June 1, 2023

கலாஷேத்ரா பற்றிய வீரதீர பாராக்கிரம கதை இதோ!

சென்னை திருவான்மியூரில் பல நூறு ஏக்கரில் ஆல மர விழுகளுக்கு இடையில் பரந்து விரிந்து கிடக்கிறது ‘கலாஷேத்ரா’ (கலைக்கோவில்). “நான் கலாஷேத்ரா மாணவி” என்று சொல்லிக் கொள்வதில் இளம் பெண்களுக்கு ஒரு கவுரவம் இருந்தது. கலாஷேத்ராவின் சீருடையான வண்ணக்கதர்ச்சேலை அணிந்து இரு சக்கர வாகனத்தில் ஒய்யாரமாக செல்லும் இளம் பெண்களை காணும்போது பெண்களுக்கே கூட பொறாமை வரும்.

கலாஷேத்ரா பற்றி வீரதீர பாராக்கிரம கதைகள் பல சொல்லுவார்கள். ஆனால் நிஜம் என்ன தெரியுமா? நம் தமிழ்குலப் பெண்களின் ஒரு பிரிவினரை கோவில்களில், ‘தேவதாசி’களாக்கி, ‘இறைப் பணி’ என்ற பெயரில் சமூகத்தின் பெரிய மனிதர்களுக்கு பாலியல் பணி செய்ய வைத்துவிட்டு, அவர்களிடமிருந்த ‘சதிராட்டம்’ என்கிற நடனத்தை அபகரித்து, அதற்கு ‘பரதநாட்டியம்’ என்று பெயரிட்டு சொந்தமாக்கிக் கொண்ட ஒரு மிகச் சிறுபான்மைக் கூட்டத்தின் சதியில் உருவானதே ‘கலாஷேத்ரா’.

ருக்மணி என்கிற மதுரை பெண்மணி, ஜார்ஜ் அருண்டேல் என்கிற ஆங்கிலேயரை தனது 16வது வயதில் மணந்து, வெளிநாடெல்லாம் சுற்றுப் பயணம் செய்து, சென்னையில் வாழ்ந்த ‘மயிலாப்பூர் கவுரி அம்மாள்’ என்கிற தேவதாசியிடம் ‘சதிராட்டம்’ கற்று, அதில் சில மாற்றங்களைச் செய்து பரதநாட்டியமாக்கி அதை கற்றுக் கொடுக்க அவர் கட்டிய கலைக்கோவிலே கலாஷேத்ரா. வளைத்துப் போடப்பட்ட பல நூறு ஏக்கர் நிலம், மத்திய அரசு வாரி வழங்கும் நிதி, பிரதமர், ஜனாதிபதி என முக்கிய பிரமுகர்களின் வருகை இவற்றைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக காமஷேத்திரம் நடத்தி வந்திருக்கும் பகீர் உண்மைகள் இப்போது வெளிவந்திருக்கிறது.

உயர்ந்த மதில் சுவர்களுக்கு உள்ளே நடந்த பல அக்கிரமங்கள் இப்போது எட்டு திசையெங்கும் எகிறிக் கிளம்பியிருக்கிறது. இது பெரிய புயலை கிளப்பும், மாற்றத்தை ஏற்படுத்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றெல்லாம் பகல் கனவு காண வேண்டாம். சில, பல விசாரணைகள், சி.பி.ஐக்கு மாற்றம், சம்பந்தபட்டவர்கள் சஸ்பெண்ட், விசாரணை குழு அமைப்பு இது எல்லாம் நடக்கும். ஆனால் இவற்றால் எதுவுமே நடக்காது. அதிக பட்சம் 6 மாதத்தில் எல்லாம் மறக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு கலாஷேத்ரா மீண்டும் தன் கலைச்சேவையை புதிய உற்சாகத்துடன் தொடங்கும். காரணம் அதன் சக்தி அப்படி.

நமது கோரிக்கை எல்லாம் நம் இனத்தினரிடையே உருவாகி உள்ள புது பணக்காரர்களுக்கும், உயர்நடுத்தர மக்களுக்கும்தான்… உண்மையிலே உங்கள் மகள்களுக்கு நாட்டியத்தில் ஆர்வம் இருக்குமானால் அவளை முறைப்படி நாட்டியம் கற்கச் செய்து அந்த கலையின் மூலம் மக்களுக்கு நல்ல விஷயத்தை கற்றுக் கொடுக்கச் செய்யுங்கள் தப்பில்லை. பல சமூக மாற்றங்களுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் நாட்டியக் கலை பயன்பட்டிருப்பது வரலாறு.

அதை விடுத்து, நாட்டியம் கற்பதை ஒரு சமூக அந்தஸ்தாக கருதிக்கொண்டு, மகளுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்து, சில லட்சம் செலவில் ஒரு அரங்கேற்ற விழாவை நடத்திவிடுவதன் மூலம் சாதிக்கப்போவது என்ன?. அரங்கேற்றம் வரை வந்து, அதன்பிறகு மேடையே ஏறாத லட்சக்கணக்கான பெண்களில் ஒருவராக உங்கள் மகளும் மாற வேண்டுமா?.

உங்களின் இந்த சிந்தனைதான் கலாஷேத்ராக்களை நல்ல கல்விக்கூடங்களாக மாற்றும்.

மீரான் முகமது