வாஷிங்டன் போஸ்ட்: ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவு – ஜனநாயகத்திற்கு நேர்ந்த பேரிடர்!

வாஷிங்டன் போஸ்ட்: ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவு – ஜனநாயகத்திற்கு நேர்ந்த பேரிடர்!

ரு தேசத்தின் பொதுவாழ்வு என்பது வெறும் அரசியல் நிகழ்வுகள் மட்டுமல்ல, மக்கள் ஒருவருக்கொருவர் எப்படிப் பேசிக்கொள்கிறார்கள், உண்மைகளை எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. ஆனால் இன்று அமெரிக்காவின் இதயமான வாஷிங்டன் டி.சி-யில், அதிகாரத்தைக் கேள்வி கேட்க வேண்டிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) சிதைந்து வருவது ஒரு பத்திரிகைச் செய்தி மட்டுமல்ல, அது அந்த நாட்டு ஜனநாயகத்திற்கு நேர்ந்திருக்கும் ஒரு பேரிடர். 1960-களில் தொடங்கி 2020-கள் வரை இதழியல் உலகின் சிகரமாக விளங்கிய ஒரு நிறுவனம், இன்று தன் அடையாளத்தைத் தொலைத்து நிற்பது வருத்தமான உண்மை.

இதழியல் எனும் உயிர்நாடி

ஜனநாயகத்தில் பத்திரிகை என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல; அது ஒரு நாட்டின் ‘பாதுகாப்பு அமைப்பு’ (Survival System) போன்றது. அரசு உண்மையைச் சொல்லத் தயங்கும் போதோ அல்லது பென்டகன் தகவல்களை மறைக்கும் போதோ, களத்தில் நின்று உண்மையை வெளிக்கொண்டு வருவது தொழில்முறை பத்திரிகையாளர்கள்தான். இதற்காக உயிரைப் பணையம் வைத்து நெருக்கடியான இடங்களுக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்து லேப்டாப்பில் வேலை செய்பவர்கள் அல்ல; செய்தி அறைகளில் (Newsrooms) மூத்த ஜர்னலிஸ்டுகளிடம் பாடம் கற்று வளர்ந்தவர்கள். அந்தப் பாரம்பரியம் இப்போது அங்கே அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது.

பெசோஸின் கையில் பொம்மையானதா?

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், இந்த 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப பத்திரிகையை மாற்றுகிறேன் என்று கூறி, அதன் வேர்களையே அறுத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஆட்குறைப்பு, முக்கியப் பகுதிகள் முடக்கம் என அவர் எடுக்கும் முடிவுகள் ஒரு நிறுவனத்தைச் சீரமைப்பது போல் இல்லை, மாறாக அதைச் சவக்குழிக்கு அனுப்புவது போல் இருக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்திடம் சலுகைகளைப் பெறுவதற்காகத் தனது கௌரவத்தை பெசோஸ் விட்டுக்கொடுக்கிறாரோ என்ற அச்சம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜெபர்சனின் கனவும் இன்றைய நிழலும்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்சன் அன்று சொன்னார்: “பத்திரிகைகள் இல்லாத அரசாங்கமா அல்லது அரசாங்கம் இல்லாத பத்திரிகைகளா என என்னிடம் கேட்டால், நான் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன்.” ஏனென்றால், அரசு எப்போதும் அதிகாரத்தைத் தன் வசம் குவிக்கவே நினைக்கும்; அதைத் தடுத்து நிறுத்தும் ஒரே சக்தி விழிப்புணர்வுள்ள பத்திரிகைகள்தான். மக்கள் சரியான தகவல்களைப் பெற்றால் மட்டுமே அவர்களால் சுயசார்புடன் ஆள முடியும். இல்லையெனில் ஆட்சியாளர்கள் ‘ஓநாய்களாக’ மாறிவிடுவார்கள்.

ஒரு ‘பாவச் செயல்’ (A Kind of Sin)

இணையத்தின் வருகையும், தொழில்நுட்ப மாற்றங்களும் பத்திரிகைத் தொழிலைச் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், ஊடகத்துறை உயர் அதிகாரிகள் இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அதன் அழிவைப் பற்றிப் பேசுவதையே காதலிப்பவர்களாக (Doom loop) மாறிவிட்டார்கள். குறிப்பாக, அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்ட மீறல்கள் மலிந்து வரும் இந்தச் சூழலில், தலைநகரின் பிரதான நாளிதழ் முடங்குவது என்பது ஒரு வரலாற்றுப் பிழை மட்டுமல்ல, அது ஒரு பாவச் செயல். வரலாறு இதை அவ்வளவு எளிதில் மன்னிக்காது.

நம்பகமான தகவல்கள் கிடைக்காத ஒரு தேசம், ஏதோ ஒரு பெரும் விபத்து நிகழும்போது தற்காத்துக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும். வாஷிங்டன் போஸ்டின் வீழ்ச்சி என்பது அந்தப் பத்திரிகைக்குச் சொந்தமான பெசோஸின் நற்பெயருக்கு விழுந்த அடி மட்டுமல்ல, அமெரிக்காவின் ஆன்மாவுக்கே ஏற்பட்ட பலவீனம்.

பெக்கி நூனன்

Related Posts

error: Content is protected !!