தமிழக கட்சிகளுக்கும், புலிகளுக்குமான தொடர்பு – கொஞ்சம் அலசல்!

தமிழக கட்சிகளுக்கும், புலிகளுக்குமான தொடர்பு – கொஞ்சம் அலசல்!

ண்டன் பாலசிங்கம் தனது “விடுதலை” நூலில் தமிழக அரசியலுக்குள் ஈழப்போராட்டமும், அதன் தாக்கமும் எப்படி நுழைந்தது என்று மிகத்தெளிவாக எந்த சார்பு நிலையும் இல்லாமல் எழுதி இருக்கிறார்.கலைஞரும், எம்ஜியாரும் தனித்தனியாக ஈழப்போராட்டக் குழுக்களை அழைத்துப் பேசுவதற்கு முயற்சி செய்தது, கெடுவாய்ப்பாக பிரபாகரனின் குழு கலைஞர் ஒருங்கிணைத்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.எம்.ஜி.ஆருடன் விடுதலைப்புலிகள் அமைப்பு காட்டிய நெருக்கம், முதன்முதலாக எம்.ஜி.ஆர் மிகப்பெரிய தொகையை அவர்களுக்கு ஆயுதம் வாங்குவதற்காக வழங்கியது.

அப்போது துவங்கி 1985 வரை தமிழகத்தில் புலிகள் இயக்கம் வெவ்வேறு தளங்களில் தங்கள் விடுதலைப் போராட்டத்தின் தரவுகளை முன்வைத்து கண்காட்சிகள் நடத்துவது, காணொளிக் காட்சிகள் நடத்துவது என்று மிகத் தீவிரமாக செயல்பட்டார்கள்.திராவிட இயக்கங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் மனசாட்சியாக இருந்த எல்லா அரசியல் அமைப்புகளும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக, ஈழப்போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க தங்கள் முழு அர்ப்பணிப்பையும் தந்தார்கள்.ஒவ்வொரு திராவிட இயக்கத் தொண்டரும், திராவிட இயக்கக் குடும்பங்களும் அப்போது புலிகளோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்தார்கள்.

திமுக, அதிமுக என்கிற வேறுபாடுகளை எல்லாம் கடந்து திராவிட அரசியல் இயக்கங்கள் ஈழ விடுதலைக்கான முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தார்கள். சிவகங்கை மாவட்டத்தில் பல கிராமங்களுக்கும் சென்று அங்கு சிறு கொட்டகைகள் அமைத்து, நிழற்படங்களை காட்சிக்கு வைத்து நன்கொடை வசூல் செய்வார்கள் புலிகளின் தமிழக முகவர்கள், நானே இந்த நிகழ்வுகளுக்கு சென்றிருக்கிறேன்.

வெளியே சென்று இரவுகளில் தங்குவதற்கு அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்கிற பெற்றோர் இல்லை என்றாலும், இந்த நிகழ்வுகளுக்காக நான் முழு சுதந்திரத்துடன் சென்று தங்க முடிந்தது, இரண்டு தலைமுறை திராவிட இயக்கச் சிந்தனைகள் கொண்ட குடும்பம் என்பதால் தான் இத்தகைய நிகழ்வுகள் உணர்ச்சிகரமான ஒப்புதலைப் பெற்றுக் கொடுத்தது.திமுகவைச் சேர்ந்த குடும்பங்களைப் போல உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைந்து புலிகளையும், ஈழ விடுதலையையும் ஆதரித்து களப்பணி ஆற்றியவர் எவருமில்லை, அதிமுகவினரும் எம்.ஜி.ஆர் காலம் வரை ஈழப் போராட்டத்தில் இதயபூர்வமாக இணைந்திருந்தார்கள்.திராவிட இயக்கங்களை வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இன்று “மாவீரர் நாள்” என்ற பெயரில் திரள் நிதி திருடும் சீமானும், அவரது தம்பிகளும் கட்சி துவங்கிய நாளில் இருந்து இன்றுவரை ஏதிலிகளாக தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கோ, புலத்தில் கடுமையான நெருக்கடிகளோடு வாழும் உறவுகளுக்கோ, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நன்மைக்கோ ஏதாவது செய்திருக்கிறார்களா என்றால் அதற்கான விடை “ஒரு ஆணியும் பிடுங்கவில்லை என்பதுதான்”.

மாவீரர் நாளுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு தொடர்புமில்லை (திரள் நிதி வசூலிப்பதைத் தவிர), வறுமையிலும், கடும் துன்பத்திலும் வாழும் ஏதிலித் தமிழ் மக்களுக்கு ஒரு நாளில், ஒரு தேநீர் கூட வாங்கிக் கொடுத்திராத சீமான்… !ஒட்டுமொத்த ஈழப் போராட்டமும் தனது கைகளில் ஒப்படைக்கப்பட்டதாக கதை சொல்லி தமிழக இளைஞர்களை திராவிட இயக்கத்துக்கு எதிராக மடைமாற்றித் தான் வயிறு வளர்க்கலாம் என்றுதான் திராவிட எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுத்தார்.

அதே நேரத்தில் திராவிட இயக்கங்கள் ஏதிலிகள் மேம்பாட்டுக்காக எவ்வளவோ விஷயங்களை செய்திருக்கின்றன, கல்வி, வேலைவாய்ப்புகளில் கூட ஈழ மக்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்கி இருக்கின்றன.இந்தப் போலி தமிழ் தேசிய மூடர் கூடாரத்தைக் கலைக்கவும், ஒரு அரசியல் சமநிலையை உருவாக்கவும் தன்னியல்பாகத் தோன்றியது தான் தமிழக வெற்றிக் கழகம் என்று நினைக்கிறேன். ஏனெனில், மாநாடு துவங்கி சில நாட்களுக்குள் பல ரசிகக் கண்மணிகள் சீமான் கூடாரத்தில் இருந்து விஜய் கூடாரத்துக்குத் தாவி விட்டார்கள்.

பல்கலைக்கழக சுழற்சி முறையிலான நடப்பு வாக்கு வங்கியில் பாதி காணாமல் போனது கண்டு பதைபதைத்துப் போய் அண்ணன் சீமான் மராட்டிய வந்தேறி, கன்னட போயேறி என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிய அதே ரஜினிகாந்திடம் சென்று தஞ்சம் புகுந்து கொண்டார்.இவ்வளவுதான் சீமானின் தமிழ் தேசிய அரசியல், சீமானின் வசூல் கம்பெனி அநேகமாக 2026 தேர்தலோடு முடிவுக்கு வரும் என்றுதான் தோன்றுகிறது. பாவம் தம்பிகள், அரசியலைப் புரிந்து கொண்டு தப்பிப் பிழைப்பார்கள் என்றால் நலம்.

கை.அறிவழகன்

error: Content is protected !!