்கம் அமைக்க விடாமல் தடுக்கின்றனர். இப்படைக்கு தலைவரே வாத்தியாரென்ற நாமகரணத்தில் வரும் விஜய்சேதுபதி. இவர்களை ஒழித்துக் கட்ட நினைக்கும் அரசாங்கம் சிறப்பு காவல் படை ஒன்றை உருவாக்கி அந்த கிராமத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

இச்சூழலில் இந்த சிறப்பு காவல் படையில் டிரைவராக வந்து வேலைக்குச் சேருகிறார் கான்ஸ்டபிள் சூரி. ஹீரோவாக வந்த இடத்தில் இவருக்கும் மலைவாழ் பெண்மணியான பவானி ஸ்ரீ க்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் மக்கள் படையை சேர்ந்தவர்களும் விஜய் சேதுபதியும் எங்கே தங்கி இருக்கின்றனர் என்ற ரகசியம் இவருக்கு தெரிய வருகிறது. அந்த நேரம் சிறப்பு காவல் படையினர் விஜய் சேதுபதியை பிடிக்கும் முயற்சியில் அந்த மொத்த கிராமத்தில் இருக்கும் மக்களைப் பிடித்து வைத்துக்கொண்டு அவர்களைத் தங்கள் கஸ்டடியில் வைத்து சித்திரவதை செய்கின்றனர். அதில் சூரியின் காதலியும் மாட்டிக் கொள்கிறார். இதை அடுத்து தன் அன்பு காதலி மற்றும் ஊர்ப் பெண்களைக் காப்பாற்ற நினைக்கும் சூரி, விஜய் சேதுபதியை காட்டிக் கொடுக்க முடிவெடுக்கிறார். இதையடுத்து நடப்பதே விடுதலை பட முதல் பாகத்தின் கதை.

குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் சூரி. சும்மா சிரிக்க வைத்துவிட்டுப் போகிற ஆள் மட்டும் இல்லை, நன்றாக நடித்து உங்களைக் கலங்க வைத்து கவரவும் தெரியும் என்று காட்டிவிட்டார் சூரி. அதிலும் பிரம்மாண்ட காட்சிகள் எதுவும் இல்லாமல், ரத கஜ துரத பதாதி பந்தா ஏதும் இல்லாமல், பஞ்ச் வசனம் எதுவும் பேசாமல், அதிர வைக்கும் தீம் மியூசிக் பேக் ரவுண்ட் கூட இல்லாமல் ஒரு நடிகன் மாஸ் நாயகான மாறி அவ்வப்போது அப்ளாஸ் எல்லாம் வாங்குகிறார்.

சூரியின் காதலியாக வரும் பவானிஶ்ரீ எளிமையான, இனிமையான அழகு.காட்டுமல்லியாய் மலர்ந்து மணம் பரப்புகிறார்.பாட்டி இறக்கும் போது தரும் நடிப்பு மிக சிறப்பு.போலீசாக இருந்து கொண்டு வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார் நடிகர் சேத்தன். காண்போர் காட்டமாகும்படியான இவரது நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. வாத்தியார் வாத்தியார் என்று படம் முழுக்க அவரைப் பற்றிப் பேசினாலும் படத்தில் கொஞ்ச நேரமே வருகிறார் விஜய்சேதுபதி. அதிலும் தன் முத்திரையைப் பதித்து சில காட்சிகளே வந்தாலும் தியேட்டரில் விசில்களைப் பறக்கச் செய்கிறார். . டிஎஸ்பியாக நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் வழக்கம் போல் தனது ட்ரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இவருடன் மேல் அதிகாரியாக நடித்திருக்கும் அதுவும் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் நிறைவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார். முக்கிய ரோக்களில் வரும் நடிகர்கள் அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்து விட்டார்கள்

வேல்ராஜின் கேமிராவே ஒரு கதையை சொல்வது போல இருக்கிறது. அவரின் ஒளிப்பதிவில் காடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும், போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்டு மல்லி பாடலிலும், பின்னணி இசையிலும் இளையராஜா மீண்டும் தான் ஒரு ராஜாதான் என்பதை நிரூபித்து உள்ளார்.

மலைவாழ்மக்கள் மீது அரசு ஊழியகளான காவல்துறை செய்யும் அட்டூழியங்கள், அதிலும் சிறப்பு காவல் படை என்ற பெயரில் உலாவரும் போலீஸ் அதிகாரிகள் செய்யும் கொடுமைகளை அதை எதிர்க்கும் போராளிகளின் வலிகளை மீண்டும் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகக் காட்டி வழக்கம் போல் ஸ்கோர் செய்திருக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன்..ஆனால் இதிலும் அதிக அளவு வன்முறை, ரத்தம், கெட்டவார்த்தை என்று தெளித்து கொஞ்சம் முகம் சுழிக்க வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்

மொத்தத்தில் இந்த விடுதலை பாகம் 1 – தனியாக காண வேண்டிய சினிமா

மார்க் 3.75/5