தக் லைஃப் – விமர்சனம்!

தக் லைஃப் – விமர்சனம்!

ன்னும் சில வாரங்களில் ராஜ்யசபா எம்பியாகப் போகும் கமல்ஹாசனிடன் ‘மணிரத்னமும் நீங்களும் இணைவதற்கு ஏன் இத்தனை தாமதம் ?என்ற கேள்விக்கு, “இத்தனை ஆண்டுகளாக நானும் மணிரத்னமும் இணையாமல் இருந்தது எங்கள் தவறு தான். நாங்கள் இருவரும் இணைய நினைத்தாலும் அது எப்படிப்பட்ட படமாக வரும். எல்லோருடைய கண்களும் எங்கள் மீது தான் இருக்கும். அதனால் நாங்கள் பயந்தோம். நாயகன் மாதிரியான கிளாசிக் திரைப்படத்தை கொடுத்துவிட்டு அதனை தாண்டி ஒரு படைப்பை செய்ய வேண்டும்.எனவே மக்கள் ‘நாயகனை’ மறந்துவிடட்டும், அதன் பிறகு இன்னொரு படத்தை உருவாக்கலாம் என நினைத்தோம். ஆனால் மக்கள் நாயகனை மறக்கவில்லை. மறக்க மறுக்கிறார்கள். நாங்கள் இணைவதற்கு தாமதமானதற்கு அதுவும் ஒரு காரணம்,” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.. அவர் குறிப்பிட்ட தாமதம் இன்னும் நீடித்திருக்கலாம் என்று சொல்ல வைத்து விட்ட படமே ‘தக் லைஃப்’. அதிலும் டைம் மேகசின் வியந்து பாராட்டிய கூட்டணி கொடுத்த ‘நாயகன்’ படத்தை ரி ரிலீஸ் செய்திருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகனும் முணுமுணுத்தப்படி தியேட்டரை விட்டு வருவதுதான் பெரும் சோகம்.

அதாவது சக்திவேல் (கமல்ஹாசன்) ஒரு தாதா. அவருக்கு எதிராக மற்றொரு தாதா கூட்டம். இந்த இரண்டு கூட்டத்துக்கும் இடையே நடக்கும் மோதலால் சிறுவயதிலேயே தனது தந்தையை இழக்கிறார் அமரன் ( எஸ் டி ஆர்). ஆனாலும் ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து கமல் தப்பிக்க உதவுகிறான் அந்த சிறுவன் சிம்பு. அதற்கு நன்றிக் கடனாக அமரனைத் தன் மகனாகவே கருதி வளர்க்கிறார் சக்திவேல். ஒரு கட்டத்தில் தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய மாபெரும் அடி தடி வெட்டு கொலை பொன்ற பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்சக்தி. இதற்கிடையில் தன் அப்பாவை சக்திதான் சுட்டுக் கொன்றார் என்று தகவல் கிடைக்கவே அவரை தீர்த்தக் கட்ட அமரன் திட்டமிடுகிறான். அப்படி திட்டமிட்டிருக்கும் விஷயம் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் சக்திக்கு தெரிந்து விடுகிறது. அதை அடுத்து இருவருக்கும் இடையே நேரடி மோதலை உருவாகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் கதை.

டைரக்டர் மணிரத்னத்துடன் நீண்ட காலத்திற்குப் பிறகு கரம் கோர்த்திருப்பதால் நாயகன் கமலை அல்லது அதை விட எக்ஸ்ட்ரானரியான கேரக்டரில் ஆண்டவரை பார்க்கலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஒவ்வொருக்கும் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது இந்த ராயர் சக்திவேல் ரோல். உலக நாயகன தனக்கே உரிய வசன உச்சரிப்பு மற்றும் எஃபெக்டிவான எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களை கமல்ஹாசன் திருப்திப்படுத்துவதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். ஆனாலும் இப் படத்தில் அவருக்கான களம் சரியாக அமையவில்லை என்பதை அப்பட்டமாக தெரிவதுதான் சோகம். கமல்ஹாசனால் வளர்க்கப்படும் சிலம்பரசனுக்கு போட்டி போட்டு நடிக்க கூடிய சான்ஸ் அமையவில்லை. ஆனாலும் ஆக்‌ஷன், திரிஷாவுடன் ஒன்சைடு ரொமான்ஸ் என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அதிலும் இனிமே நாந்தான் சக்திவேல் என்ற இறுமாப்பை வெளிப்படுத்தும் போது ‘பலே’ சொல்ல வைத்து விடுகிறார்.

தொடக்கத்தில் 15 நிமிட காட்சிகள் அட்டகாசமாக இருந்தது. ஒரு மேன்சனில் நடக்கும் துப்பாக்கிச் சூடு காட்சிகளும், அதனை படமாக்கப்பட்ட விதமும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வயது கமலை காட்டிய ஒவ்வொரு காட்சிகளும் கைத்தட்டல்களை அள்ளியது. குறிப்பிட்டு சொல்வதானால் கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் பிரமிக்க வைத்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் ரசிக்க வைத்தது.

முதல் பாதியில் சிம்புவிற்கும் கமலுக்கும் உள்ள பாண்டிங் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றது.கமலின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி தனது அனுபவத்தை இந்த படத்தில் சிறப்பாக காட்டியுள்ளார். திரிஷாவிற்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்றாலும், அதாவது ஒரு அனாதை பெண்ணாக வந்து முதலில் கமலுக்கு ஜோடியாகி பின்னர் சிம்புவால் கபளிகரம் செய்யப்பட்ட கேரக்டர் என்றாலும் அந்த ரோலின் வெயிட் தெரிந்து தன் பங்களிப்பை சரியாக வழங்கியுள்ளார். நாசர், ஜோஜு ஜார்ஜ், வையாபுரி ஆகியோர் கிடைத்த கதாபாத்திரங்களில் தனித்து நிற்கின்றனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் தன் அடைமொழியான புயல் பர்ஃபெக்டாக கிளப்பி இருக்கிறார். ஜிங்குஜா ஒரு பாடலே போதும் இன்னொரு பாடல் வேண்டும் என்று கேட்க முடியாத அளவிற்கு வெளுத்துக்கட்டியிருக்கிறார். இதில் கமல் எஸ் டி ஆர் ஆடும்போது ரசிகர்கள் கரகோஷம் அரங்கைபிளக்கிறது. ஆனால் “முத்த மழை இங்கு கொட்டித்தீராதோ” பாடலில் பலே சொல்ல தகுதியானது சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்றும் முன்னொரு கால நாயகன் படத்தின் ”தென்பாண்டி சீமையிலே” பாட்டு ரிப்பீட் ஆவது போல் இதில் ” அஞ்சு வண்ண பூவே” பாட்டு அடுதடுத்து ஒலிக்கிறது..ஆனால் டபுள் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்த படத்திற்காக போட்ட பாடல்களில் பாதி பாட்டு இடம் பெறவே இல்லை என்பதே பெரும் பலவீனம்.

கேமராமேன் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு ஹாலிவுட் படங்களுக்கு இணையாக காட்சிகளை பதிவு செய்திருக்கிறது. அதிலும் ஹிமாலயா செல்லும் காட்சி ஒவ்வொரு ரசிகனையும் அலாக்காக தூக்கிச் சென்று பனி சிகரங்களுக்கு இடையே இறக்கி விட்டு விடுகிறது.

கிளாசிக் டைரக்டர் என்று பேர் எடுத்த மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். ஆரம்ப பேராவில் சொன்னது போல் இப்படி ஒரு கதை எழுதவா இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தார்கள்? என்று முணு முணுக்க வைத்து விட்டார்கள். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் மணிரத்னம், தாதாக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் துரோகங்களையும் மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தாலும், அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரிவது போல் அமைத்து சொதப்பி விட்டார் மணி சார். அதிலும் காணாமல் போன தங்கை போலீஸ் ஆபிசர் ஒருவரை மேரேஜ் செய்து கொள்வது, வளர்த்தவர் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணை காதலிக்கும் மகன் என்பதெல்லாம் மணிசாருக்கே புதுசாக தோன்றி இருப்பதுதான் பெரும் பலவீனம்

மொத்தத்தில் கோலிவுட்டின் ஜாம்பவான்களின் ரசிகர்கள் மட்டுமே உடனடியாக வெள்ளித்திரையில் காண வேண்டிய படமிது- ஏனையோர் ஓடிடி அல்லது சின்னத்திரையில்- அதுவும் நேரம் கிடைத்தால் பார்க்கத் தகுந்த சினிமா; அவ்வளவே

மார்க்- 2.75/5

error: Content is protected !!