‘குயிலி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்!

‘குயிலி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்!

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார். விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ”முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,” என்றார்.

நடிகை தாஷ்மிகா பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் ப. முருகசாமி பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை பற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில் இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளிய மக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்க முடிந்தது. இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஜூ ஸ்மித் பேசுகையில்,”முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நான் இசைத்துறையில் பயணிக்க விரும்புகிறேன் என்ற என் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து இதுவரை எதையும் அவர்கள் கேட்டதில்லை. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளரான அருண்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை தொலைபேசி மூலம் பேசும்போது நலம் விசாரித்து நான் படம் தயாரித்தால் நீ தான் இசையமைப்பாளர் என உற்சாகப்படுத்துவார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தயாரிப்பாளரானதும் அழைப்பு விடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் வழங்கினார். சினிமாவில் இருந்து தோல்வி அடைந்தவர்களை விட, சினிமாவை விட்டுவிட்டு சென்று தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். என்னை சினிமாவில் அழைத்து வந்தவர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. அவர்கள் சினிமாவிலும் இல்லை. வேறு துறைக்கு சென்று விட்டார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் அருண்குமார் மட்டுமே எனக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பளித்தார். இப்படத்திற்கு இசையமைக்கும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. மறக்க முடியாததாகவும் இருந்தது. இயக்குநர் முருகசாமி, ‘குயிலி’ கமர்ஷியல் திரைப்படம் அல்ல,vகருத்து சொல்லும் படம். அதற்கேற்ற வகையில் இசையமைக்க வேண்டும் என சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அவருக்கு பிடித்தது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்து பாடல்களும் மதுவை குடிக்காதே என்பதை சொல்லும் விதமாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களை நான்கு புதுமுக பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்,” என்றார்.

நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ”சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன். இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்திற்கு ‘குயிலி’ என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார். இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ”இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒரு திரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன். வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும் என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்கு வழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.

அண்ணன் ராஜன் பேசும்போது, ‘தேசிய அளவில் மதுவை ஒழிக்க வேண்டும்’ என்றும் , இது தொடர்பாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும் குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம் தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்பு கொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக் கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில் முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சான கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே?

இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல ஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடைய வருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப் போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்கு இருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பல மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப் பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது. இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மது ஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளைய தலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களை பராமரிக்கவும்… பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்து படுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அது எவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாக சென்று சந்தித்தால்தான் உணர முடியும்.
இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும் ஒன்று.

இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்த அவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிக இன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும் கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும் தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலை எழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.

‘குயிலி’ படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல் விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல் தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இது என்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும் உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்,’ என்றார்.

பாடலாசிரியர் வேட்டவலம் த. ராமமூர்த்தி பேசுகையில் ”நான் இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி.மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்… நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்… மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,”என்றார்.

error: Content is protected !!