தக் லைஃப் மொழி விவகாரமும் ,அலச வேண்டிய பின்னணிகளும்!

தக் லைஃப் பட விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் போகிற போக்கில், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகன் சிவராஜ் குமாரை பார்த்து,” நீங்களும் நாங்களும் சகோதரர்கள் தானே. நாமெல்லாம் ஒரே குடும்பம். தமிழிலிருந்து வந்ததுதானே கன்னடம்” என்று சொல்லிவிட்டார்.இதுதான் இப்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.இந்த இடத்தில் இரண்டு விஷயங்களை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. சிறிய பட்ஜெட்டிற்கான பட விழாவில் ஏதோ ஒரு துண்டு நடிகர் பேசியிருந்தால் அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.இரண்டாவது, பேசுபவர் கமலே என்றாலும் அந்த மேடையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இல்லையென்றால் லேசாக கடந்து போய் இருப்பார்கள்.சில நூறு கோடிகளை கொட்டி எடுத்திருக்கும் பிரமாண்டமான படம், பேசியவர் உலக நாயகன் என்றழைக்கப்படும் கமல், அவரின் பேச்சை காதில் வாங்கிக் கொண்டு மேடையில் இருந்தவர்வேறு கன்னட திரை உலக பிதாமகன் குடும்பத்து வாரிசு.. இந்த மூன்று விஷயங்கள் போதாதா?இதற்கென்றே காத்துக் கொண்டிருந்த சில கன்னட அமைப்புகள் முதலில் எதிர்ப்பு என்று தலையை தூக்க, இதுதான் அரசியல் செய்ய அருமையான சமயம் என்று அரசியல்வாதிகளும் கோதாவில் இறங்கி பின்தொடர, கடைசியில் தக் லைஃப் படம் கர்நாடகாவில் திரையிட முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.
தக்லைஃப் படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கேட்டு கமலஹாசன் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றம் சென்றது.வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பிரசன்னா, கமலஹாசன் தரப்பை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்து விட்டார்.மன்னிப்பு கேட்டுவிட்டு பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிய நீதிபதி, 75 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதிரி பேசிய ராஜாஜி மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்துக்கொண்டதாக மேற்கோளும் காட்டினார். மன்னிப்பு கேட்க அவகாசம் அளிப்பதாகவும் கூறினார்.ஆனால் கமலஹாசன் தரப்பு எதற்குமே மசியவில்லை. “ஒரு உண்மையை தவறாக புரிந்து கொண்டதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?” என்ற நிலையில் உறுதியாய் நின்றுவிட்டார் கமல்.இந்த இடத்தில் நீதிமன்ற விவகாரத்தை கொஞ்சம் அலசி பார்க்க வேண்டும்.
நீதிமன்றம் என்பது வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்கிற இடம் தானே தவிர, மன்னிப்பு கேட்கச் சொல்லி அதனை வழங்குகிற வழங்குகிற இடம் அல்ல.”கமல் என்ன மொழி வல்லுனரா?” என்று நீதிபதி கேட்கிறார். சரி சட்டம் படித்த நீதிபதிகள் எல்லா துறை தொடர்பான வழக்குகளுக்கும் தீர்ப்பு சொல்லுகிறார்கள்.அப்படியானால் அவர்கள் சட்டத்தை தாண்டி எல்லா துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களா?சந்தேகம் என்று வரும்போது சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் உதவியை கேட்டுப் பெற்றுதானே அவர்கள் வழக்குகளை மேற்கொண்டு நகர்த்துகிறார்கள்?ஆண்டாண்டு காலமாய் கற்பிக்கப்படும் கல்வி அடிப்படையில் தானே இன்று எல்லோரும் உலக விஷயத்தை அலசி கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் நேரடியாக பார்த்துவிட்டா பேசுகிறோம்?
நீதிமன்றமும் சரி, கர்நாடகாவில் உள்ள பல்வேறு தரப்பினரும் சரி, கமல் என்ன ஆதாரத்தை வைத்து பேசினார் என்று கேட்கிறார்கள்..இதைத்தான் நாமும் கேட்கிறோம், என்ன ஆதாரத்தை வைத்துக்கொண்டு அவர்கள் மறுக்கிறார்கள்.நீங்கள் பேசியது தப்பு. அவ்வளவும் பொய் என்று சொல்வதற்கான ஆதாரம் இதோ என்று சொல்வது தானே அறிவுள்ளவர்களின் நிலைப்பாடு.வடமாநிலங்களை பொறுத்தவரை, தென்னிந்தியர்களை ஒட்டுமொத்தமாக மெட்ராஸ் வாலாக்கள் என்று தான் அழைப்பார்கள்.மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து அரசியல் ரீதியாக பல பகுதிகள் பிரிந்து போய் எஞ்சி நிற்பது தான், தமிழ்நாடு என்கிற மாநிலம். இன்றைய கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம் அவ்வளவு ஏன் ஓடிசா மாநிலத்தின் பகுதிகள் கூட மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தன.அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சென்னையில்தான் சட்டசபை. பல்கலைக்கழக செனட் சபை, இன்றைய ராஜாஜி ஹால் கட்டிடம் உட்பட வெவ்வேறு இடங்களில் சட்டசபை கூட்டங்கள் மாறி மாறி நடந்தன. அப்போதைய மற்ற மொழி மக்கள் பிரதிநிதிகள், அவர்களுக்குரிய மொழிவாரி மாநிலங்கள் உருவான பின் சென்னைக்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கோ இடம் பெயர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.எதிலிருந்து எது பிரிந்தது என்ற பிரச்சனை இப்போது சினிமா உலகம் மூலம் எழுந்துள்ளதால் இதை சினிமா மூலமாகவே பின்னோக்கிப் பார்ப்போம்.
இந்திய திரைப்பட வரலாற்றைப் பொறுத்தவரை, கடந்த நூற்றாண்டு தொடக்கத்தில் பட தயாரிப்புகள் என்றால் எப்போதும் பரபரப்பாக அதிக அளவில் நடைபெற்ற இடங்கள் அப்போதைய பம்பாயும் மெட்ராஸும்தான். இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ள இந்தி திரைப்படங்களை தயாரிக்க, பம்பாய். இப்போது மும்பை. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழி திரைப்படங்களை தயாரிக்க, மெட்ராஸ். இப்போதைய சென்னை. சுதந்திரம் அடைவதற்கு முன்பே, சென்னையில்தான் எவ்வளவு ஸ்டுடியோக்கள்! எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய ஜெமினி ஸ்டுடியோ, ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய ஏவிஎம் ஸ்டுடியோ போன்றவற்றை விடுங்கள்..ஆந்திராவைச் சேர்ந்த நாகி ரெட்டி, விஜயா வாகினி ஸ்டுடியோவை தொடங்கியது, ஆந்திர ஜாம்பவான் எல். வி.பிரசாத் ஸ்டுடியோவை தொடங்கியது சென்னையில்தான்.
வெளிப்புற படப்பிடிப்புகள் அவ்வளவாய் எடுக்கப்படாத காலகட்டங்களில் பெரும்பாலான காட்சிகள் ஸ்டுடியோக்களில்தான் படமாக்கப்பட்டன. நடிகர் நடிகையர் பணிபுரிகிற வ அலுவலக இடம் என்றால் அது ஸ்டூடியோக்கள்தான். இதனால் தொழில் ரீதியாக மாதத்தில் பெரும்பாலான நாட்கள் முன்னணி நடிகர் நடிகையர் சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டிய நிலை. இதனை தவிர்க்க முடியாததாலேயே பலரும் சென்னையில் நிரந்தரமாக தங்க வீடு வாங்க ஆரம்பித்தார்கள்.மலையாள பிரேம் நசீர், கன்னட ராஜ்குமார், ஆந்திர என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் போன்றவர்களாகட்டும் ஆந்திரத்து அஞ்சலிதேவி, சாவித்திரி, கேரளத்து பத்மினி, கே.ஆர்.விஜயா போன்றவர்கள் ஆகட்டும், அத்தனை பேருக்கும் கோடம்பாக்கம் பக்கம் பங்களாக்கள் உண்டு.நடிகர்- நடிகயர் மட்டுமின்றி, அந்த காலத்து தென்னிந்திய மொழி முன்னணி பட தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர் மற்றும் பாடகியாக விளங்கிய அத்தனை பேருக்கும், சென்னையில் வீடுகள் உண்டு.இப்போதைய மலையாள ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்றவர்களுக்குகூட எப்போதோ வாங்கி போட்ட பங்களாக்கள் இன்றும் சென்னையில் உண்டு.
ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், போன்ற டாப் ஸ்டார்களுக்கு, ஆந்திராவின் ஹைதராபாத்திலோ கேரளத்து திருவனந்தபுரத்திலோ கர்நாடகாவின் பெங்களூரிலோ வீடுகள் இல்லை. காரணம் தொழில் ரீதியாக அங்கே போய் தங்கி இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.மற்ற தென்னிந்திய மாநிலங்களில் பட தயாரிப்புக்கான ஸ்டூடியோக்கள், தொழில்நுட்ப கூடங்கள் ஆரம்பிக்கப் பட்டு வளர ஆரம்பித்த பிறகுதான்,மற்ற மொழிக்காரர்களுக்கு தமிழ்நாட்டின் அவசியம் குறைய ஆரம்பித்தது. ஆனால் மற்ற தென்னிந்திய மாநிலங்களை நம்பி என்றைக்கும் தமிழகம் இருந்ததில்லை.தென்னிந்திய சேனல்களில் தெலுங்கோ மலையாளமோ கன்னடமோ இசை நிகழ்ச்சிகள் நடந்தால் அதில், கண்டிப்பாக தமிழ் பாடல்கள் உண்டு. அந்த அளவுக்கு தமிழ் பாடல்கள் தென்னிந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.காரணம் தமிழ் பாடல்களின் அர்த்தம் எல்லோருக்குமே ஓரளவு புரியும். ஆனால் தமிழ் சேனல்களில் மற்ற மொழி பாடல்களை விரும்பி கேட்க மாட்டார்கள். பெரிய அளவில் ரசிகர்களும் கிடையாது.இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தோண்டி பின்னோக்கி போக ஆரம்பித்தால், கமல் உண்மையை பேசுகிறார் என்பது தெள்ளத்தெளிவாக புரியவரும், நம்மவர்களுக்கு அல்ல, கமலை எதிர்ப்பவர்களுக்கு..